மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கும்போது, ராணுவ வீரர்களுக்கு மட்டும் சாதாரண வாகனங்களை அனுப்புவதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் உரையாடல் தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொளியில், குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கும் போதே நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியிருக்கும்போது, ஆபத்தான பணிக்கு சாதாரண வாகனத்தில் அனுப்புகின்றனர். அதிகாரிகள் நம் குடும்பங்களோடும் நம் உயிரோடும் விளையாடுகிறார்கள் என்று அவர்கள் உரையாடல் இருந்தது.
இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, மோடி அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களுக்குக் குண்டு துளைக்காத வாகனம் ஏன் தரப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தியாகம் செய்யும் எங்கள் வீரர்களைச் சாதாரண வாகனங்களில் அனுப்புகிறீர்கள். ஆனால், பிரதமருக்கு மட்டும் ரூ. 8,400 கோடியில் சிறப்பு விமானமா?என்று சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில் ‘ட்ராக்டர்’ பேரணி நடத்தியபோது, புதிய விவிஐபி விமானத்தை வாங்கி பல கோடி ரூபாய்களைப் பிரதமர் மோடி வீணாக்குவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த அளவுக்குப் பணத்தை லடாக்கில் உள்ள சீனப் படைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நம் ராணுவ வீரர்களுக்குச் செலவழிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு பக்கம் 8,400 ஆயிரம் கோடி ரூபாயில் 2 விமானங்களைப் பிரதமர் மோடி வாங்குகிறார். மறுபக்கம், நமது எல்லையில் இருக்கும் சீனப் படைகளிடமிருந்து நம் எல்லையைக் காக்க நமது ராணுவ வீரர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விமானங்களுக்குச் செலவிட்டதைவிட, எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் நம் வீரர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்.
2 விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான நடைமுறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொடங்கியதாகக் கூறி, விமானங்களை வாங்குவதை நியாயப்படுத்துகின்றனர். மாற்றியமைக்கப்பட்ட போயிங் 777 ரக விமானம் கடந்த 1 ஆம் தேதி வந்தடைந்தது. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு விவிஐபி-க்கும் இவ்வளவு செலவு செய்து விமானம் வாங்கப்பட்டதில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவுக்கு இந்த விமானம் வருவதில் 2 முறை தாமதமானது.
முன்னதாக, விவிஐபி-களுக்காக போயிங் 747 ரக விமானங்களை ஏர் இந்தியா வாங்கியுள்ளது. எனினும், அந்த விமானத்தில் சரியான தொலைத்தொடர்பு கருவியோ, உணர் கருவிகளோ, பறந்து கொண்டிருக்கும் போது ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வசதியோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.