முன்னுரை:
ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதி பிறந்த நாளான 11 செப்டம்பர் 1986 இல் அன்று நான் எழுதிய இதே கட்டுரையை தினமணி நாளேட்டின் இரண்டாவது பக்கத்தில் தலையங்கத்திற்கு அருகில் வெளியிட்டு, என்னை எழுத்தாளனாக அங்கீகரித்தவர் பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ஏ.என்.சிவராமன். தினமணியில் மொத்தம் 53 ஆண்டுகள் பணியாற்றி, அதில் 43 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து சாதனை படைத்தவர். இவரது எழுத்துச் சுதந்திரத்தில் தினமணி அதிபர் திரு. ராம்நாத் கோயங்கா தலையிட்டதே இல்லை. எப்பொழுதும் கதர் ஜிப்பா அணிவார். மூக்குப்பொடி போடுகிற பழக்கமுடையவர்.
தினமணியில் இரண்டாவது பக்கத்தில் தமது பெயரில் எழுதாமல் ‘கணக்கன், குமாஸ்தா’ என்கிற புனைப் பெயரில் ஆழமான, தெளிவான கட்டுரைகளை எழுதி பத்திரிகை உலகில் தகவல் புரட்சியை செய்தவர் திரு. ஏ.என்.சிவராமன். மிக மிக சிக்கலான விஷயங்களை வாசகர்களுக்கு புரியும் வகையில் மிக, மிக எளிமையாக எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர்.சுதந்திரப் போராட்ட தியாகி, அப்பழுக்கற்ற தேசப் பக்தர்.
பத்திரிக்கை உலகின் பிதாமகனாக கருதப்படுகிற திரு. ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த அக்காலங்களில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட தேசிய வாதிகள் அனைவரும் தினமணி நாளேட்டை தான் வாசிப்பார்கள். பெருந்தலைவருக்கு பக்கபலமாக இருந்தவர். தமிழகத்தில் தேசிய சக்திகள் வளர உறுதுணையாக இருந்தவர். “மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நமது கொடியின் தோற்றமும் வளர்ச்சியும், மகாகவி பாரதி, நாடு போற்றும் நாமக்கல் கவிஞர்” போன்ற எனது கட்டுரைகளை, அவர் கட்டுரை எழுதுகிற இரண்டாவது பக்கத்தில் வெளியிட்டு என்னை பெருமைப்படுத்தியவர். என் வாழ்க்கையில் ஏன்றும் மறக்க முடியாத ஆசானாக, குருவாக அவர் விளங்கினார் என்பதை நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன்.
– ஆ.கோபண்ணா
1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டையபுரத்தில் தோன்றி 1921 செப்டம்பர் 11-ஆம் நாள் இரவு சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு. 67-ஆம் எண்ணுள்ள வீட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி தன் இன்னுயிரை நீத்தார். 39 வயது நிறைவு பெறுவதற்கு முன்பே அமரரான மாபெரும் கவிஞரின் நினைவு நாளைத் தான் இன்று நாம் நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப தன்னுடைய ஏழாம் வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விளையாட்டாக புனைந்து பாடினார். 11-ஆம் வயதில் இவருக்கிருந்த கவித்திறனை எட்டையபுர மன்னர் வியந்து பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.
1897-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் நாள் கல்வி கற்கும் வயதிலேயே சிறுமி செல்லம்மாளை திருமணம் செய்து கொண்டார். அப்போது பாரதிக்கு 14 வயதும், சிறுமி செல்லம்மாவுக்கு 7 வயதும் ஆகும்.
ஏற்கனவே தந்தையை இழந்த பாரதி திருமணமான இரண்டு வருடங்களில் தாயையும் இழந்தார். பெருந்துயரமான சூழலில்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்து வாழ்வின் முடிவு வரை வறுமையை எதிர்த்துப் போர்ப் பரணி பாடியவர்தான் பாரதியார்.
1904-ஆம் ஆண்டு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். இரண்டு மாதங்களில் அதிலிருந்து விலகி சென்னை ‘சுதேசமித்திரனில்’ துணையாசிரியராக வேலையில் அமர்ந்தார். சுதேசமித்திரனில் பத்திரிகையாளராகச் சேர்ந்த அவர், இந்தியா, பாலபாரதம், ஆங்கிலத்தில் வெளிவந்த ‘யங் இந்தியா’, சக்கரவர்த்தினி. விஜயா, சூரியோதயம், சித்ராவளி, அமிர்தம், ஆகிய பத்திரிகைகள் மூலமாக கனல் தெறிக்கும் அரசியல் கட்டுரைகளையும், உயர்வான இலக்கியக் கட்டுரைகளையும் எழுதிப் புதுமைகளைப் படைத்தார்.
1905-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு தான் பாரதி கலந்து கொண்ட முதல் மாநாடாகும். அங்கு, ஆன்மிக உலகில் ஒளி வீசித் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் தலைமை மாணாக்கியான நிவேதிதா தேவியை தரிசித்து, அவரை தமது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். அது முதல் தேவியின் உபாசகராக மாறி விட்டார். இந்திய தேசத்தையே பாரத மாதாவின் உருவத்தில் தமக்கு காட்டியது நிவேதிதா தேவிதான் என்கிறார் பாரதியார்.
