”அரசியலமைப்பு சபையில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்” என்று இந்திய அரசியலமைப்பின் புகழ்பெற்ற அறிஞர் கிரான்வில்லே ஆஸ்டின் கூறியிருக்கிறார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று இந்த நாட்டை ஆள்பவர்கள், தங்களுக்குள்ள செல்வாக்கு மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, ‘என் வீடு, என் சட்டம்’ என்று இந்தியக் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் பல மோதல்களே இதற்கு சாட்சி:
- ஜிஎஸ்டி இழப்பீடு : ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி வசூலித்தபின், உபரித் தொகையை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு மாற்றிவிட்டதாக மத்திய அரசு சொல்கிறது. இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையால், மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”மாநிலங்களுக்கான பங்கைச் செலுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இல்லை” என்பது போலப் பேசினார். மாநில அரசுகளுக்கான சட்டப்பூர்வ ஜிஎஸ்டி பங்கைத் தவிர்ப்பதாகவே மத்திய அரசு தரப்பின் அச்சுறுத்தல் பேச்சுகள் அமைந்தன.
- ஜார்கண்டிடம் வசூல் : ஜார்கண்ட் மாநிலத்திடம் இருந்து ரூ.1,417 கோடியை வசூலித்து நேரடியாக மத்திய அரசின் கணக்கில் வரவு வைக்குமாறு, இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தர வேண்டிய முதல் நிலுவைத் தொகையை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுக்கிடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தொகையை மத்திய அரசு தன் கணக்கில் பற்று வைத்துக் கொண்டது என்று எடுத்துக் கொண்டாலும், சட்டப்பூர்வமாக மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு தரவில்லை.
- விவசாய சட்டங்கள் : மாநிலங்களவையில் போதுமான வாக்குகள் இருக்கின்றனவா? என்பது குறித்து சரிபார்க்காமலேயே 3 விவசாயச் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. விவசாயம் மாநிலங்களின் வரையறைக்குள் வந்தபோதிலும், இந்த சட்டங்கள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசின் வரையறைக்குள் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் விவசாயிகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்குமா? என்பது சந்தேகமே. சீர்திருத்தம் என்ற பெயரில் மோடியின் நடவடிக்கையால், மத்திய மாநில அரசு ஒத்துழைப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
- சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) : சிபிஐ அமைப்பை அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதால், மாநிலத்தில் உள்ள வழக்குகளை சிபிஐ விசாரிக்க மாநில அரசு ஒப்புதல் தராது என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கல் துறையை அரசியல் கருவியாக மத்திய அரசு பயன்படுத்துவதையே மகாராஷ்டிர அரசின் நடவடிக்கை பிரதிபலிக்கிறது.
- கொரோனா தடுப்பூசி : ‘பீகார் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார். கொரோனா தடுப்பு ஊசி எவ்வாறு விநியோகிக்கப்படும், அதற்கான விலை என்ன, அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்று மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இதற்கான அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியாவிடமிருந்து வந்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விட பொய் பிரச்சாரம் செய்வதில் அமித் மாளவியா வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியக் கூட்டாட்சி முறைக்கு நெருக்கடியா?
கொரோனா பரவல் மற்றும் மோசமான பொருளாதார வீழ்ச்சி, பொது முடக்கத்துக்குப் பின் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை, இந்திய எல்லையான லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல், மத்திய பாஜக அரசின் அரசியல் அணுகுமுறையால் ஏற்பட்டுள்ள மத ரீதியான பதற்றம் ஆகியவற்றைக் கையாள இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயல்படுவது மேலும் பிரச்சினையை அதிகரிக்க வழிசெய்யும். இதற்கு உதாரணமாக, ஜிஎஸ்டி பிரச்சினையை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
14 – ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினரும் பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான எம். கோவிந்த ராவ் இவ்வாறு எழுதுகிறார்…
” இக்கட்டான நிலையில் மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுவது, எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகளின் உறவைப் பாதிக்கும்.
ஒப்பந்தங்களில் மத்திய அரசு தமது உறுதிப்பாட்டை அங்கீகரிக்காததின் மூலம், எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்கும். இரண்டாவதாக, மத்திய அரசின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கை விடுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
இதனை, வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விசயமாக மட்டும் பார்க்க முடியாது. இது மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான எதிர்கால உறவு குறித்த பிரச்சினையாகவும் பார்க்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம், பாஜக அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உதாரணமாகவே இருக்கின்றன.
மத்திய அரசிடம் அதிகாரக் குவியலைக் காங்கிரஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் எதிர்த்து வருகிறது. இதனை, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் மூலம் காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது.
அரசியல் விஞ்ஞானி நீலஞ்சன் சிர்கார் கூறும்போது, ”பாஜகவுக்குள் உள்ள அதிகாரக் குவியல் என்பது, மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரிடம் மட்டுமே உள்ளது. இது அக்கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பலவீனமாக்குவதாக உள்ளது. இதனால் தான், மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு மாறாக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் மோடியும் அமித்ஷாவும் செயல்படுகிறார்கள்.
இது இந்தியக் கூட்டாட்சிக்கு ஒரு வேதனையான வளர்ச்சியாகும். ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற அமைப்புகூட, மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான பதற்றத்தைக் கையாளும் முறை சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியக் கூட்டாட்சியின் ஒரு உதாரணமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூறப்பட்டது. பிற கொள்கைகளை உருவாக்கும் போதும் மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பைப் பிரதிபலிப்பதே நாட்டுக்கு நல்லது” என்றார்.
முன்னாள் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறும்போது, ” ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகள் பாதிப்படையலாம். மாநில அரசுகளுக்கு இழப்பீடு அளிக்க வழிவகுக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு செயல்படுத்தாதது, வரும் காலங்களில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்” என்றும் அச்சம் தெரிவித்தார்.