புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்தவர்கள் விவரங்கள் இருந்தபோதிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது.
கடந்த ஜுன் 13 ஆம் தேதி மனித உரிமைகள் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்துக்கு அளித்த விண்ணப்பத்தில், பொது முடக்கத்தையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், எத்தனை பேர் இறந்தார்கள்? அவர்களது பட்டியல் வேண்டும் என கேட்டிருந்தார்.
கடந்த ஜுலை 7 ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் அவருக்கு அளித்த பதிலில், இது குறித்த தகவல் மாநில காவல் துறையிடம் இருப்பதால், அவர்களிடமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது.
அதேசமயம், காங்கிரஸ் எம்பி., உத்தம் குமார் ரெட்டி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சகம், மாநில அரசுகள் அளித்த தகவல்களின்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி வரை, சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 97 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த ரயில்வே அமைச்சகம், 87 உடல்களை மாநில காவல்துறை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இதில் 51 பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்துள்ளன. மாரடைப்பு, இதயக் கோளாறு, மூளை ரத்தக்கசிவு, நாள்பட்ட நோய்கள், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக இறந்துள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
கேள்வி இதுதான்:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் கேட்ட கேள்விக்கு ரயில்வேத்துறை அமைச்சகம் ஏன் தகவல் தரவில்லை?. மாநில காவல் துறையிடம் தகவல் அறிந்துகொள்ளுமாறு கூறியது ஏன்?.
இது பற்றி பரத்வாஜ் கூறும்போது, நோயின் பெயர்கள், இறப்பு நடந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் எண் மற்றும் பெயர், இறந்த தேதி…இதெல்லாம் பதில் இல்லை.
வெளிப்படைத்தன்மையுடன் ரயில்வே அமைச்சகம் பதில் அளிகாதது ஏன்? நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும் முன்பே, ரயில்வே அமைச்சகம் தேவையான ஆவணங்களை வைத்திருந்தது. நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும் பாஜக அரசு, மக்களுக்கு பதில் அளிக்காமல் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று குற்றம் சாட்டினார்.
சிறப்பு ரயில்களில் 80 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக கடந்த மே 30 ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்குப் பதில் அளித்த ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ், ஊடகச் செய்தியை ஒத்துக் கொண்டார். எண்ணிக்கையை மட்டும் உறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். சில வாரங்கள் கழித்து பேட்டியளித்த அவர், சிறப்பு ரயில்களில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்கள் ரயில்வே இழப்பீடு வழங்கும் தீர்ப்பாயம் மூலம் இழப்பீடு கோரலாம் என்று அறிவித்தார்.
ஆனால், இதுவரைக்கும் சிறப்பு ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக அறிகிறோம். அவர்களது குடும்பத்தினர் நிலைமை என்னவாகும்?. சிறப்பு ரயிலில் இறந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றால், இறந்தவரின் உறவினர்கள் இழப்பீடு கோர முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மறுத்தால், தன் குடிமக்களிடம் இருந்து அரசு தப்பி ஓடப் பார்க்கிறது என்று தான் அர்த்தம்.