” 19 வயது தலித் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கழுத்தை நெரித்து, இடுப்பு எலும்பை ஒடித்து இரக்கமே இல்லாமல் துடிதுடிக்கக் கொன்றிருக்கின்றன மனித வடிவில் உலாவும் கொடிய மிருகங்கள்…”
அந்தப் பெண் குட்டிப் பாவாடை அணியவில்லை, ஆபாசமான உடையை அணியவில்லை. பார்ட்டிக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பவில்லை, பாதுகாப்பு இல்லாமல் இல்லை.
உத்தரப் பிரேதசத்தின் ஹத்ராஸ் கிராமத்தில் தன் தாயுடன் அந்த பெண் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், பின்பக்கமாக பிடித்துத் தூக்கிச் சென்றுள்ளனர். தாய் கதறக்கதற அவர் கண் முன்னே தூக்கிச் சென்று சிதைத்திருக்கிறார்கள்.
கொடுமை அதோடு முடியவில்லை…
அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால், புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொண்டு போய் அதிகாரிகள் சேர்த்தனர். அங்கேயே உயிர் பிரிந்தது.
கொடுமை அதோடு முடியவில்லை…
இறந்துபோன பெண்ணின் உடலை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லாமல்,நேரே சுடுகாட்டுக்குச் சென்றனர் உத்தரப்பிரதேச காவல் துறையினர். அந்த பெண்ணின் உடலை எரியூட்டப் பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இதனால், பெற்றோரை ஓர் அறையில் அடைத்துவிட்டு, அந்த பெண்ணின் உடலை அவசர, அவசரமாகக் காவல் துறையினர் எரித்தனர். பெண் பத்திரிகையாளர் தனுஷ்ரி பாண்டேவும், சில உள்ளூர் பத்திரிகையாளர்களும் இதனை வீடியோ எடுத்தனர். இதனால்தான், நடந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிந்தது. இவர்கள் மட்டும் வீடியோ எடுக்காவிட்டால், அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று கதையை முடித்திருக்கும் உத்தரப் பிரதேச பாஜக அரசு.
தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி, பொய் செய்தி என்று முதலில் பாஜகவினர் கூறினர். அதன்பிறகு, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்தனர்.
இங்கு தான் கேள்வி எழுகிறது…
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின் சித்திரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை அவசர, அவசரமாக எரிக்க வேண்டிய அவசியம் என்ன? எதற்காக இதனை மூடி மறைக்க அதிகாரிகள் முயன்றனர். சமூக வலைத்தளங்களில் அழுத்தம் அதிகமாகவே, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தக் குழுவினர் எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்படுவார்கள் என்பதை யாரும் எளிதில் கணித்துவிடலாம்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அதன்பிறகு ஏதாவது மாற்றம் வந்துவிட்டதா?
கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கு, ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. இப்படியே முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையை என்ன சொல்வது?
சாதிக் குற்றங்கள் குறித்த விசாரணை தோல்வியில் முடிவதால், தலித் பெண்கள் எந்த அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. உயர் சாதியினரிடமிருந்து இருமடங்கு பாகுபாட்டை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த தேசம் பெண்களுக்கானது அல்ல என்பதை, ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண்ணுக்கு நடந்த கொடுமை மீண்டும் உறுதி செய்துள்ளது.
தலித் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடியவர்களை, மிருகங்கள், வெறி நாய்கள் என்று சொல்கிறோம். வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணின் உடலை எரித்த உத்தரப் பிரதேச காவல் துறையினரை என்ன சொல்வது?