நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை – படித்து பகிர்விர் !
இந்திராவின் ஆரம்ப கால ஆட்சி
1966ஆம் ஆண்டு, இந்திரா காந்தி பதவி ஏற்றபோது பல பிரச்சினைகள் தீர்வுக்குக்காகக் காத்திருந்தன, மேலும் பல பிரச்சினைகள் உருவாகின. பஞ்சாப் அஸ்ஸாம் போன்ற சில மாநிலங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தவிர, நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. உணவுப் பொருட்களின் விலையேற்றம்,பொது அமைதியை அச்சுறுத்தியது. நாட்டில் பொதுவாகப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்தது. தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து குறைந்தது.
நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பொய்த்ததால், விவசாய உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் உயர்ந்தது. உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் பஞ்சம் பயமுறுத்திக் கொண்டிருந்தது.பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து உறவாடிக் கொண்டிருந்ததால், இந்தியா தன்னுடைய ராணுவச் செலவைக் குறைக்க முடியாமல், பெரும் தொகையைப் பாதுகாப்புக்காகச் செலவிட நேர்ந்தது. ஐந்தாண்டுத் திட்டச் செலவினங்களாலும், பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் நாடு நிதி நெருக்கடியில் இருந்தது.
உணவுப் பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.சர்வதேசச் சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஆகையால், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்று இந்திய நாணய மதிப்பை 30 சதவிகிதம் குறைக்க இந்திரா காந்தி ஒப்புக்கொள்ள நேர்ந்தது. நாட்டின் எல்லா எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சியின் ஒரு பகுதியும் இந்த நடவடிக்கையை கடுமையாகக் குறை கூறின.
அமெரிக்காவின் பி.எல். 480 திட்டத்தின்கீழ் இந்தியா உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ததால் அந்த நாட்டின் தயவை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தது. இந்த நிலையில், இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு அச்சுறுத்தல் வரும் என்று உள்நாட்டில் பல எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின.
இதுபோன்ற பல அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளின் பயமுறுத்தல்களுக்கிடையேதான் இந்திரா காந்தி தன்னுடைய பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப் பிரச்சாரத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
இந்த நிலையில், இந்திரா காந்தி பஞ்சாப் பிரச்சினைக்குச் சுமுகமான ஒரு தீர்வு கண்டார். நாகாலாந்துக்கு சுயாட்சி அதிகாரம் கொடுத்தார். அந்நிய நாடுகளின் உதவியுடன் உடனடி உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். அதேநேரத்தில், உணவுப் பற்றாக்குறையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் பசுமைப்புரட்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டினார். உணவு உற்பத்தியில் நாடு தன்நிறைவு பெறுவதில்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அரசியல் சுதந்திரமும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற உண்மையை வற்புறுத்தினார்.
கடுமையான வறட்சி நிலவிய காலத்திலும் பட்டினிச் சாவு இல்லை என்று சொல்லும் வகையில் உணவுப் பொருட்கள் தேவையான பகுதிகளுக்கு உடனடியாகச் சென்றடைவதில் அக்கறை காட்டினார். மாநிலங்களில் பொதுவிநியோக முறையைச் சீராக்கினார். உணவுப் பொருளை விநியோகிப்பதில் எல்லா மாநிலங்களின் தேவையைக் கவனத்தில் கொண்டுசெயல்பட்டார்.
பதவிக்கு வந்த சில நாட்களில் இந்திய நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுத்தார். நேரு உருவாக்கிய அணிசேராக் கொள்கையைப் பழுதுபடாமல் பாதுகாப்பதில் அக்கறை காட்டினார். அயல்நாட்டுக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்படுத்திய நெருக்குதலுக்குப் பணிய மறுத்தார். அமெரிக்கா, வியட்நாம் மீது குண்டு வீசியதை இந்திரா காந்தி கடுமையாகக் கண்டித்தார். எல்லா நாடுகளுடனும் நட்புறவை வளர்ப்பதில் அவர் முனைப்போடு
செயல்பட்டார்.
எகிப்து நாட்டின் நாஸருடனும், யுகோஸ்லேவியாவின் மார்ஷல் டிட்டோவுடனும் நல்லுறவை வளர்த்தார். சோவியத் நாட்டுடன் உறுதியான நல்லுறவை வளர்த்தார். சீனாவுடனும் உறவைப் புதுப்பிக்க இந்திரா காந்தி முயற்சி செய்தார். பாகிஸ்தானுடன் உறவு மேம்படுவது இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பினார்.
