நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தான். விவசாயச் சட்டங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடாததே விவசாயிகளின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயன் தரும்? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உண்மையிலேயே முதன்மையானதா? இதனைச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்கு உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?
குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?
குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிப்பது விவசாயிகளுக்கு முக்கியமான பாதுகாப்பு வளையமாக அமைகிறது. அதாவது, அரசே பாதுகாப்பு வழங்குகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, விவசாயிகளை விலை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதோடு, விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் விளைபொருட்களையும் உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கிறது. மேலும் அதன் இருப்பையும் பராமரிக்க உறுதி செய்கிறது.
பயிர்களுக்கான சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட வீழ்ச்சியடையும்போது, விவசாயிகள் கோரும் விலைக்கு அரசே பயிரைக் கொள்முதல் செய்யும். குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவர்.
இந்தியாவில் உற்பத்தியாகும் 30 சதவீத கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மற்ற பயிர்கள் 6 முதல் 7 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது யார்?
சிஏசிபி எனப்படும் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, ஒவ்வொரு அறுவடையின்போதும், குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
அரசு அமைத்த சாமிநாதன் குழு வரையறுத்ததின் அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சிஏசிபி தான் முடிவு செய்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சாமிநாதன் குழு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பல அறிக்கைகளை மத்திய அரசுக்கும் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
3 வகையான செலவுகளை மதிப்பீடு செய்ய சூத்திரம் தேவைப்படுகிறது:
ஏ2 : விதைகள், உரம், பூச்சிக் கொல்லிகள், ஊதியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு விவசாயிகள் செலவு செய்யும் உண்மையான தொகை.
ஏ2+எஃப்எல் : ஏ2 செலவுகள் கூலியே வாங்காமல் விவசாயம் செய்யும் குடும்பத்தினருக்கு ஈடுகட்டுவது. (இந்தியாவில் குடும்பம் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபடுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது)
சி2: ஏ2+சி 2 உடன் உற்பத்திச் செலவுகள், கடன், நிலம் மற்றும் பிற நிலையான மூலதன சொத்துகள் கணக்கிடப்படும். இதனை விரிவான உற்பத்திச் செலவு என்பர்.
ஒவ்வொரு பயிருக்கும் சி 2 அளவுக்கு அதிகமாகவே குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். இது நாடு முழுவதுக்கும் பொருந்தும். நடப்பு சி 2 அளவையும் சேர்த்து சிஏசிபி கணக்கில் எடுத்து தேவை மற்றும் விநியோகம், உள்ளூர் மற்றும் சர்வதேச விலை நிலவரம், பயிர்களுக்கு இடையேயான சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சி2 அளவைவிட 50 சதவீதத்துக்கு அதிகமாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு வலை நிர்ணயிக்கப்படுகிறதா?
இல்லை. சிஏசிபி பரிந்துரையின்படி, தற்போது 23 பயிர்களுக்கு மட்டுமே மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது.
7 தானியங்கள்: நெல், கோதுமை, மக்காச்சோளம், முத்து தினை, பார்லி மற்றும் ராகி.
5 பருப்புகள் : கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு மற்றும் பயறு
7 எண்ணெய் வித்துகள்: வேர்க்கடலை, கடுகு, சோயாபீன், எள்ளு, சன் ப்ளவர், குங்குமப்பூ மற்றும் நைஜர் விதை
4 வணிகப் பயிர்கள் : கொப்பரை, கரும்பு, பருத்தி மற்றும் சணல்
குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
1960 – களில் பசுமைப் புரட்சி ஆரம்பமானபோது, பற்றாக்குறையைத் தடுக்க இந்தியா தனது உணவு இருப்புகளை உயர்த்த முயன்றது. 1966-67 ல், முதல் முறையாகக் கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு விவசாயிகளிடம் வாங்கிய விளைபொருட்கள், பொது விநியோகம் மூலம் ஏழைகளுக்கு மானியத்துடன் வழங்கப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கும் உதவியாக இருந்தது.
சட்ட அல்லது சட்டரீதியான கட்டமைப்புக்குள் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வருகிறதா?
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திற்குட்பட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வரவில்லை.
சிஏசிபி-யின் முன்னாள் தலைவர் அபிஜித் சென் கூறும்போது, ”நிர்வாக முடிவின்படி அரசு எடுத்த கொள்கை முடிவுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம். பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை அரசு அறிவிக்கும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கான சட்டம் ஏதும் இல்லை” என்றார்.
