பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரபர்த்தியை போதைப் பொருள் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் ரியா சக்கரபர்த்தி, அவரது சகோதரர், ராஜ்புத்தின் மேலாளர் ஆகியோர் மீது போதை மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு துறை துணை இயக்குனர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா தலைமையிலான அதிகாரிகள், நடிகை ரியாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் விசாரணை முடிந்ததும் அவரை கைது செய்து, காணொலி மூலம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.
மேலும் ரியாவிடம் விசாரிக்க அனுமதி கோராவிட்டாலும், ரியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு போதைத் தடுப்பு துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, நடிகை ரியாவை செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மாஜிஸ்திரேட் டிஜி. முத்தா அசோக் ஜெயின் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
போதைப் பொருள் தடுப்புத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ராகேஷ் அஸ்தானா. சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இருந்தபோது, அவரின் கீழ் பணியாற்றியவர்தான் ராகேஷ் அஸ்தானா. அப்போது, லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய பா.ஜ.க. அரசு பீகார் தேர்தலை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. முதலில் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் ரியாவை சம்மந்தப்படுத்த மத்திய புலனாய்வுத்துறை பகீரத முயற்சி செய்தது. அதற்கு எந்த சாட்சியமும் கிடைக்காத நிலையில் சுஷாந்த் பணத்தை கோடிக்கணக்கில் அபகரித்ததாகவும், அதை வைத்து அந்நிய செலாவணி பரிவர்த்தனை வழக்கில் சிக்க வைக்க அமலாக்கத்துறை முயற்சி செய்தது. ஆனால், எதற்குமே ஆதாரமில்லாத நிலையில் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் வாங்கிக் கொடுத்ததாக தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ரியா கைது செய்யப்பட்டதும், அது குறித்த முதல் கருத்து பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேயிடம் இருந்து வந்ததுதான் இந்த வழக்கின் நோக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதையும், பீகார் தேர்தலை மனதில் வைத்தே இந்த நடவடிக்கை என்றும் சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தேர்தல் நேரத்தில் அவரது மரணத்திலும் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக, பீகார் மாநில எதிர்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டின.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயின் ட்வீட் செய்தியில், ‘போதைப் பொருளுக்கு அடிமையான ரியாவுக்கு கடந்த 7 ஆண்டுகளாக 5 முன்னணி மன உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு முறை ரியா தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனிப்பட்ட ஒரு பெண் மீது மத்திய அரசின் 3 புலனாய்வு அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருப்பது நீதியின் பரிதாபம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை, ரியாவின் வழக்குரைஞர் மறு ட்விட் செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் வெளிவரும் வயர் என்கிற இணைய இதழின் நிறுவனர் மற்றும் அரசியல், பொருளாதார விமர்சகர் எம்.கே.வேணு தமது ட்விட்டர் பதிவில், ‘பீகார் தேர்தலை மனதில் வைத்து, எதிர்க்கட்சிகளை துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அதேபோல், ரியாவை கைது செய்ததின் மூலம் பாஜகவினர் அரசியல் ரீதியாக சாதிக்க விரும்புவதாக’, பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா என்பவர் தமது ட்விட்டர் பதிவில், ‘போர் மூளும் அச்சமும், பொருளாதார அழிவும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், இந்த முக்கிய பிரச்சினையை திசை திருப்ப போதைப் பொருளை மத்திய அரசு பயன்படுத்தியிருப்பதாக’ குற்றம் சாட்டியுள்ளார்.