விவசாய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தபோது, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
விவசாயிகளின் நிலையை மேம்படுத்த சுதந்திரத்துக்குப் பின் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நடவடிக்கை என்று ஆளும் கட்சியினர் பெருமிதம் அடைந்தனர்.
நிலச் சீர்திருத்தச் சட்டத்தையும் பசுமைப் புரட்சியையும் கொண்டு வந்து இந்திய விவாயத்துறையின் முகத்தையும், இந்திய விவசாயிகளின் வாழ்க்கையையும் மாற்றியதையும் கவனத்தில் கொள்ள இவர்கள் தவறிவிட்டனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 1952 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
மோதி நகர் பேச்சு:
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதும், 1952 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் மோதி நகரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை…
சகோதர, சகோதரிகளே, 2 நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாகாண முதலமைச்சர் பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த் என்னுடன் டெல்லியில் தங்கியிருந்தார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எப்படியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதோடு, இன்றைய நிகழ்ச்சியில் உங்களோடு இணைந்து பங்கேற்பதிலும் பெருமைப்படுகின்றேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேச மாகாணத்தில் அலகாபாத், பிரதாப்கர்,ஜான்பூர், ரேபரலி, சுல்தான்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் அலைந்து திரிந்திருக்கிறேன் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அப்போது, ஏழை விவசாயிகளின் அவல நிலை என் மனதில் பதிந்துபோனது. விவசாயிகளுக்கு ஜமீன்தாரி முறை தீங்கு விளைவித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் கண்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பே, ஜமீன்தாரி முறையை எதிர்த்து நாங்கள் குரல் கொடுத்தோம். பல ஆண்டுகள் எங்களது கடுமையான உழைப்பின் காரணமாக, அந்த இலக்கை அடைந்தோம். சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சவால்களும், அந்த ஆட்சியைத் தூக்கி எறிவதும்தான் எங்கள் முதன்மையான பணியாக இருந்தது” என்றார்.
புதுடெல்லி பேச்சு:
அதன்பிறகு, 1952 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி புதுடெல்லியில் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் நேரு ஆற்றிய உரை:
உத்தரப்பிரதேச மாகாண மக்கள் தொகை 6 கோடி முதல் 7 கோடி வரை இருக்கும். இதில் பெரும்பான்மையோர் விவசாயிகள். எனவே, ஜமீன்தாரி முறையை ஒழிப்பது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம், லட்சக்கணக்கான விவசாயிகளின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வழிவகுத்துள்ளது. மற்ற நாடுகளில் நடைபெறும் புரட்சிகளில் ரத்தமும் வன்முறையும் நிறைந்திருக்கும். ஜமீன்தாரி முறையை ஒழித்து உத்தரப்பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட அமைதித் தீர்மானம், மற்ற மாகாணங்களிலும்கூட பின்பற்ற அடிகோலியது. அப்போது, நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். நான் அன்றைய தினம் செய்தது, இந்தியா சுதந்திரம் அடைந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தியது.
இந்த மிகப் பெரிய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த நிலத்தில் வாழ்வது தான் நிலப் பிரச்சினையாக இருந்தது. ஜமீன்தாரி முறையை ஒழித்ததால் நிலப் பிரச்சினை தீர்ந்ததாகவோ, அதனை நாங்கள் சாதித்தோம் என்றோ அர்த்தம் இல்லை. எங்கள் பாதையில் தடையாக இருந்தவற்றை ஓரளவு அகற்ற ஜமீன்தாரி முறை ஒழிப்பு பயன்பட்டது. விவசாயிகளின் முதுகில் ஏற்றப்பட்டிருந்த சுமையை இறக்கி வைத்துள்ளோம். ஆனால், நாம் மற்றொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது. தேவைப்பட்டால், விவசாயிகளின் நிலையை மேம்படுத்த புதிய சட்டங்களையும் கொண்டு வரலாம்..
ஜமீன்தாரி முறையை ஒழித்தவுடன், ஏராளமான விவசாயிகளுக்குச் சிறிதளவு நிலம் கிடைத்தது. ஆனால், இன்றும் ஒரு சிலர் பெருவாரியான நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இது நிலம் தொடர்பான விசயம் மட்டுமல்ல, கொள்கை சார்ந்த விசயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நகரம் மற்றும் கிராமங்களில் நிலத்தில் உழைத்தாலோ அல்லது வியாபாரம் செய்தாலோ, அங்கு வாழ்வோர் சரிசமமான வாழ்க்கைக்கு படிப்படியாக மாறவேண்டும் என்பதையே விரும்புகின்றோம்.
எவ்வாறாக இருந்தாலும், நம் லட்சியத்தை அடைய நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். உதாரணத்துக்கு, உத்தரப்பிரதேசத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதும், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, எதிர்காலத்தில் எந்த ஒரு தனி நபரும் 30 ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வைக் களையும். இதேபோன்று, காஷ்மீரில் கொண்டு வரப்பட்டுள்ள நிலச் சட்டம், விவசாயிகளுக்கான நிலப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து வைத்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். பல நூற்றாண்டுகளாக ஏழைகளாகவும் அடித்தட்டு மக்களாகவும் இருந்த விவசாயிகள் இந்துக்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும், அவர்கள் முகத்தில் புதிய ஒளியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்த நிலம் நமக்குச் சொந்தமானதா? என்ற நம்பமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படும். இவ்வாறு அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.
சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகள் மேம்பாட்டுக்காக முதன்முறை சட்டம் கொண்டு வந்தது யார்? என்று இப்போது புரியும்.
நேருவின் இத்தகைய உரையை மறைத்துவிட்டுத் தான், பாஜகவினர் தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, கடந்த கால வரலாற்றை மறைக்க முயல்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் .
”யார் கேட்கப் போகிறார்கள்?”.