இப்படியோர் நல்ல மகன் எங்கு பிறந்தான் – நம்
இந்தியத் தாய் செய்த தவம் இங்கு பிறந்தான்!
கண்ணீரில் பிறந்தவன் என்று கூறுங்கள் தோழியரே – நாட்டைக்
கண்ணீரால் காத்தவன் என்று சொல்லுங்கள் தோழியரே!
தாய்ப்பாலில் தேசபக்தி உண்டவன் அவனடியோ – அன்னை
தாலாட்டில் விடுதலை வேகம் கொண்டவன் அவனடியோ!
போராடி விடுதலை தந்த புத்தன் அவனடியோ –
நாட்டைப் பொன்னாக மாற்றியமைக்கும் சித்தன் அவனடியோ!
ஒருவீடும் சொந்தமென்று வாங்கியதில்லையடி – இந்தத்
திருநாடே சொந்தமென்று தங்கிய மன்னனடி!
வாராத பதவிகள் எல்லாம் வாசலில் நின்றதடி – எட்டிப்
பாராமல் சேவை புரிந்தான் பாரத வீரனடி!
சந்நியாசி கோலம் கொண்ட சமரச ஞானியடி – அவன்
சந்தோஷம் பிள்ளைகளுக்கு நல்கும் கல்வியடி!
பாசமகன் சிறையில் இருந்தான் பன்னிரெண்டாண்டு – ஒரு
பத்தாண்டு வாழவைத்தான் மண்ணினை ஆண்டு!
ஆசையுடன் தமிழருக்கு அறிவினைத் தந்தான் – ஜாதி
அத்தனையும் ஒன்று என்னும் உயர்வினைத் தந்தான் !
அல்லும் பகலும் சிந்தனை செய்தான் அவனம்மா – இவன்
ஆக்கிய அளவில் ஆக்கிய தலைவன் எவனம்மா!
காலம் பார்க்க அவனுக்கில்லை கைக்கடிகாரம் – நல்ல
காலத்தைத்தான் நிர்ணயிக்கும் அவன் அதிகாரம் !
சத்தியமாய் நாட்டினையே பார்த்த கண்ணாடி – அந்தத்
தலைவனுக்கே பூஜை செய்யத் தயக்கம் என்னடி?
மண்ணாசை பொன்னாசை மன்னனுக்கு இல்லையடி – ஒரு
மகராசி கைப்பிடிக்கும் எண்ணமும் இல்லையடி!
கல்விக்கூடம் அத்தனையும் அவன்பேர் சொல்லும் – அவன்
கள்ளம் கபடம் இல்லாதவன் என ஊர் சொல்லும்!
கண்ணாரக் கண்டதடி ! கற்பனைகள் இல்லையடி! – அந்நாளில்
பெருந்தலைவர் ஆட்சி சொன்ன சேதியடி!
எத்தனையோ கோடிகளைக் கொடுத்த கையடி – அது
தனக்கு என்று ஒருபொழுதும் எடுத்த தில்லையடி!
எவ்வளவோ ஆனந்தமாக இருக்கவேண்டிய நீ
நாட்டுக்காகவே அனைத்தையும் துறந்தாய்!
அவன் இல்லையேல் ஏழைக்கு வாழ்வில்லை!
அவன் இல்லையேல் தேசத்திற்கு எதுவுமே இல்லை!
பாழ்பட்டுக் கிடந்தது பாரததேசம் , வாழ்விக்க வந்தார் காந்தி!
அந்த வாழ்வை வகைப்படுத்த வந்தவன் நீ!
நாம் காமராஜ் என்னும் தெய்வத்தின் குழந்தைகள் !
அந்தக் கருணை முனிவனின் சீட கோடிகள்!
போர் வந்த போது பாரத சேனை போகின்ற வழியை ஆக்கிய வீரன்!
நேருவின் பின்னால் யார் என நாடு ஏங்கியவேளை தாங்கிய மன்னன் !
அவரை நான் தாயாகப் பார்த்தேன் ; தந்தையாகப் பார்த்தேன்;
தெய்வமாகப் பார்த்தேன்; அதன்பிறகுதான் தலைவராகப் பார்த்தேன்!
அவனை வழிபடுவோம்! அவன் புகழ் பாடுவோம்!
வாருங்கள்! வாருங்கள் !
– கவிதை வரிகள் : கவியரசர் கண்ணதாசன்
அருமையான அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா அ. மணிகண்டன் தலைவர் செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி