கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்தபோது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்ற பெயர் கொண்டவருக்கு விசா தர மறுத்துவிட்டார். அதன்பிறகு அதிபராக வந்த ஜனநாயகக் கட்சியின் பராக் ஓபாமா, மோடியை ஆரத்தழுவிக் கொண்டார். அவருக்குப் பிறகு வந்த குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப், சில விசயங்களில் இந்தியாவுக்கு எதிராகப் பேசினாலும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
புதுடெல்லியிலோ அல்லது வாஷிங்டனிலோ யார் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்பது விசயம் இல்லை. இரு நாடுகளுக்கிடையே ஏறி, இறங்கிக் கொண்டிருக்கும் உறவைக் கவனிக்க வேண்டியது முக்கியமாகிறது. ஆனால், அரசியல் ரீதியாக மோடிக்கு ஜோ பைடன் சரிப்பட்டு வராமலும் போகலாம். ‘மோடி தான் இந்தியா, இந்தியா தான் மோடி’ என்றும் கூறுவதை நாம் கேட்க விரும்பாவிட்டாலும், இதில் நுணுக்கம் இருக்கிறது. ஒரு தலைவர் எவ்வாறு பிரபலமாக இருக்கிறார் என்பது முக்கியம் இல்லை. அந்த தலைவரைவிட நாடு பெரியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுபான்மையினத்தவரை தாய் மதத்துக்குத் திரும்பவேண்டும் என்ற பிரச்சாரம் இந்து அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்திய வருகையை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பும் முன் டெல்லியில் பேட்டியளித்த அப்போதைய அதிபர் ஒபாமா, இந்தியாவின் மதச் சகிப்புத்தன்மையைப் பற்றி வகுப்பே எடுத்தார்.
அப்போது, ”எந்தவொரு சமுதாயமும் ஆண்களின் இருள் சூழ்ந்த தூண்டுதல்களில் இருந்து விடுபடவில்லை. ஒவ்வொரு நபருக்கும் எந்தவொரு நம்பிக்கையையும் அச்சமின்றி கடைப்பிடிக்க உரிமை உண்டு” என்று பேசினார். இந்த பேச்சு தலைநகரிலிருந்த மோடியையே வாயடைத்துப் போகச் செய்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லிக்கு வருகை தந்தபோது, மத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை குறித்துப் பேச ட்ரம் மறுத்துவிட்டார். இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் குறித்தும் பேச மறுத்துவிட்டார்.
”இந்தியாவிலிருந்து நான் புறப்படுகிறேன். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று ஓர் அறிக்கையை வெளியிட்டு விட்டுக் கையசைத்துப் புறப்பட்டுப் போனார் ட்ரம்ப். ”ட்ரம்ப்பின் இத்தகைய எதிர்வினை, மோடியைப் பாதுகாப்பதாகவே இருக்கிறது” என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டன.
பைடன் மற்றும் கமலா ஹாரீஸை வெள்ளை மாளிகையில் சந்திப்பதில் ஏன் மோடி அவ்வளவு அக்கறை காட்டவில்லை என்பது இந்த இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே எளிதாகப் புரியும். ஆனால், அந்த இரு தலைவர்களும் தாராளவாத இந்தியாவின் பின்னே இருப்பதையும், அதன் மீதான அக்கறையையும் தெளிவாக வெளிப்படுத்தினர்.
ட்ரம்ப் செய்ததைப் போல், பைடனும் ஹாரீஸும் மோடிக்கு இலவச பாஸ் கொடுக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான தமது கருத்தை பைடன் வெளியிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது குறித்து கமலா ஹாரீஸ் கூறும்போது, ”இந்த உலகத்தில் காஷ்மீர் மக்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். நிலைமையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தேவைப்பட்டால், குறுக்கிட வேண்டிய அவசியம் வரும்” என்று தமது கருத்துகளை எச்சரிக்கையாகவே தெரிவித்தார்.
பைடன் அமெரிக்க அதிபரானால், காஷ்மீர் அல்லது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மற்றும் சட்டங்கள் குறித்து அமெரிக்கச் சட்ட வல்லுனர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது இந்தியாவுக்குக் கடினமாகவே இருக்கும்.
டொனால்டு ட்ரம் அதிபரானபோது, மோடியின் இந்து அடிப்படைவாதத் தளம் பரவச நிலையிலிருந்தது. ஏனெனில், தடையற்ற இஸ்லாமிய அச்சுறுத்தல் காரணமாக, அவரது வெற்றியைத் தேசியவாத, இனவெறியின் அடையாளமாகப் பார்த்தார்கள். ஆனால், ஜனநாயகக் கட்சியின் வெற்றி உலக அரசியலில் இதற்கு எதிரான விளைவை ஏற்படுத்தும்.
