(20.6.1999 இல் கல்கி வார இதழில் வெளிவந்த கட்டுரை)
1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முகையூர் தொகுதியில் அனந்தபுரம் என்ற கிராமத்தில் காங்கிரஸ் சார்பாக நிற்கும் தமக்குக் கைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர். அப்போது கட்சிப் பிரமுகர் ஒருவர் அருகில் வந்து முகையூர் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட சுந்தரமூர்த்தி என்பவருக்கு டிக்கெட் கொடுத்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது என்ற அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார், காங்கிரஸ் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்த பின் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று அந்த இளைஞர் சிறிதும் நினைக்கவில்லை. இருந்தாலும் தலைமையின் ஆணையை ஏற்று, தேர்தல் களத்திலிருந்து வாபஸ் பெற்றார்.
அது போன்ற அனுபவம் மீண்டும் தமக்கு வராது என்று உறுதியாக நம்பிய அந்த இளைஞருக்கு, 1984 சட்டமன்றத் தேர்தலும் அதே போன்ற சோதனையைச் சந்திக்க வைத்தது. அந்தத் தேர்தலில் கடலூர் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரை மாற்றி. செல்லப்பா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ் தலைமை.
“இப்படிப்பட்ட சங்கடங்கள் என்னை ஒரு போதும் சோர்வில் ஆழ்த்தியதில்லை. மாறாக அவற்றை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு புதிய உத்வேகத்துடன் போராடும் குணத்தையே வளர்த்தன ” என கூறியவர் கே.எஸ். அழகிரி.
அந்த இரண்டு அனுபவங்களுக்குப் பிறகு 1991இல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் ஆன அழகிரி, 1996ஆம் ஆண்டும் அதே தொகுதியில் த.மா.கா. வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.
துங்கும் நுரையுமாகக் கொப்பளிக்கும் வீராணம் ஏரிக் கரையில் குதிரையில் செல்லும் வந்தியத் தேவனை, கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் முதன் முதலாக அறிமுகப்படுத்துவாரல்லவா, அந்தப் பகுதியிலுள்ள கீரப்பாளையம்தான் அழகிரியின் ஊர். தங்கள் பகுதியின் பெருமையை வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்லி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தங்களுக்கு இலக்கிய ரசனையையும் வளர்த்ததில் பொன்னியின் செல்வனுக்குப் பெரும்பங்கு உண்டு என்றவர் அழகிரி.
அப்பா சம்பந்தம் ஒரு முழுமையான திராவிடர் கழகக்காரர். எனவே மூன்று மகன்களுக்கும் முறையே திராவிட இயக்கத் தூண்களான பன்னீர்செல்வம், சௌந்தர பாண்டியன், அழகிரி என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை . கிராம கர்ணமாகவும் அப்பா இருந்ததால் ஊரில் நல்ல மரியாதை. பெரியார் உட்பட திராவிட இயக்கப் பிரமுகர்கள் அந்தப் பகுதிக்கு வந்தால் தவறாமல் விசிட் செய்யும் வீடு அவருடையது. சம்பந்தம் நல்ல பேச்சாளரும்கூட. ”என் தந்தை அவரின் கருத்தை எங்கள் மேல் சிறிதும் திணித்ததில்லை; எங்களுக்கு முழு கருத்துச் சுதந்தரம் கொடுத்தார். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போதே காங்கிரஸ் மேடைகளில் பேசத் துவங்கி விட்டேன்’ என கூறியவர் அழகிரி.
