நடைபெற இருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பாஜகவை எதிர்த்து பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறியவர். கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை மற்றும் பாசிச ஆட்சியை எதிர்த்து பதவி விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து களத்தில் இறங்கிப் போராடினார்.
இந்நிலையில், தி இந்து ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டியளித்த அவர், ”பெரும்பான்மை என்ற பெயரில் ஏற்கனவே மக்களைப் பிளவுபடுத்தியதை எதிர்த்தும், சிறு கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரது நலனைக் கருதியும் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக அரசியல் தீர்வு காண வேண்டிய நேரம் இது. அதனால் தான், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களையும், இந்திய அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகின்றேன்.
காங்கிரஸில் சேர முடிவு எடுத்ததும், ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினேன். மக்களின் பிரச்சினைகளைப் பற்றியே ராகுல் காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் கலந்துரையாடியபோது, மக்கள் மீதும் ஜனநாயகத்தைக் காப்பதில் அவர் காட்டும் ஆர்வமும் புரிந்தது.
மக்கள் ஒன்றுசேருவதற்கான நேரம் வந்துவிட்டது. கருத்து வேறுபாடுகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நேரம் அல்ல இது. நாம் எதிர்நோக்கியுள்ள புதிய சவால்களுக்கு புதிய தீர்வுகளைக் காண வேண்டும். இந்த சவால்களை காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டுள்ளதோடு, அதற்கான தீர்வையும் வைத்துள்ளது.
நாட்டின் மீது நடத்தப்பட்ட சர்வாதிகாரத் தாக்குதல்களை எதிர்த்துக் கடந்த 2019 ஆம் தேதி நான் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது பெரும்பாலோருக்கு என் முடிவு வியப்பாக இருந்தது. ஆனால், இந்தியா இப்போது எண்ணற்ற ஜனநாயக விரோதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் அமைப்பின் பன்முகத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும், நம் குழந்தைகள் உள்ளிட்ட நாம் அனைவரும் பெரும் ஆபத்தில் இருப்பதையும் அவர்கள் தற்போது புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஓராண்டாக நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றேன். பாசத்தைப் பொழிந்து மக்களுடன் கைகோத்து நின்ற இளைஞர்களையும் தைரியமிக்க மாணவர்களையும் சந்தித்தேன். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த மாபெரும் போராட்டத்தில் நான் பங்கெடுத்தபோது, நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டதைக் கண்டேன்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வேன். இத்தகைய பிரித்தாளும் சக்திகளை எதிர்கொள்ளும் முன்களப் பேராளிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இந்த போராட்டத்துக்கு உதவும் பொறுப்பு எனக்கு உள்ளது. சமூக சமத்துவத்தையும் மற்றும் வகுப்புவாத கலவரத்துக்கு எதிராக தங்கள் குழந்தைகளின் போராட்டத்தையும் காணும் தியாக மனப்பான்மை கொண்ட தமிழக மக்கள் மீது நான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நல்ல நண்பர். என்னிடம் பயிற்சி எடுத்தவர். அவரது இந்த நிலைப்பாடு எனக்குப் புரியவில்லை. நாங்கள் இப்போது கொள்கை ரீதியான யுத்த களத்தில் எதிரும் புதிருமாக நிற்கின்றோம்” என்றார்.