தவிர்க்க முடியாதநிலையில் சர்வதேசச் சந்தையில் இந்திய நாணய மதிப்பைக் குறைக்க இந்திரா காந்தி ஒப்புக்கொண்டதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் உயரும் என்ற நம்பிக்கையில் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றுமதி உயரவில்லை. இறக்குமதியையும் குறைக்க முடியவில்லை.
வகுப்புவாத இயக்கமான பாரதீய ஜன சங்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கோரிக்கையுடன் பெரிய இயக்கத்தை நடத்தியது. வரவிருக்கும் 1967ஆம் ஆண்டு தேர்தலை கவனத்தில்கொண்டு தொடங்கப்பட்ட அந்த இயக்கம், வன்முறையில் ஈடுபட்டது. அவ்வியக்கம் தில்லி நகரத்தில் பல ஆயிரக்கணக்கான சாமியார்களைக் கொண்டுவந்து ஊர்வலம் நடத்தியது. அந்த ஊர்வலத்தில் திட்டமிட்ட முறையில் வன்முறை வெடித்தது. அமைதியை நிலைநாட்ட காவல்துறை எடுத்த நடவடிக்கையில் சில உயிர்கள் பலியாயின. தேர்தலுக்குப்பின் அந்த இயக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது.
ஆனால், இந்திர காந்திக்குப் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக்குள் தேவையான ஆதரவு இல்லை. பல உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அமைச்சரவையிலும் அவருக்கு முழுமையான செல்வாக்கு இருப்பதாகச் சொல்லமுடியாத நிலை தொடர்ந்தது.
கட்சி தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள பழைய தலைவர்களின் செல்வாக்கில் இருந்தது. “சிண்டிகேட்’ என்று பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்ட சில தலைவர்களின் கூட்டமைப்பு, தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள இந்திரா காந்திமீது நெருக்குதல் கொடுத்துவந்தது. அதனால் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாதநிலை தொடர்ந்தது.
பொதுவாக, இந்தக் காலகட்டத்தில்தான் பாராளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறையத் தொடங்கியது. தனிநபர் விமர்சனங்கள் தலைதூக்கியதோடு, குறிப்பாக இந்திரா காந்தி கடுமையான, தரம் இல்லாத தனிநபர் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. சோஷலிஸ்ட்களும் வகுப்புவாத பிற்போக்கு கட்சிகளும் அவரை பெண் என்றும் பாராமல் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யத் தொடங்கின. இத்தகைய கடுமையான விமர்சனங்களை இந்திரா காந்தி தமக்கே உரிய துணிவோடு சந்திக்கத் தயாரானார்.
இந்த நிலையில், 1967ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. கட்சியில் நேரு போன்ற தேசிய தலைவர் இல்லாத நிலையில், சந்திக்கும் தேர்தலாக அது அமைந்தது. 1964க்குப்பிறகு தொடர்ந்து கட்சி பலவீனப்பட்டுக் கொண்டிருந்தது. சிண்டிகேட்டின் தலையீட்டால் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் கட்சியைவிட்டு வெளியேறினர். பல மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் தனிக்கட்சி தொடங்கினார்கள். பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து காங்கிரசுக்குப் பெரிய அளவில் சவாலாகத் தேர்தலில் போட்டியிட்டன.
1967ஆம் ஆண்டு தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்
1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி குறைந்த பெரும்பான்மையுடன்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கட்சியின் ஒவ்வொரு பாராளுமன்ற நடவடிக்கைக்கும் இதர கட்சிகளிடம் ஆதரவு கேட்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இடதுசாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விலைவாசி ஏற்றம் ஆகிய பிரச்சினைகளில் அரசாங்கத்தின்மீது பலவகை நெருக்குதல்களை கொண்டுவந்தனர். கிராமப் புறங்களில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. திட்டச் செலவை சமாளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்காவின் உதவி பாதியாகக் குறைந்தது. நகர மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் புதிய புதிய வழிமுறைகளில் தங்கள் அதிருப்தியை வெளியிடத் தொடங்கினர். அரசியல் சட்டத்திற்கு விரோதமான வழிமுறைகளில் சில தீவிரவாதிகள் கிராமப்புறங்களில் அணி திரண்டு செயல்படத் தொடங்கினார்கள். “நக்ஸலைட்’ என்ற அந்த அமைப்பு பல மாநிலங்களில் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கத் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் சூழலுக்குத் தக்கவகையில் மாற்றுத் திட்டங்களை விவாதிக்கத் தொடங்கியது. காமராஜருக்குப் பிறகு கட்சியின் அகில இந்தியத் தலைவராக நிஜலிங்கப்பா தேர்ந்தெடுக்கபட்டார். கட்சியின் ஸ்தாபன அமைப்புகளின் மீது சிண்டிகேட்டின் பிடி மேலும் இறுகியது. இந்திரா காந்திக்குக் கட்சியின் ஸ்தாபன அமைப்பில் செல்வாக்கு மிகக் குறைவாகவே இருந்தது.கட்சியில் பிளவு ஏற்படாமல் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தார்.
