இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம்.
தமது பாட்டு திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த பேராற்றல்மிக்க திரு. எஸ்.பி.பி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது விரைவில் குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 51 நாட்கள் கடும் முயற்சிக்குப் பிறகும் மீட்க முடியாமல் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களது இழப்பு என்பது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் ? அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர் பெருமக்களுக்கும், திரையுலகத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.