சிஏசிபி ஒரு சட்டரீதியான அமைப்ப அல்ல. மாறாக, விவசாய மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட துறையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க சட்ட நிர்ப்பந்தம் ஏதும் இல்லை என்பதே இதன் அர்த்தம். இந்த அமைப்பு தனியார் வர்த்தகர்களையும் கட்டுப்படுத்த முடியாது.
குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்குச் சட்ட ரீதியான ஆதரவை வழங்க சிஏசிபி முயன்றது. விவசாயிகள் தங்கள் பயிர்களை, குறைந்தபட்ச விலையில் விற்க சட்டம் கொண்டு வர, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு சிஏசிபி பரிந்துரைத்தது. எனினும், இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் சட்ட உரிமை உள்ளது. இதன்படி தான் கரும்புக்கு நியாயமான மற்றும் ஊதிய விலையை நிர்ணயிக்க வேண்டும். இது சிஏசிபி பரிந்துரைப்படி தீர்மானிக்கப்படுகிறது.
புதிய விவசாயச் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துத் தெரிவிக்காதது ஏன்?
விவசாயச் சட்டங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்கும் சம்பந்தமே இல்லை. சட்ட வரையறைக்குள் வராதபோது, இந்த மசோதாக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காணமுடியாது.
ஒரு சட்டம் விவசாய உற்பத்தி மற்று சந்தைக்குழுவுக்கு வெளியே, தங்கள் விளைபொருட்களை எந்த கூடுதல் செலவும் இன்றி விவசாயிகள் விற்கலாம் என்கிறது. மற்றொரு சட்டம் விவசாய ஒப்பந்தம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விவசாயிகளே விளைபொருட்களை விற்கலாம் என்கிறது. தானியங்கள், பருப்புகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது. அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு என்றும் கூறுகிறது. இந்த சட்டங்களில் அடிப்படையில் பார்க்கும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உத்தரவாதம் தரப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்தாகாது என்று அர்த்தம் கொள்ளலாமா?
விவசாய சட்டங்களில் குறிப்பிடாவிட்டாலும், இன்றைய சூழலில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்திலிருந்து விலகிச் செல்ல அரசுக்கு உத்தேசம் இல்லை. இந்த பிரச்சினையைத்தான் போராடும் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எழுப்புகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை ரத்து செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தர மோடி அரசு மறுக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை விவசாயச் சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பதே அவர்களது கவலையாக உள்ளது. மேலும் விவசாயிகளை கார்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கும் இந்த சட்டங்கள் வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறையால் யாருக்குப் பயன் என்ற விவாதமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையால் எல்லா மாநில விவசாயிகளும் பலன் அடைகிறார்களா?
6 சதவீத விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் விளைபொருட்களை விற்பதாக, 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, அரசின் கொள்முதல் சீராக இல்லாததால், இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான பலனைப் பெற முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
குறிப்பாக, சி2 -க்குள் வரும் நெல் விலை கடந்த 2004- 2005 முதல் 2014-15 வரை, பீகாரில் 11.2 சதவீதம் அதிகரித்தது. மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதமும் அதிகரித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சி 2 முறை 10.6 சதவீதம் அதிகமாக இருந்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, கோதுமை மற்றும் நெல்லை பெருமளவு அரசு கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதை, பொது விநியோக முறையில் விநியோகிக்க முக்கியத்துவம் தருகின்றனர். 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பொது விநியோகம் மூலம் தானியங்களை மானிய விலையில் வழங்க வழிவகுத்தது.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மற்று ஹரியானாவில் போராட்டம் வலுப்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. பஞ்சாபிலிருந்து 85 சதவீத கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. ஹரியானாவில் 75 சதவீதம் கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே இவற்றைக் கொள்முதல் செய்வதாக, விவசாய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திராவிலிருந்து 50 சதவீதம் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. மேற்கு வங்கம் போன்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நெற்பயிர் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயன் இல்லை. கோதுமையைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி பெருமளவு கொள்முதல் செய்யப்படுகிறது.
2012-13 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயில், குறைந்தபட்ச ஆதரவு விலையால் 13.5 சதவீதம் நெற்பயிர் விவசாயிகள் பயன் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி 32.2 சதவீத நெற்பயிர் விவசாயிகளும், 39.2 கோதுமை விவசாயிகளும் அறிந்திருந்ததாக சர்வேயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.