ஆனால், பிரதமர் என்ற முறையில் தனக்கு உள்ள அதிகாரத்தில் எந்த வகையான சமரசத்துக்கும் அவர் தயாராக இல்லை. இந்த நிலையில், மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தார்.
நாட்டில் உள்ள அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனத்தில்கொண்டு நீண்ட விவாதத்துக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பத்து அம்ச வேலைத் திட்டத்தைத் தயாரித்தது. 1967ஆம் ஆண்டு மே மாதத்தில் தயாரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் விவாததுக்கு வைக்கப்பட்ட அந்த வேலைத் திட்டம், பொதுவாக நாட்டுமக்களுடைய பல கோரிக்கைகளைச் சரியான முறையில் கவனத்தில் கொண்டிருந்தது என்று கூறவேண்டும்.
நாட்டில் உள்ள வங்கிகள்மீது ஒரு வகையான சமூகக் கட்டுப்பாடு, பொது இன்ஷ்யூரன்ஸ் துறையை நாட்டுடைமையாக்குவது, ஏற்றுமதி இறக்குமதி, வர்த்தகத்தை அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நகர மக்கள் வருமானத்துக்கு உச்சவரம்பு கொண்டு வருவது, ஏகபோகக் கம்பெனிகள்மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடு ஆகிய பல திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள வலதுசாரிகள், குறிப்பாக காமராஜ் தவிர்த்த சிண்டிகேட் குழுவினர் இந்தத் திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கத் தொடங்கினார்கள். இதற்கு மாறாகத் திட்டச் செலவை குறைப்பது, தனியார் துறைக்கு ஊக்கம் கொடுத்தல், பொதுத்துறை முதலீட்டைக் கைவிடுதல், கிளர்ச்சி செய்யும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஆகிய பல கருத்துக்களை முன்வைத்தார்கள்.
“இளம் துருக்கியர்’ என்று கூறப்பட்ட காங்கிரசின் இடதுசாரியினர், இந்தக் கருத்துகளுக்கு எதிராகவும் பத்து அம்சத் திட்டத்துக்கு ஆதரவாகவும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மொரார்ஜி தேசாயை நாட்டில் உள்ள முதலாளிகளின் கைப்பாவை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். கட்சி எந்த நேரமும் பிளவைச் சந்திக்க நேரும் என்ற அரசியல் வட்டாரப் பேச்சு, மற்றும் பத்திரிகைச் செய்திகள், மாற்றுக் கட்சியினரின் விமர்சனங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்தக் கட்டத்தில்தான் ஜனாதிபதி ஜாகீர் உசேன் 1969ஆம் ஆண்டு மே மாதம் காலமானார். புதிய ஜனாதிபதியை உடனடியாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக்கு வந்தது. கட்சி பிளவைச் சந்திக்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருந்த இந்த நேரத்தில் பல வகையான அரசியல் ஆருடம் கணிக்கபட்டது.
ஜனாதிபதியின் அதிகாரம் இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டபோதிலும், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பிளவுபடும் கட்டத்தில், அவருடைய அதிகாரமும் தீர்மானமும் பெரும் முக்கியத்துவம் பெறும். அதனால் அன்றைய நிலையில், புதிய ஜனாதிபதியைக்கொண்டு பிரதம மந்திரியைப் பதவி இறக்கம் செய்யமுடியும் என்ற சூழல் ஏற்பட்டது. நிலைமையை நன்கு உணர்ந்திருந்த இந்திரா காந்தி தனக்கு ஆதரவான ஒருவரைப் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க முயன்றார்.