பைடன் அதிபரானால், சீனாவின் போக்கு காரணமாக இந்திய-அமெரிக்க உறவு மேம்படும். அப்போது மோடியைக் கட்டிப்பிடிக்கும் போது, ட்ரம்ப்புக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு மோடி எந்த அளவுக்குக் கடன்பட்டிருந்தார் என்பதையும் ஜனநாயகவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகப் பற்றாக்குறை ஏற்படும்போது, ட்ரம்ப் நிர்வாகம் கூட அமைதியாக இருக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், காஷ்மீரில் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும்,’இன்டெர்நெட்’ தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும் அமெரிக்க நிர்வாகம் குரல் கொடுத்தது. ட்ரம்ப் நிர்வாகத்திலேயே இதற்கெல்லாம் குரல் கொடுத்தார்கள் என்றால், பைடன் அதிபரானால் குரல் எவ்வளவு உரக்க ஒலிக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடியும்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, இந்தியா ஒன்றும் சவுதி அரேபியா அல்ல. அதன் பார்வை வேறுபட்டே இருக்கும். இந்தியாவின் ஜனநாயகப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போனால், மோடியை ஆண்டுக்கு 3 முறை பைடன் கட்டிப்பிடிக்கவே முடியாது.
இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் மோடி தமது செல்வாக்கை முதலீடு செய்துள்ளார். ஆனால், ஹாரீஸ் துணை அதிபரானால் அமெரிக்க அரசியலில் மோடியால் செல்வாக்கு செலுத்த முடியாது. மேலும், அமெரிக்கத் தேர்தல் தொடர்பான இந்து அடிப்படைவாதிகளின் சத்தம் ஜனநாயகக் கட்சியின் தலைமையை எரிச்சலூட்டும். இதெல்லாம் மோடிக்கு நல்ல செய்தி அல்ல.
ட்ரம்புக்கு வாக்களிக்குமாறு மோடி பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்பு, இந்தியாவுக்கு ட்ரம்ப் நல்லது செய்யவில்லை என்பதைக் கவனித்திருக்க வேண்டும். ட்ரம்ப்பின் நிலைப்பாடு, இந்தியா போன்ற அமெரிக்க நண்பர்களைக் காட்டிக் கொடுத்ததாகவே தெரிகிறது. ட்ரம்ப்பின் பாதுகாப்புவாதக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தைப் புண்படுத்தியுள்ளன. முஸ்லீம் நாடுகளை விட, விசா கோரும் இந்தியர்களைக் காயப்படுத்தியுள்ளது.
ஈரானிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெய் பொருட்களை வாங்கக் கூடாது என்று இந்தியாவை நிர்ப்பந்தித்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய்ப் பொருட்களை வாங்க வலுக்கட்டாயப்படுத்தினார். இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவியபோது, ”இந்தியாவுக்கு ட்ரம்ப் சலுகை காட்டவில்லை. மாறாக, ரஷ்யாவிலிருந்து ஆயுதங்களை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் இரும்பு முதல் ரப்பர் வரையிலான பொருட்கள் மீதான கட்டணத்தை உயர்த்தியதன் மூலம், இந்தியாவுடன் சிறிய வர்த்தகப் போரை ஏற்படுத்தியவர் ட்ரம்ப். இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குக் கொடுத்த முன்னுரிமையையும் ரத்து செய்ததன் மூலம், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைய ட்ரம்ப் காரணமாக இருந்தார்.
அமெரிக்க விசா கொள்கையில் மாற்றம் செய்ததால், இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதைத் தடுத்து நிறுத்த வழிவகுத்தது.
கடந்த 2016 அக்டோபரில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்த மாநாட்டில் இந்தியாவும், சீனாவும் வெளியேறியதை ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஒதுக்கிய நிதியையும் ரத்து செய்தார்.
ஜனநாயக கட்சியின் நிர்வாகம் இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க – ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஜனநாயக கட்சி நிர்வாகம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். இதனால், ஈரானிலிருந்து எண்ணெய் வர்த்தகம் திறந்துவிடப்பட்டால் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும். பாரீஸ் ஒப்பந்தம், இந்தியத் தொழிலாளர்களுக்கான விசா பிரச்சினை ஆகியவற்றில் பைடன் மற்றும் ஹிலாரி நிர்வாகத்தின் அணுகுமுறை மாறுபட்டதாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம்.
மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாவிட்டாலும், இந்தியா-அமெரிக்க உறவில் பைடன் ஆர்வம் காட்டுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சீனாவின் விரிவாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் உள்நாட்டு அரசியலுக்கு மேலாக தேசிய நலன்களைக் காக்க வேண்டிய நேரம் இது. அமெரிக்காவுடன் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது, இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்பு மோடிக்கு ரஷ்யா செய்த போல் அமையும்.
”ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவை ‘கெட்ட காற்று’ என்று கூறி எவ்வாறு அவமதித்தார் என்பதைப் பாருங்கள்” என பைடன் ட்வீட் செய்துள்ளார்.
பைடனின் இந்திய ஆதரவு போக்கை வைத்துப் பார்த்தால், பைடனின் வெற்றி இந்தியாவுக்கு நல்லது…மோடிக்கு அல்ல…!