கல்வான் எல்லையில் சீனப் படையினரால் பீகார் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. ராகுல் காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நவடாவில் நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, ” கல்வான் மோதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறியிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல, நாடே அவர்களது தியாகத்துக்காக தலைவணங்குகிறது. ஆனால்,கேள்வி என்னவென்றால், ராணுவ வீரர்கள் உயிரிழந்த போது மோடி என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான். நம் எல்லைக்குள் சீனப் படையினர் நுழையவில்லை என்று அப்பட்டமாகப் பிரதமர் மோடி பொய் பேசினார்.
இந்திய நிலத்தில் 1,200 சதுர அடி நிலத்தை எடுத்துக் கொண்ட சீனப் படைகளை விரட்டி அடித்தாரா? என்பது குறித்து மக்களுக்குப் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு, இங்கே வந்து தலைவணங்குவதாகச் சொல்லாதீர்கள்” என்றார்.
பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, சீன மோதலில் இன்னுயிர் நீத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். தேசியக் கொடிக்காகவும், பாரத மாதாவைத் தலை நிமிரச் செய்யவும் ராணுவ வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்தனர். அவர்கள் காலடியில் தலையை வைத்து மரியாதை செலுத்துகிறேன் என்று பேசியிருந்தார்.