1969ஆம் ஆண்டு ஜூலை மாதம், பெங்களூரில் கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு, இந்திரா காந்தியின் விருப்பத்துக்கு மாறாகப் புதிய ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக சஞ்சீவிரெட்டியை நியமனம் செய்தது. சஞ்சீவிரெட்டி, சிண்டிகேட் குழுவின்முக்கிய உறுப்பினர். அதனால் இந்திரா காந்தி தன் நிலைமையை உறுதிசெய்து கொள்ளத் தொடங்கினார்.
தில்லி திரும்பியதும், நிதி அமைச்சர் பொறுப்பை மொரார்ஜி தேசாயிடமிருந்து தானே எடுத்துக்கொண்டார். வங்கிகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டுக்கு அவர் ஆதரவாக இல்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது ஏற்கெனவே இருந்தது. அடுத்த சில நாட்களில் குடியரசுத் தலைவர் உத்தரவுடன் அவசரச் சட்டத்தின்மூலம் 14 வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். அடுத்த கட்டமாக மன்னர்களின் மான்யத்தையும் ஒழிக்கப் போவதாக அறிவித்தார்.
பிரதமருடைய இந்த நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. வங்கிகளின் நாட்டுடைமை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகத் தொழிற் சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் வலியுறுத்தி வந்த கோரிக்கைகள். கடந்த காலத்தில் பல கட்சிகள் இந்த கோரிக்கையுடன் நீண்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. பல மாநிலக் கட்சிகளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதுபோன்ற சில திட்டங்களை அறிவித்த பிறகு, இந்திரா காந்தியின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. அதே நேரத்தில், நாடு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கத் தயாரானது.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா வலதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் வகுப்புவாதக் கட்சியான ஜன சங்கத்தின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தம்மைப் பதவியிலிருந்து இறக்க மற்ற கட்சிகளுடன் கூட்டுச்சதி நடப்பதாகக் குற்றம் சாட்டிய இந்திரா காந்தி, எதிர் நடவடிக்கைக்குத் தயாரானார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மனச்சாட்சி அடிப்படையில் வாக்கு அளிக்கவேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பினார்.
பாராளுமன்றத்தில் உள்ள சில எதிர்க்கட்சிகளும், பல மாநிலக் கட்சிகளும் துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியை ஆதரித்தன. இந்திரா காந்தியின் ஆதரவாளர்களும் அவரை ஆதரித்து பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார்கள். இறுதியாகக் கடுமையான போட்டியில் வி.வி.கிரி நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் பிளவு உறுதியானது.
பிரதமர் இந்திரா காந்தி கட்சியில் நடக்கும் போராட்டம், தனிநபர் மோதல் இல்லை என்றும், இருவேறு கருத்துபோக்குகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் என்றார். கட்சி சமூக மாற்றத்துக்கான கருவியாக இருக்கவேண்டும். ஏழை எளிய மக்களின் வாழ்வில் வளம்செய்யும் செயல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இடையூறாக இருக்கும் சக்திகளைக் களைந்தெறிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மாறாக, இந்திரா காந்தி சர்வாதிகாரப் பாணியில் நாட்டை வழிநடத்த முயற்சி செய்வதாகவும், சோவியத் நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நாட்டை மாற்ற முயற்சிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானது என்றும் பிரச்சாரம் செய்தனர்.
1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இந்திரா காந்தியைக் கட்சியைவிட்டு வெளியேற்றியது.
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிரதமரை ஆதரிக்கும் உறுப்பினர்கள் 220 பேராகவும், கட்சியின் மூத்த தலைவர்களின் குழுவை ஆதரிக்கும் உறுப்பினர்கள் 68 பேராகவும் இருந்தது. பாராளுமன்றத்தில் தன் பெரும்பான்மையைக் காப்பாற்றிக்கொண்ட பிரதமர், ஒரு மாற்று காங்கிரசை அறிவித்தார். அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் (ஆர்) என்றும், மூத்த தலைவர்களின் தலைமையில் தொடர்ந்த குழு காங்கிரஸ் (ஓ) என்றும் அறிவிக்கப்பட்டது. 700 உறுப்பினர்கள் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பிரதமர் தலைமையை 446 பேர் ஒப்புக்கொண்டனர்.
