இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 121 மீன்பிடி படகுகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யலாம் அல்லது
உடைத்து அப்புறப்படுத்தலாம் என்று யாழ்பாணம் நீதிமன்றம் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 முதல் 2018 வரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை திரும்பப் பெறுவதற்கான எந்த முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடவில்லை. கடந்த
ஐந்து ஆண்டுகளில் மட்டும் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 1300 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து ஏறத்தாழ 350-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி படகுகள் விரைவில் அழிக்கப்படுவதற்கும், ஏலத்தில்
விற்பனை செய்வதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக ரூபாய் 25 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான மதிப்புள்ள படகுகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டால் ரூபாய் 3 முதல் 4 லட்சம் தான் விலையாக
கிடைக்கும். இதனால் மீனவர்கள் கடுமையான இழப்பை சந்திக்க வேண்டி வரும். இந்த ஏல விற்பனைக்கு மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது ஏற்கனவே மீன்பிடி தொழிலினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிற மீனவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து படகுகளை மீட்டு கொண்டு வர முடியாது என மத்திய, மாநில அரசுகள் கருதுவது தங்களது இயலாமையையே காட்டுகிறது. இதற்கு ஈடுகட்டுகிற வகையில் மீன்பிடி
படகுகளை இழக்கும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு புதிய படகை முழு மானியத்தில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கப்படாமல், நீதிமன்ற ஆணையின் மூலம் தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடி
படகுகளை இழந்ததற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கு தான்.
எனவே, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு பேரிழப்பு ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து
தீர்வு காண தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இலங்கை தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், தாக்குதலுக்கு உள்ளான போதும் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை
எல்லையை மீறி விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதேபோல, இலங்கை அரசை ஏதோ ஒருவகையில் மத்திய அரசு அழுத்தம்
கொடுத்து தமிழக மீனவர்கள் இழந்த படகுகளை மீட்கவும், இழப்பை ஈடுகட்டவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லையெனில், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் மீனவர்களை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த
வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.