நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை வெளியிட்ட சூர்யா, அதில் நீதிமன்றத்தை விமர்சித்துள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை மூத்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேசமயம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது நீதிமன்றத்தை சர்ச்சைக்குள் சிக்க வைக்கும் என, தலைமை நீதிபதி சாஹிக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளில் தமது உறுதியான கருத்துகளை பிரபல நடிகர் சூர்யா தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா, ”நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா தொற்று இருக்கும் பேரிடர் காலத்தில் கூட, தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்வி முறையை சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிலையை அறியாதவர்கள் கல்விக் கொள்கையை வகுக்கிறார்கள்.
கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், அச்சமின்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடுகிறது. நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்து ஊடகங்கள் ஒரு நாள் மட்டும் விவாதிக்கும். சில சாணக்கியர்கள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மீது தவறு கண்டுபிடிப்பார்கள். மக்கள் ஓரணியில் திரண்டு சாதாரண மக்களின் மருத்துவர் கனவு தகர்க்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும். நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் தற்கொலைகள் மீண்டும், மீண்டும் தொடரும். நம் அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை இனியும் வாய் மூடி மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்கள் குழந்தைகளின் தரத்தையோ, தகுதியையோ சோதிக்கும் தேர்வுகளை அனுமதிக்க முடியாது. நீட் போன்ற நியாயமற்ற தேர்வுகளுக்கு நம் குழந்தைகள் தயாராகும் போது, அவர்களுக்கு வெற்றி, தோல்வி இரண்டையும் பெற்றோர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை யூட்யூப்பில் பார்த்ததாகவும், இது நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சூர்யாவின் தமிழ் அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தலைமை நீதிபதி சாஹிக்கு மூத்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ”நம் நாட்டின் நீதித்துறை அமைப்பை தவறான வகையில் விமர்சிப்பதன்மூலம், குறைத்து மதிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. இதுபோன்ற கருத்துகளால் நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மனித உரிமை செயற்பாட்டாளரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்ரி திபாக்னே கூறும்போது, ”நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு நடிகர் சூர்யாவின் அறிக்கையில் தவறு ஏதும் இல்லை. குறிப்பிட்டு எந்த ஒரு நீதிபதியின் பெயரையோ அல்லது நீதிமன்றத்தின் பெயரையோ அல்லது இழிவுபடுத்தும் கருத்துகளையோ கூறவில்லை. அவர் ஒரு சமூக சிந்தனையுள்ள நடிகர். கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாதது உண்மைதான். நீதிமன்ற விசாரணை நேரிடையாக நடத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்தும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தான் விசாரணை நடக்கிறது. நீதித்துறைக்கு சகிப்புத்தன்மை வேண்டும்” என்றார் .
இதற்கிடையே, ‘நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, கே.சந்துரு, கே.என். பாஷா, டி.சுதந்திரம், டி, ஹரிபரந்தாமன், ஏ.கண்ணன் மற்றும் ஜி.எம். அக்பர் அலி ஆகிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தலைமை நீதிபதி சாஹிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்போது ஏற்படும் சூழ்நிலையில், அது குறித்து கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அகரம் பவுன்டேசன் மூலம் நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் படிக்க சூர்யா உதவி செய்து வருகிறார். நீதிமன்றம் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதால், இதனை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை” என்று அவர்கள் கூறியுள்ளனர்.