அழகிரிக்குக் கணீரென்ற குரல் வளம். ”இன்று மாலை….. காங்கிரஸ் பொதுக் கூட்டம்’ என்று மாட்டு வண்டியில் ஸ்பீக்கர் கட்டிக்கொண்டு தெருத் தெருவாக அறிவிக்க, உள்ளூர் பிரமுகர்கள் சிறுவன் அழகிரியைத்தான் தேடுவார்களாம். அண்ணாமலையில் பி.யு.சி படிக்கும்போது காங்கிரஸ் சார்பாக இயங்கிக் கொண்டிருந்த தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராகி விட்டார் அழகிரி. ஈ.வெ.கி. சம்பத், எம்.பி. சுப்பிரமணியம், இளைய பெருமாள் போன்ற தலைவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
முதன் முதலாக, சம்பத் அவர்களைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தார் அழகிரி. சம்பத் அவர்களுக்கு அழகிரியை அறிமுகம் செய்து வைத்த தஞ்சை ராமமூர்த்தி, ‘இவர்தான் சிதம்பரம் அழகிரி என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். ”உங்களுக்குக் கீரப்பாளையம் சம்பந்தம் என்பவரைத் தெரியுமா?” என்று உடனே சம்பத் கேட்க, அழகிரிக்கு இன்ப அதிர்ச்சி. அவர்தான் தம் தந்தை என்று பணிவுடன் சொன்னார் அழகிரி. ”ஓ! சம்பந்தம் மகனா?” என்று சொல்லி பூரிப்படைந்தாராம் சம்பத்.
அழகிரியின் மேடைப் பேச்சில் சம்பத், தா. பாண்டியன் ஆகியோரது தாக்கம் இருக்கும். ”அவர்களைத் தவிர திமுக முன்னாள் மேயர் சிட்டிபாபு அவர்களின் மேடைப் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்று சொல்லும் அழகிரியை, எஸ்.ஐ. ஆக சேர்த்துவிட ஏற்பாடு செய்தார் அவர் சகோதரர். ”இரண்டு நாள்கள் தஞ்சை ரிசர்வ் போலீஸ் மைதானத்தைச் சுற்றிய பின் ‘ஐயோ … நமது லட்சியங்கள் என்னாவது’ என்று அரசியலுக்குத் திரும்பி வந்து விட்டேன்” என்பார்.
காங்கிரஸில் மூப்பனாரின் எதிர் கோஷ்டித் தலைவர்களுடன் அதிகமாகப் பழகிக் கொண்டிருந்ததால் அரசியலில் சேர்ந்த சில வருடங்கள் வரை மூப்பனாருடன் அவ்வளவாக அழகிரிக்குத் தொடர்பேயில்லை. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவராக அழகிரி இருந்த போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணிய ரெட்டியார் ”சுந்தர பெருமாள் கோயிலுக்கு மூப்பனாரைச் சந்திக்கச் செல்லுகிறேன் … வாங்களேன்” என்றழைக்க, மூப்பனாரைச் சந்திக்க அவருடன் சென்றார் அழகிரி. சந்திப்பிலேயே ”ஆஹா… இவரல்லவா நம் தலைவர்…. இத்தனை நாள் வரை சந்திக்காமல் இருந்து விட்டோமே” என் வருத்தப்பட்டுப் போனவர் அழகிரி.
அதன்பின் அடிக்கடி மூப்பனார் அவர்களுடன் தொடர்பு கொண்டு உறவை வளர்த்துக் கொண்டார். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி, மூப்பனாருக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார். தமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவர் மூலமாகத்தான் மூப்பனாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், அழகிரியின் நேரடித் தொடர்பு அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
திண்டிவனம் ராமமூர்த்தியை எனது அன்பான எதிரி என்றுகூடச் சொல்லலாம். கீரப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட விரும்பினேன், ஆனால் திண்டிவனம் வேறொருவருக்காகச் சிபாரிசு செய்தார். கடைசியில் தலைவர் மூப்பனார், ப. சிதம்பரம் ஆதரவில் எனக்கு சீட் கிடைத்து நான் பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஆனேன்”.