கட்சிக்குள் நடைபெற்ற போராட்டத்தில் இந்திரா காந்தி வெற்றிபெற்று, தன் நிலையை உறுதிசெய்து கொண்டபோதும், பாராளுமன்றத்தில் அவருடைய நிலை, மற்ற கட்சிகளின் நெருக்குதலுக்கு மத்தியில் செயல்பட வேண்டியநிலை தொடர்ந்தது. இருந்தபோதிலும், அவர் பல தீவிர செயல் திட்டங்களை அமல்படுத்தினார். 1970 பிப்ரவரி மாதம், வங்கிகள் தேசியமயமாக்கிய திட்டத்தைச் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கொடுக்கப்பட்ட நஷ்டஈடு குறைவானது என்று குறிப்பிட்டுத் திட்டத்தைத் தள்ளுபடி செய்தது.
கம்பெனி நிர்வாகத்தில் சில முதலாளிகளுக்கு இருந்த உரிமைகளை நீக்கும் வகையில், மானேஜிங் ஏஜென்ஸி முறையை ரத்துசெய்து இந்திரா காந்தி உத்தரவு பிறப்பித்தார். ஏகபோகக் கம்பெனிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக்கொண்டு சில குடும்பங்கள் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முறையைக் கடினமாக்கினார். காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கு நிலச்சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வற்புறுத்தினார். தாமதப்படுத்தப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைவிட இருமடங்கு தொகை அதற்காக ஒதுக்கப்பட்டது.
கிராமப்புற மக்களும் நகர்ப்புறத்துத் தொழிலாளர்களும், பொதுவாக எளிய மக்கள் பிரிவினரும் உற்சாகத்துடன் பிரதமருக்கு ஆதரவு கொடுத்தபோதும், பாராளுமன்றத்தில் சிறுபான்மை அரசாகவே தொடர்ந்தது. மற்ற சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்றால்மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.
மன்னர் மான்ய ஒழிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு வெளிவந்தது. இக்கடினமான சூழலில் பதவியில் நீடிப்பதால் எந்தப் பலனும் ஏற்பாடாது என்பதைக் கருத்தில்கொண்டு பிரதமர் இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார்.
ஆகையால், பாராளுமன்றத்துக்கு ஒரு ஆண்டு முன்னதாகத் தேர்தல் நடக்க வேண்டியதாயிற்று. 1971ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவினரும் மற்ற கட்சிகளுடன் அணிசேர்ந்து போட்டியிட்டனர். மூத்த தலைவர்களைக்கொண்ட காங்கிரஸ் (ஒ), சுதந்திரா கட்சி, பாரதீய ஜன சங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியில் போட்டியிட்டன. பிரதமர் தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
பிரதமர் பதவியிலிருந்து இந்திராவை இறக்குவதை மட்டுமே கொள்கையாகக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், “இந்திராவை விரட்டுவோம்’ என்ற கோஷத்துடன் அவர்மீது கடுமையான தனிநபர் விமர்சனத்துடன் தேர்தலைச் சந்தித்தனர். இந்திரா காந்தி, “வறுமையை விரட்டுவோம்’ என்ற கோஷத்துடனும் அதற்கான வேலைத் திட்டத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, பிரதமர், பொதுத்துறையைப் பலப்படுத்துவது, நிலச்சீர்திருத்தம், நகர்ப்புற வருமானத்துக்கு உச்சவரம்பு, பெருகி வரும் ஏற்றத்தாழ்வைக் குறைக்கத் திட்டங்கள் ஆகிய பல கருத்துக்களை மக்கள் முன்வைத்தார்.
சமூக மாற்றத்துக்கான கருவியாக அரசியலைப் பயன்படுத்தி, சமூகத்தின்மீது ஆதிக்கம் செய்யும் சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமைந்தது. நகர்ப்புரத்து மத்தியதர வர்க்கமும், ஏழை மக்களும், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களும், பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இந்திரா காந்திக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தனர்.
ஆகையால், பிப்ரவரி 1971 தேர்தல், இந்திரா காந்திக்கு மகத்தான வெற்றியைத் தேடி தந்தது. 352 தொகுதிகளில், காங்கிரஸ் (ஆர்) வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணிக் கட்சிகளும் பெரும் அளவில் வெற்றிபெற்றன. மீண்டும் இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சியைத் தொடர்ந்தார்.