ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு வடசென்னை காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ். திரவியம் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11மணியளவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், அப்போது காங்கிரஸ்காரராக இருந்த நடிகை குஷ்பு ஆற்றிய உரை:
மயிலுக்கு சாப்பாடு போடுவாரு. பக்கத்தில ஒரு புறா வரும் அதுக்கும் சாப்பாடு போடுவாரு. யோவ், முதல்ல ரோட்டுல போற மக்களுக்கு சோறு போடுங்கய்யா. சாப்பிடுறதுக்காக கஷ்டப்பட்டுக்கட்டு இருக்காங்க. அவங்களுக்கு சோறு போடுங்க. சோறு போடுறதுக்கு ஒரு வழி கொடுங்க. ஒரு பெண்ணுக்கு எதிராக இவ்வளவு கொடுமைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்காக போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. பாஜகவின் பெண் தலைவர்கள் எங்கே? ஸ்ருதி இராணி எங்கே? நிர்மலா சீதாராமன் எங்கே? காங்கிரஸில் இருக்கும் தைரியம் இந்த நாட்டில் எவனுக்கும் கிடையாது.
யோகி ஆதித்யநாத் அவர்கள் உத்தரப்பிரதேசத்தோட முதலமைச்சர். நீங்க அறிவில்லாதவரா? இல்லை, உலகத்தில் உள்ள எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களான்னு நான் கேட்கிறேன். யோகி ஆதித்யநாத் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்து இனிமே சிபிஐ விசாரணை நடத்தணும். ஜாதி, மதம் வச்சுக்கிட்டு எப்படித்தான் உங்களால் அரசியல் பண்ண முடியுது. கேவலமாக இருக்கு. வெட்கமா இல்லை உங்களுக்கு. ஆளில்லாத கடையில டீ ஆத்திட்டு, அந்த சுரங்கப் பாதை தொடக்க விழாவில் கையை ஆட்டிட்டு போய்க்கிட்டே இருக்காரு. யார் இருந்தா அந்த சுரங்கப்பாதையில.
தைரியம் இருந்தா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மாதிரி நடுரோட்ல இறங்கி காப்பாத்துங்க மக்கள. கட்சி நிர்வாகிகள் மீது கைவச்சதும் தடுப்புகளைத் தாண்டி காப்பாத்துனாங்களா இல்லையா? தலைவர் ராகுல் காந்தி மேலே கை வக்கிறான் அவன். தள்ளிவிடுறாங்க. தள்ளிவிட்டா, எத்தனை தடவை தள்ளிவிட்டாலும் அவங்களால எந்திரிச்சு ஜெயிக்க முடியும். அதுதான் காங்கிரஸ்.
எல்லாத்துக்கும் நீங்க பதில் கொடுக்கணும். கொடுக்குற காலம் வரும். எப்படி திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தமிழ்நாட்டுல ஆட்சியைப் புடிக்கல பாருங்க நீங்க. பாஜக இப்ப பயத்துல உக்காந்துக்கிட்டு இருக்கு. மறந்துடாதீங்க பாஜக, உங்களோட கவுன்டவுன் ஆரம்பிக்குது. எண்ண ஆரம்பிச்சுடுங்க, உங்களுக்கு பதில் கூடிய சீக்கிரத்துல தெரியும்.
பிரதமர் மோடி அவர்கள் ‘பேட்டி பச்சாவ் ஆந்தோலன்னு’ சொல்றாரு. பேட்டி பச்சாவ்…மகள்களை காப்பாத்துங்கன்னு. காப்பாத்துங்கன்னா எப்படி காப்பாத்தப் போறீங்க. இப்படித்தான் காப்பாத்தப் போறீங்களா. வெட்கமா இல்ல உங்களுக்கு. இவங்க பாடுவாங்க பிஜேபிக்காரங்க ‘ஆல் இஸ் வெல்’ பாட்டுப்பாடுவாங்க. ஏன்னா யாருமே கேள்வி கேட்க முடியாதுங்கிற ஒரு தைரியம். ஆனால்,கேள்வி கேக்குற தைரியம் காங்கிரசுக்கு இருக்கு. எதுவுமே இல்லாமல் இன்னைக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னா, அதுபற்றி மோடி அவர்கள் பேசமாட்டாரு. வெறும் நல்ல பேரு வாங்குறதுக்கு வேலை செய்யக் கூடாது ஒரு பிரதமர். இங்க வரமுடியாது. வந்து பேசுங்க தமிழ்நாட்டுல. தமிழ்நாட்டுல மதம் பேஸ் பண்ணி பேசிப்பாருங்க. மக்களை பிரிக்கிறதுக்கு முயற்சி பண்ண பிஜேபியிலிருந்து யாருக்காவது தைரியம் இருக்கா. பிஜேபி இன்னைக்கு பெரியாரைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கு. பெரியாரை வந்து வாழ்த்திப் பேசிக்கிட்டு இருக்காங்க. வாங்க பேசுங்க தமிழ்நாட்டுல. ஜாதி, மதம் பேஸ் பண்ணி பேசுங்க.
