தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு
மங்கையர்கள் சுற்றிவந்து மங்கலமாய்க் கோலமிட்டு
திங்களென்றும் சிங்கமென்றும் சீராட்டிப் பேருரைத்து
திருநாள் அலங்காரச் சிலைபோ லலங்கரித்து
வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும் மகனாக வந்ததில்லை!
வண்ணமலர்த் தொட்டிலிலே வடிவம் அசைந்ததில்லை!
வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருமரபில்
ஏழைமகன் ஏழையென இன்னமுதே நீ பிறந்தாய்!
நிமிர்ந்தால் தலையிடிக்கும், நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஓர் குடிலில் ஐயா நீ வந்துதித்தாய்!
“தங்கமே….! தண்பொதிகைச் சாரலே…..! தண்ணிலவே….!
சிங்கமே…!” என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை!
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே!
நாட்டுக்குப் பாடுபட நாடிவந்த வீரர்பலர்
வீட்டுக்கே பாடுபட்டார்! வீணுக்கே கோஷமிட்டார்!
அந்திபகல் நாடு, அரசாங்கம், பொதுப்பணிகள்
என்றுலவ நீயும் இந்நாட்டில் வந்துதித்தாய்!
– கவியரசர் கண்ணதாசன்