முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வர்த்தக அமைச்சர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என மிகமிக முக்கிய பொறுப்புகளை வகித்து இந்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு முன்னணிப் பங்கு வகித்தவர். ஆட்சி நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தவர். அவரிடம் எந்த கோப்புகளும் காலதாமதமானதாக எவருமே கூற முடியாது. விரைந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றல்மிக்கவர். அவரது முடிவுகள் அனைத்துமே நாட்டு மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். எந்த தனிப்பட்ட நபரின் நலனை விட நாட்டின் நலனை மிக உயர்வாக கருதுபவர்.
தமிழகம் மத்திய அரசிற்கு பல திறமைசாமிகளை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் நேரு தலைமையில் அமைந்த முதல் ஆட்சியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பிற்காலங்களில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் நிதியமைச்சராக இருந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த வரிசையில் நீண்டகாலம் நிதியமைச்சராக இருந்து 9 நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்து பெருமை பெற்றவர் ப. சிதம்பரம்.
சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக ஏறத்தாழ 25 ஆண்டுகள் பணியாற்றியவர். அதில், 21 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்திருக்கிறார். இதன்மூலம் அந்த தொகுதி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர்.
1991 இல் பி.வி. நரசிம்மராவ் பொறுப்பேற்ற போது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், வர்த்தகத்துறை அமைச்சர் ப. சிதம்பரம். அன்று தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கை என்கிற புதிய பாதையில் பிறகு வந்த அரசுகள் இன்றுவரை அதே பாதையில் தான் பயணிக்கின்றன. 1991 இல் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திரு. ப. சிதம்பரம் அவர்கள் சேலத்தில் சிறுதொழில் முனைவோர் மாநாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றி உரையாற்றினார். அந்த உரையை கேட்ட நான் உடனடியாக அதனுடைய ஒலிநாடாவை பெற்று அந்த கருத்துக்களை நூலாக வடித்து வெளியிட முடிவு செய்தேன். அந்நூலை மக்கள் தலைவர் மூப்பனார் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டு பெருமை சேர்த்தார். அதைத் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஆற்றிய உரைகளை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளேன். அதில் ஒருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி எடுத்த முயற்சியால் அவரது உரை நூலாக வெளியிடப்பட்டது.
அதேபோல, 2008 இல் தேசிய முரசு மாதம் இருமுறை இதழ் தொடங்கப்பட்டதில் இருந்து மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அவர் ஆற்றிய உரைகளையும், ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களையும் பெருமளவில் வெளியிட்டிருக்கிறேன். அந்த வகையில் திரு. ப. சிதம்பரம் அவர்களின் கருத்துக்களை வேறு எவரையும் விட அதிகளவில் வெளியீடுகள் மூலமாக கருத்துக்களை பரப்பியவன் என்கிற பெருமை எனக்கு உண்டு. அந்த வகையில் திரு. ப. சிதம்பரம் அவர்களுடைய கருத்துக்கள் நாட்டு மக்களுக்கு அவசியம் சேர வேண்டுமென்ற நோக்கத்தில் அந்த முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.
நாட்டு நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளின் மூலமாக இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு அரும்பணியாற்றிய திரு. ப. சிதம்பரம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாளில் வாழ்த்துக்களை கூறி போற்றுகிற வகையில் சீர்திருத்தச் செம்மல் – 75 என்ற தலைப்பில் இந்த சிறப்பு கட்டுரை வெளியிடப்படுகிறது. இந்த கட்டுரை அன்று எக்கனாமிக் டைம்ஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வெளிவந்ததை மொழி பெயர்த்து 2013 ஆம் ஆண்டு மார்ச் மாத தேசிய முரசு இதழில் வெளியிட்டேன். அதையே மீண்டும் இப்போது வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.
இன்றைய காலசூழலில் அவருக்கு நேரிடையாக வாழ்த்துக்களை கூறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் தேசியமுரசு டாட் காம் சார்பாகவும், என் சார்பாகவும் அவருக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய வர்த்தக அமைச்சர் ப.சிதம்பரம் 02.02.1992இல் சேலம் கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலிருந்து…
எல்லோரும் ஒரு விதியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்! அந்த விதி என்ன? Free Trade – வர்த்த கம் சுதந்திரமாக நடக்கவேண்டும். வர்த்தகத்தின் கைகளிலோ, கால்களிலோ, தளைகளையும், காப்புகளையும் போட்டு வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது.
இதைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும்; இதற்கு இந்த விலை வைக்கவேண்டும்; இந்தத் தரம் இருக்கவேண்டும்; இந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்; இதைத்தான் நீ இறக்குமதி செய்யலாம் என்று உத்யோக் பவனில் இருந்துகொண்டு ஒரு துணைச்செயலாளரோ, இணைச்செயலாளரோ உத்தரவு போட்டுகொண்டி ருந்தால், அங்கு வர்த்தகம் நடக்காது! விவகாரம்தான் நடக்கும்!
எனவே வர்த்தகம் சுதந்திரமாக நடக்கவேண்டும். எதை வாங்குவது? எதை விற்பது? என்ன விலைக்கு வாங்குவது? என்ன விலைக்கு விற்பது? – யாருக்கு விற்பது? யார் விற்பது? எங்கே விற்பது? எந்த அளவு விற்பது? என்பதை யெல்லாம் சுதந்திரமாகச் சந்தை தீர்மானிக்க வேண்டும்.
சிதம்பரத்தின் முக்கிய சீர்திருத்தங்கள்
- 2004 : அடுத்த மூன்று ஆண்டுகளில் வேளாண் கடன் இரட்டிப்பாக்கப்படும் என்று உத்தரவாதம். இந்த இலக்கை ஓரான்டு முன்பாகவே இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றிச் சாதனை.
- 2005 : வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் : ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுப்பவர்களிடம் 0.01 சதவிகிதப் பணம் வரி வசூலிக்கப்படும்.
- 2007 : மூத்த குடிமக்களுக்கு எதிர் அடமான சலுகை.
தன்னாட்சி கடன் மேலாண்மை அலுவலகம் - 2008 : பொதுத்துறை – தனியார் துறை கூட்டு முயற்சியில் திறன் மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு.
சிதம்பரத்தின் ஜனரஞ்சகத் திட்டங்கள
- 2004 : தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது இந்தியாவிலுள்ள கிராமப்புற மாவட்டங்களான 693க்கும் நீட்டிக்கப்பட்டது.
- 2008 : தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 3.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூபாய் 65 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- 2008 : ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஊதிய நிலுவைத் தொகை உட்பட அரசுக்கு ரூபாய் 47ஆயிரத்து 500 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
வரி விதிப்புகள்
- 2004 : பங்குச் சந்தையின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் 0.15 சதவிகித பங்கு பரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.
- 2005 : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு பொருள்களில் ஏதேனும் இரண்டு பொருள்களை எவரேனும் வைத்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியாக வேண்டும். மின்சாரத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரம் செலுத்துவதும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- 2006 : அதிக மதிப்புகொண்ட பரிமாற்றங்களுக்கு நிரந்தர கணக்கு எண் அட்டை கட்டாயமாக்கப்பட்டது.
- 2008 : யூக வணிகம் மற்றும் பொருள்கள் மீது பரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.
வரி சலுகைகள்
- 2004 : நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டது; குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
- 2007 : இந்திய பரஸ்பர நிதி மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்ய தனிநபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கூடுதல் வரி வருவாய்கள்
- 2004 : அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவிகிதக் கூடுதல் வரி.
- 2005 : தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரி மேலும் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.
வழிகாட்டும் திருக்குறள்
சிதம்பரம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கைகளில் வரி விதிப்புகள் கூட இடம்பெறாமல் இருக்கலாம், ஆனால், திருக்குறள் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது.
2006ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து அவர் பேசியபோது, “கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை நான் அறிவேன். எங்கள் அரசு கருணை உள்ள அரசு ஆகும். அதேநேரத்தில் அரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய குழப்பமான நேரங்களில் எனக்கு …..
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
(பொருள் : தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது) என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது” என்று கூறினார்.
1996ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, “நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முடித்த பின்னர், எதற்காக இந்த பட்ஜெட் என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். இது நமது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான கருவி என்பது ஒருபுறமிருக்க , மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகளை எதிரொலிக்கும் கண்ணாடியாகவும் திகழ்கிறது. மன்னரின் மந்திரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விதியை திருவள்ளுவர் வகுத்திருக்கிறார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
(பொருள் : பொருள் வரும் வழிகளை மென்மேலும் அதிகரித்தலும், அவ்வாறு வந்த பொருளைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைக் காத்தலும், பின்னர் அவற்றை முறையாக வகுத்து செலவிடுதலும் தான் ஒரு நல்ல அரசருக்கு அடையாளம் ஆகும்) என்று திருவள்ளுவர் தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
1997ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, மன்னர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த குறளை மேற்கோள் காட்டினார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
(பொருள்: தவறுகளைக் கண்டித்து திருத்துவதற்கு ஆள் இல்லாத மன்னன், எதிரியே இல்லாவிட்டாலும் கெட்டு விடுவான்.)