பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சி செய்து அனைத்துத் துறைகளிலும் எத்தகைய சிறப்பான நிர்வாகம் நடைபெற வேண்டுமென்று செயல்படுத்திக் காட்டியதால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்தது. அதனால் அவரது ஆட்சிக்காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். எனவே, காமராஜர் குறைவான நிதி ஆதாரங்களோடும், அமைச்சர்களோடும் நிகழ்த்திய ஆட்சி முறையை மீண்டும் தமிழகத்தில் அமைத்து, அராஜக, ஊழல் சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் அனைத்துக் காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் பிறந்தநாளில் உறுதி எடுத்துக் கொண்டார்கள். இந்த உறுதியை நிறைவேற்றுகிற வகையில் அனைத்துக் காங்கிரஸ் கட்சியினரும் அன்னை சோனியா, தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வழிகாட்டுதலோடு நிச்சயம் நிறைவேற்றியே தீருவார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறதே?
ஏற்கனவே, கர்நாடகத்தில் 22 சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது. அதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் நவீன மிர்ஜாபராக மாறிய ஜோதிராதித்ய சிந்தியாவைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது ராஜஸ்தானில் பெரும்பான்மை பலத்துடன் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மீண்டும் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்திற்கு சிந்தியா கிடைத்தார். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டிற்கு வலை வீசியிருக்கிறார்கள். ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கெலாட் தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
சச்சின் பைலட் இளைஞர். திறமையானவர் என்று கூறி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதே என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். சச்சின் பைலட் 26 வயதில் மக்களவை உறுப்பினராகவும், 32 வயதில் மத்திய அமைச்சராகவும், 37 வயதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், 41 வயதில் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராகவும் தொடர்ந்து பதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது. இதற்கு பிறகும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இல்லையென்று கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
சச்சின் பைலட்டைப் பொறுத்தவரை இளைஞராக இருப்பதால் பொறுமையோடு பொறுத்திருந்தால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. அரசியலில் காத்திருக்கப் பழகுதல் என்பதை சச்சின் பைலட் கடைபிடிக்கவேண்டும். கடைபிடிப்பாரா அல்லது பா.ஜ.க. வலையில் வீழ்ந்து விடுவாரா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் எது எப்படியிருந்தாலும் கெலாட் தலைமையிலான ஆட்சி நீடிப்பதை எவரும் தடுக்க முடியாது.
தமிழக காங்கிரஸ் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திய குமுதம் பத்திரிகை எதிர்ப்பு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறதே?
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேராண்மையுடன் அறிவித்த அனைத்துப் போராட்டங்களும் வெற்றி மேல் வெற்றி பெற்று வருகின்றன. எந்தப் போராட்டமும் இன்னொரு போராட்டத்திற்கு சளைத்தது அல்ல என்ற வகையில் போட்டிப்போட்டுக் கொண்டு வெற்றி பெற்று வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசின் இலவச மின்சார பறிப்புக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் விவசாயிகளின் இதயத்தில் காங்கிரஸிற்கு இடம் கிடைத்திருக்கிறது. அதே போல பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் தமிழக காங்கிரஸை மக்கள் திரும்பி பார்க்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸின் இதயமாக விளங்குகிற மக்கள் தலைவர் ராகுல்காந்தியை கேலிச்சித்திரம் மூலம் கொச்சைப்படுத்திய குமுதம் குழும இதழ்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பை நூற்றுக்கணக்கான இடங்களில் நிறைவேற்றி காங்கிரஸ் கட்சியினர் சாதனை படைத்திருக்கின்றார்கள். பத்திரிகை தங்கள் கையில் இருப்பதால் எவரையும் கொச்சைப்படுத்தி விடலாம் என்ற குமுதத்தின் அராஜக ஆணவப் போக்குக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் சரியான சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். இப்போது காங்கிரஸ் கட்சி என்றால் என்ன என்று குமுதம் நிர்வாகம் புரிந்து கொண்டிருக்கும்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஃப்ளாய்டின் மரணமும், தமிழகத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தந்தை, மகன் படுகொலையும் ஒப்பிட்டுப் பேசப்படுகிறதே?
