இன்றைய அரசியல் நிலைமையின் போக்கு மற்றும் அதன் ஆபத்தை எச்சரித்து, இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை:
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இன்று கூனிக் குறுகிப் போயிருக்கிறது. பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயக ஆட்சியின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை, அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தடுக்கப்படுகிறது.
கருத்துவேறுபாடுகள் வேண்டுமென்றே பயங்கரவாதம் என்றும், தேச விரோத நடவடிக்கை என்றும் முத்திரை குத்தப்படுகின்றன. குடிமக்கள் மற்றும் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநிறுத்துவதாக கருதப்படும் பல நிறுவனங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
தேசியப் பாதுகாப்பு என்ற போலியான அச்சுறுத்தல்கள் மூலம், மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனம் திசைதிருப்பப்படுகிறது.
உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், சமரசம் செய்து கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசும், பாரதிய ஜனதா கட்சியும் ஒவ்வொரு போராட்டத்துக்குப் பின்னே சதி இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு பார்வையும் எதிரானதாகவே இருக்கிறது.
எதிர்ப்பாளர்கள் மீது புலனாய்வு அமைப்புகளைக் கட்டவிழ்த்துவிடுவது, ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வழியே பொய் பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய ஜனநாயகம் வெறுக்கப்படுகிறது. காவல்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இனியும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு மோடி அரசுக்கு ஒன்றும் இல்லை. இந்த அமைப்புகள் எல்லாம் இப்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகம் போடும் ஆட்டத்துக்கு ஆடிக் கொண்டிருக்கின்றன.
அரசியல் அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். நிறுவப்பட்ட ஜனநாயக மரபுகளை மதிக்கவேண்டும். எவ்வித பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக, அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத அடிப்படை விதி மீறலை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
முதல் 5 ஆண்டு ஆட்சியில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் எதிரிகளாகச் சித்தரித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப் போடுவது பாஜக அரசியலாக இருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குகளைத் தொடுத்ததிலிருந்து ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பிரபல சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீது கடுமையான வழக்குகளை தொடர்ந்தனர். முந்தைய ஆட்சிகளில் இது போன்று நிகழ்ந்ததில்லை.
பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் இந்தியாவுக்கு எதிரான சதி என முத்திரை குத்துவது மோடி அரசின் வாடிக்கையாகிப் போனது. குடியுரிமை திருத்தச் சட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பெரிய அளவிலான போராட்டங்களை மோடி அரசு சதி என்றே கட்டமைத்தது.
இத்தகைய போராட்டங்களை ஆரம்பத்தில் பெண்களே முன்னெடுத்தனர். அதன்பின், ஷாஹீன்பாக் மற்றும் எண்ணற்ற போராட்டங்களிலும் ஆண்கள் ஆதரவு கொடுப்பவர்களாகவே இருந்தனர். இந்தப் போராட்டங்களில் அரசியலமைப்பு, தேசியக் கொடி உள்ளிட்ட நமது தேசிய சின்னங்களைப் பயன்படுத்தியது பெருமைக்குரியதாகும்.
இந்தப் போராட்டத்துக்கு, அரசியல் கட்சிகளைத் தாண்டி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த மாபெரும் போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இதனைப் பிரச்சினையாக்கினார்கள். போராட்டம் நடத்துவோர் மீது தாக்குதல் நடத்துமாறு மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், மத்திய உள்துறை இணை அமைச்சரும் உத்தரவிட்டனர்.
மற்ற டெல்லி பாஜகவினர், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு வெளிப்படையாக அச்சுறுத்தினர். வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்படுவதற்கு ஆளும் கட்சியே காரணமாக இருந்தது. பிப்ரவரியில் நடந்த இந்த கலவரத்தை அடக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.
சில மாதங்கள் கழித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நாட்டுக்கு எதிராகச் சதி செய்ததாக மோடி அரசு எல்லை மீறி அபாண்டமாகக் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, விசாரணையே இன்றி 700 வழக்குகள் பதியப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல சமுதாய தலைவர்கள் தான் இந்த போராட்டம் கலவரமாக மாற மூளையாகச் செயல்பட்டதாக பாஜக அரசு குற்றம் சாட்டியது. இதே தலைவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் போராடியவர்கள் தான். ஆனால், அவர்கள் மீது வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தி தேசத்துக்கு எதிராகச் சதி செய்ததாக வழக்குத் தொடுக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாகும்.
ஹத்ராஸில் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபின், உடலை உத்தரப்பிரதேச காவல்துறையினரே எரித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டுக் கதறி அழுகின்றனர். எதற்கும் உத்தரப்பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால், நிர்பயா சம்பவத்தில் நீதி கிடைக்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சி அரும்பாடுபட்டதும், நேர்மையாக நடந்து கொண்டதும் நாட்டு மக்களுக்குத் தெரியும்.
சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையின் அடிப்படை தத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அரசியலிலும் சமுதாயத்திலும் நஞ்சை விதைப்பதற்குச் சமம். பாஜக மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்டு கொள்கையை வகுத்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொருவருக்கும் வாக்குரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும் இந்தியனின் அடிப்படை உரிமை என அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியாகப் போராடவும் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களுக்காக முன் நிற்கும் சமுதாயத் தலைவர்கள் மீது சதியாளர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சாயம் பூசுவது முறையல்ல.
தன்னை 130 கோடி மக்களின் பிரதிநிதியாக பிரதமர் மோடி அடிக்கடி கூறிக்கொள்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகளையும், எதிர் கருத்துள்ளவர்களையும், தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறார். அவர்கள் மட்டும் தான் நாடு என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கும் சேவை செய்யவே அரசாங்கங்கள் உள்ளன. அவர்களை இழிவுபடுத்துவதற்கு அல்ல.
நமது அரசியலமைப்பு மற்றும் சுதந்திர இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தை பின்பற்றினால் மட்டுமே இந்த நாடு செழிக்கும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.