குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த தலைவர்’ என்று வர்ணித்தார். அரசுப் பொறுப்புகளில் பிரணாப் முகர்ஜி எட்டிய சாதனைகள் சந்தேகத்துக்கு இடமின்றி சிறப்பானவைதான். இந்நிலையில், தன்னிடம் நிதி அமைச்சராகப் பணியாற்றிய பிரணாப் முகர்ஜியைவிட, பாரத ரத்னா விருதுக்கு மன்மோகன் சிங் தகுதியானவரா? என்று இங்கே ஒரு புதிரான கேள்வி எழுப்பப்படுகிறது.
பிரணாப் முகர்ஜி இரு முறை மத்திய நிதி அமைச்சராக இருந்தவர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்களால் புதிதாக மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த பின்னோக்கிய வரிச் சட்டம் இந்தியாவின் நிதிக் கொள்கையில் பெரும் நம்பிக்கையை இழக்கக் காரணமாக இருந்தது. 1970-களில் இந்திரா சகாப்தத்தின் சோசலிச உணர்வாளராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி.
1991 ஆம் ஆண்டு நிதி அமைச்சரான மன்மோகன் சிங் முற்றிலும் மாறுபடுகிறார். நிதி அமைச்சரானதும் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். புத்திசாலியான அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் ஆதரவுடன், பல ஆண்டுகளாக கட்டுப்பாடுகளில் சிக்கியிருந்த பொருளாதாரத்தை தைரியமாக விடுவித்தார். 1991 ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட தருணமாக மாறியது. மன்மோகன் சிங் தாராளவாத சீர்திருத்தவாதியாக இருந்தார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், 20 கோடியே 71 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து மேலே வந்ததாக ஐ.நா. தெரிவித்தது. தற்போது ஏழைகளுக்கு ஆதரவான பல திட்டங்கள் மோடி அரசால் செயல்படுத்தப்படுவதற்கும், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நிதி சேர்க்கை ஆகிவற்றுக்கும் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் அடித்தளம் போடப்பட்டது. மன்மோகன் சிங் மீது நேரடி குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. அரசியலையும் குடும்பத்தையும் தொலைவிலேயே வைத்து, அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.
பொதுவாக, பாரத ரத்னா விருது அரசியல்வாதிகளுக்கு வழங்கக் கூடாது என்றும், பெரும் தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி போன்ற புகழ்பெற்ற குடிமக்களை மதிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு. எனினும், ஓர் அரசியல்வாதியை நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதுக்கு அரசியல் கசப்புணர்வுக்கு அப்பாற்பட்டு மோடி அரசு தேர்வு செய்ய விரும்பினால், பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு மன்மோகன் சிங்கை விட சிறந்த நபர் யாரும் இருக்க முடியாது.