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக உலகத்தின் கவனத்தை ஈர்த்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. ஆனால், அதற்காக நீதி கேட்டு சாத்தான்குளம் பகுதி மக்களும், வணிக அமைப்புகளும், சமூக ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் ஓங்கி குரல் கொடுத்ததினால்தான் மதுரை நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்திருக்கிது. மதுரை நீதிமன்ற நீதிபதிகள் சாத்தான்குளம் வழக்கில் நேரிடை கண்காணிப்பின் மூலம் தீவிரம் காட்டியதின் விளைவாகத்தான் சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் பிறகு சி.பி.ஐ. விசாரணையும் நேர்மையாக நடைபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால் சாத்தான்குளம் படுகொலையை குழிதோண்டி புதைத்து காவலர்களை பாதுகாத்திருப்பார்கள்.
காவல் நிலையப் படுகொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவது ஏன்?
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் சிறைப் பாதுகாப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 452. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 35 பேர். தமிழகத்தைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் எந்த விசாரணையிலும் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை அறியமுடியாத நிலையேற்பட்டு வருகிறது. சட்டத்திற்கு புறம்பான விசாரணை முறைகளை கையாள்வதின் காரணமாகவே சிறைப் பாதுகாப்பில் இருக்கும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்கின்ற வகையில் பல்வேறு நீதிமன்றங்கள் பரிந்துரைகள் வழங்கினாலும், அவை நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. ஆனால், சாத்தான்குளம் படுகொலை வழக்கு காவலர்களின் அராஜகத்திற்கு முடிவு கட்டுமென்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவை தி.மு.கழகம் மிகச்சிறப்பாக கொண்டாடிப் பெருமை சேர்த்திருக்கிறதே?
தி.மு.கழகத் தலைவர் கலைஞர் உயிரோடிருந்தால், நாவலர் நூற்றாண்டு விழாவை எப்படி நடத்தியிருப்பாரோ, அதற்கு சற்றும் குறையாமல் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் சிறப்பான முறையில் கொண்டாடியிருக்கிறார்.
1969 இல் அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு, தி.மு.கழகத்திற்கு கடும் சோதனை ஏற்பட்டது. அந்தச் சோதனையிலிருந்து மீண்டு தி.மு.கழகத்தின் தலைவராக கலைஞர், பொதுச்செயலாளராக நாவலர், பொருளாளராக மக்கள் திலகம் எம.ஜி.ஆர். ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு ஒற்றுமை காக்கப்பட்டது. கலைஞரின் தலைமையை நாவலர் ஏற்றுக்கொண்டார். இதில் நாவலரின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியது.
தி.மு.கழகத்தில் பல சொற்பொழிவாளர்கள் இருந்தாலும் நாவலரின் பேச்சு தனித்தன்மை மிக்கது. வலுவான வாதங்களும், நையாண்டியும் கலந்த அவரது பாணி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசியலில் நீண்ட நெடுங்காலம் தமது பேராற்றல் மூலமாக பவனி வந்த நாவலருக்கு முரசொலி சிறப்பு மலர் வெளியிட்டு புகழ்மாலை சூட்டியிருக்கிறது. இவ்வகையில் வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிட்ட அ.தி.மு.க. வைவிட, தி.மு.கழகம் பல மடங்கு கூடுதலாக நாவலர் நூற்றாண்டு விழாவை பார் போற்றும் வகையில் செய்த தளபதி ஸ்டாலின் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவரது முதிர்ச்சிமிக்க தலைமைப் பண்பு வெளிப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் விரைவில் குணமடைய வேண்டுமென மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறாரே?
இந்தச் செய்தியை சுமந்த் சி ராமனும், சாதி எதிர்ப்பாளர்களும் பார்க்கவில்லை போலும். பார்த்திருந்தால் சாதிப் பெயரை எப்படி வெளிப்படுத்தலாம் என்று கேள்விக் கணைகளை தொடுத்திருப்பார்கள். தப்பித்தார் மாணிக்கம் தாகூர்.
129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்ததை பா.ஜ.க. நியாயப்படுத்துகிறதே?
இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் வழிவந்த பா.ஜ.க. நோக்கமாகும். ஆனால், கைது செய்யப்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் சிலரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. தமிழக ஆளுநர் ஆணையின் மூலமாக மீண்டும் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவும் புழல் சிறையில் உள்ள சிறார் சிறையை சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுப்பு முகாமில் அடைத்து வைத்தது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதன் விளைவாக தற்போது 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களும் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை சூளையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹஜ் சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எழுந்த கண்டனக் குரலுக்கு கிடைத்த வெற்றி என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியது மிகுந்த பொருத்தமானதே.