தமது அரசியல் வாழ்வில் ஆறு முறை சிறைக்குப் போயிருக்கிறார் அழகிரி. ”எனக்குப் பிடித்த ஜெயில் கடலூர் ஜெயில்தான். கேப்பர் குவாரி என்ற சிறு குன்றின் மீது அந்த ஜெயில் அமைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஜெயிலுக்குப் போனவுடன் அங்கிருக்கும். பிரபல கைதிகளுடன் அறிமுகம் செய்து, கொள்வேன், அதன்பின் பரோலில் வெளிவரும் அவர்கள் என்னைச் சந்திப்பார்கள். பரோலை நீட்டிக்க சட்ட அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பேன். இப்படிப் பல ஆயுள் தண்டனை கைதிகளுக்குப் பரோல் நீட்டிப்பு வாங்கித் தந்ததால் கே.ஏ.கே. கூட கிண்டலடிப்பார். சட்டமன்றத்தில் பேசும்போது அடிக்கடி விதுர நீதியிலிருந்து மேற்கோள்காட்டிப் பேசுவேன். ஒருமுறை கே.ஏ.கே., ‘எனக்கு அந்தப் புத்தகத்தின் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்களேன் தம்பி’ என்று கேட்டார். அவருக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தேன். ‘பல நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு விதுர நீதி மிகவும் பயன்பட்டிருக்கிறது’ என்று கே.ஏ.கே சொல்லியிருக்கிறார்.
கீரப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக அழகிரி இருந்தபோது, அன்னை இந்திரா மகளிர் தையல் தொழில் கூட்டுறவுச் சங்கம்’ என்ற ஒன்றைத் துவங்கி ஆயிரம் கிராமப்புற பெண்களுக்கு இந்தியன் வங்கி மூலம் கடனுதவி பெற்றுத் தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். அந்த விழாவில் மூப்பனார் பேசும்போது ‘வங்கியில் கடன் வாங்கிக் கொடுப்பது பெரிய விஷயமல்ல. கடன் வாங்கிய எல்லோரும் அதை முழுவதுமாகத் திருப்பிக் கட்ட அழகிரி துணை நிற்க வேண்டும்” என்று பேசினார். தலைவர் அவர்களின் பேச்சை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு எல்லோரிடமும் பணம் வசூல் செய்து வங்கிக் கடனை அடைத்தார் அழகிரி.
”கமிட்டெட் ஆக நான் பணிபுரிவது தலைவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் தொடர்ந்து என் மீது அன்பு மழை பொழிகிறார்” என்று பெருமையுடன் சொல்லும் அழகிரி ஒய்வு கிடைத்தால் ஜெயகாந்தன், ஓஷோ புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொள்வாராம்.
”எனது குடும்பப் பின்னணி காரணமாக எனக்கு முதலில் அறிமுகமானவர் பாரதிதாசன். அவர் மூலமாகத்தான் பாரதியை உணர்ந்து படித்து ரசித்தேன்” என்று அழகிரி சொல்வார்.
ஜெயலலிதா ஆட்சியில் கொடியன்குளத்தில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். சட்டமன்றத்தில் அதைப் பற்றிய விவாதம் வந்தபோது தாம் பதினெட்டு மணி நேரம் பணிபுரியும் முதல்வராக இருப்பதாகப் பெருமையுடன் சொன்னார் ஜெயலலிதா.
அதன் பின் பேசிய அழகிரி ‘ஜெயலலிதா எப்படிச் செயல்படாத முதல்வராக இருக்கிறார்’ என்பதை மிகவும் கிண்டலாகப் பேசி விளக்கி ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்… உள்ளே இருப்பது ஈறும் பேனாம்…” என்று முடித்தார். ”இன்னிக்குப் பெரிய கலாட்டா ஆகி இருக்கும் தப்பிச்சீங்க” என்று எஸ்.ஆர்.பி சொன்னாராம்.
“எனக்குச் சிறு வயது முதலே பொதுவுடைமைத் தத்துவங்கள் பிடிக்கும். நமது நாட்டில் சமத்துவ சோஷலிச சமுதாயம் அமைய வேண்டு மென்றால் காங்கிரஸின் உயரிய கருத்துகள், கொள்கைகள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்று காங்கிரஸில் இணைந்தவன் நான்” என்று கூறி மெய்சிலிர்ப்பது அழகிரியின் வழக்கம்.