”தமிழகம் முழுவதும் பாரத்நெட் திட்டத்துக்காக ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரி, முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தொலைத் தொடர்பு துறை, தொழில் வளர்ச்சி, உள் வர்த்தகத் துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கம் சார்பாக புகார்கள் அனுப்பப்பட்டன.
இதன் அமைப்பாளர் ஜெயராமன் அனுப்பிய புகாரில், ”டெண்டர் எடுப்பதற்காக வருவாய் மற்றும் அனுபவத்தை அதிகரித்து விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையால் 5 பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. இந்த புதிய விதிமுறையால் அரசு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் டெண்டர் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு ஃபைபர் கார்ப்பரேஷன் மூலம் தமிழக அரசு விட்ட ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள் வர்த்தகத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசின் கீழ் வரும் இந்த துறை கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், டெண்டர் விதிமுறைகளை மாற்றி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அதுவரை டெண்டரை நிறுத்தி வைக்குமாறும் கூறியிருந்தது.
இது குறித்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறும்போது, ”இந்த பிரச்சினையை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கொரோனா பாதிப்பால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது” என்று தெரிவித்துள்ளார்.