இவ்வாறு ஆவேசமாக பேசிய குஷ்பு, அடுத்த சில நாட்களிலேயே பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் சேர்வதாகக் கூறுவது வெறும் வதந்தி என்று கூறிய குஷ்பு:
இது நடந்தது அக்டோபர் 6 ஆம் தேதி:
இது நடந்தது அக்டோபர் 12 ஆம் தேதி:
ஹத்ராஸ் தலித் பெண் கூட்டுப்பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 6 ம் தேதி காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சென்னையில் குஷ்பு பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக வில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றனவே?
இப்போதுதான் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்புகிறேன்.ஒவ்வொரு வதந்திக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.
புதிய கல்விக் கொள்கையில் எந்த அம்சம் உங்களுக்குப் பிடித்திருந்தது?
ஒரு தாய் என்ற வகையில் புதிய கல்விக் கொள்கையில் சில அம்சங்கள் எனக்குப் பிடித்திருந்தன. இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தலைவர் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். புதிய கல்விக் கொள்கை தவிர பாஜக கொண்டுவந்துள்ள விவசாயச் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு எதிராக எத்தனை வன்முறை, பலாத்காரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கொடுமையான ரீதியில் அவங்க கொல்லப்பட்டிருக்காங்க. அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு குஷ்பு குறிப்பிட்டார்.
சென்னை பாஜக அலுவலகத்தில் குஷ்பு அக்டொபேர் 13 அளித்த பேட்டி:
இன்னைக்கு பாரதிய ஜனதா பார்ட்டி கட்சியில நான் சேர்ந்திருக்கேன். நாட்டுக்கு நல்லது நடக்கணும். நாடு முன்னேறனும்னா நம்முடைய மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதிரி ஒரு தலைவர் இருந்தா தான் நாடு முன்னேற முடியும். அதை உணர்ந்த பின்தான் இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சியில நான் சேர்ந்திருக்கேன்.
ஆறு நாளில் நடந்த அதிசியத்துக்கு என்ன காரணம்? திரைமறைவில் நடந்தது என்ன? இதில் கணவர் சுந்தர். சி பங்கு என்ன?
வடசென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த திருமதி. குஷ்பூ 12 ஆம் தேதி பா.ஜ.க.வில் சேர்ந்த மர்மமான முடிவுக்கு இதுவரை தெளிவாக பதிலளிக்கவில்லை. மாறாக, தமிழக காங்கிரஸ் மீது குற்றங்களை சுமத்துகிறார். காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எப்போது நடந்தாலும் அவருக்கு முறையாக அழைப்பு அனுப்பப்படும். ஆனால், தொடர்பு கொண்டு பேசினால் அந்த தேதியில் தனக்கு படப்பிடிப்பு இருப்பதாகவும், ஹைதராபாத் மற்றும் வெளிநாட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மாதத்தில் ஐந்து நாட்கள் படிப்பிடிப்பு போக, 25 நாட்கள் வீட்டில் தான் இருந்தேன் என்று கூறுகிறார். கட்சிப் பணி செய்ய வேண்டும் என்று விரும்பினால் சத்தியமூர்த்தி பவனுக்கு அவர் வருவதை யார் தடுத்தது ? கட்சிப் பணி செய்ய விரும்புவதற்கு யார் குறுக்கே நின்றது ? கட்சிப் பணி செய்வதற்கு அவருக்கு மனமில்லாத காரணத்தினால் தான் ஏதாவது ஒரு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார்.
திருமதி. குஷ்பூவை பொறுத்தவரை மேடை அமைத்தால் வந்து பேசுவார். அதைத் தவிர, வேறு எந்த வகையிலும் கட்சிப் பணி ஆற்றுவதில் ஆர்வம் காட்டியதில்லை. திரைப்படத்துறையில் உயர்நிலையில் இருக்கும் கலைஞராக இருப்பதால் அவரது பணிகளுக்கு காட்டுகிற முக்கியத்துவத்தை கட்சிப் பணியில் காட்டாதது குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் வருத்தப்பட்டதில்லை. இதுவரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணியில் அவரது பங்களிப்பு என்ன என்பதை அவரால் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா ?
திருமதி. குஷ்பூ காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து விமர்சிப்பாரேயானால் 2016 சட்டமன்றத் தேர்தலில் எந்த அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்ற முழு விவரங்களையும் வெளியிட வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். இனிமேல், காங்கிரஸ் கட்சி கொள்கைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்த பிறகு இனியாவது சேர்ந்த கட்சிக்கு விஸ்வாசமாக இருங்கள் என்று அறிவுரை கூற விரும்புகிறோம்.