1904-லிருந்து 1921- வரை 17 ஆண்டுகளில் பாரதி வெளிப்படுத்தியிருக்கிற உலக ஞானம் எப்படி வளர்ந்தது என்பது இன்றும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தகவல்கள் தெரிய நவீன சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில், தன் பரந்த அறிவை சரியான பாதையில் தெளிவாக வகுத்துக் கொண்டது மிகவும் வியப்புக்குரியதாகும்.
கவிதைகளை எளிய முறையில் எழுதி சாதாரண மக்களுக்கும் புரியும்படி எட்டச் செய்த சமூக இலக்கியவாதியாகவும், இந்திய விடுதலைக்காக எழுதியும், பேசியும் வந்த ஒரு தேசிய விடுதலைப் போராட்ட வீரராகவும் பாரதி திகழ்ந்தார்.
குறிக்கோள்:
மேலும் தம்முடைய கவிதைகளின் சிறப்பைப் பற்றி கூறும்போது,
“சுவை புதிது; பொருள் புதிது,
சொற் புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாக்கவிதை ” என்கிறார்.
உயர்வான சிந்தனையும், குறிக்கோளும் உடையவன்தான் ஒரு சிறந்த கவிஞனாகத் திகழ முடியும் என்பதற்கு பாரதி ஓர் எடுத்துக்காட்டாகும்.
நாட்டுப்பற்று:
நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட பாரதியார், தமது கவிதையில் இரண்டையும் இணைத்துப் பாடினார்.
“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு “
“பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! “
“மண்ணும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற் பிறி திலையே! “
என்று தாய்த் திருநாட்டைப் பெருமையுடன் உயர்த்தி அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று பாடி பூரிப்படைகிறார்.
இவ்வளவு வளம் பொழியும் பாரத நாட்டில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டு, எல்லோரையும் ஒன்றாக இணைத்துப் பாடுகிறார்.
“எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லாம் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ” என்கிறார்.
சர்வதேசப் பார்வை:
தான் பிறந்து நேசித்த பாரத நாட்டை மட்டும் பாடாமல் தனக்குத் தெளிவான சர்வதேசப் பார்வை உண்டு என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டி சரித்திரம் படைத்தார் பாரதி .
இத்தாலியில் மாஜீனி செய்த சபதத்தைக் கவிதையாகப் பாடினார்.
முதல் உலகப் போரில் ஜெர்மனியிடம் தோற்றுவிட்ட நாடான பெல்ஜியத்திற்கு வாழ்த்துப்பாடி, புது நெறி கலந்த புதுமையைப் படைத்தார்.
“அறத்தினால் தோற்றுவிட்டோம்!
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
துணிவினால் வீழ்ந்து விட்டாய்! “
பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் சிந்தும் பெண்களைப் பற்றி மனம் நொந்து பாடும்போது,
“கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே! ” என்று வருந்துகிறார்.
1917-இல் நடைபெற்ற புரட்சியில் ருஷ்ய நாடு விடுதலை பெற்றது. ருஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சி ஒரு நாட்டில் நடைபெற்ற புரட்சியாக மட்டும் இல்லாமல் ‘யுகப்புரட்சி’ யாகப் பாடினார்.
“பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன் என்று அறுதியிட்டு” மகாகவி
பாடினார்.
மகாத்மாவின் தலைமையும்
பாரதியின் தீர்க்கதரிசனமும்
ரவீந்திரநாத் தாகூர் அழைத்த ‘மகாத்மா’ என்ற சொல்லை தமிழ்ப்படுத்தி ‘மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன்’ என்று பாரதி பாடுகிறார்.
“வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு
பாழ்ப்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க! வாழ்க!
மகாத்மா காந்தி தலைமையில் சத்யாக்கிரகப் போராட்டத்துக்கு
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் “ என்று பாடி சங்கு முழங்கினார்.
‘மகாத்மா காந்தியின் தலைமை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத காலத்திலேயே அவரது தலைமையை நாட்டு மக்களுக்கு முன் கூட்டியே அடையாளம் காட்டி நம்பிக்கையோடு பாடிய பாரதியின் தீர்க்கதரிசனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மாவின் தலைமையை பாரதி அடையாளம் காட்டியது அரசியல் தீர்க்கதரிசனம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடாகும் என்று சொன்னால் மிகையாகாது.
பாரதியின் மொழிப்பற்று
பாரதியின் கவிதையில் மொழிப்பற்று இருந்ததேயொழிய ‘வேற்று மொழி மீது மொழிப் பகைமையோ மொழித் துவேஷமோ இருந்தது கிடையாது.
நாட்டைத் தெய்வமாக நினைத்தது போலவே மொழியையும் தெய்வமாகக் கருதி சிறுவர்களுக்குப் பாடும் பாப்பா பாட்டில்,
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா! தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! “ என்று பாடியதிலிருந்து அவரது உணர்வைப் புரிந்து கொள்ளலாம்.
தேச ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக மதம், மொழி, இன, பிராந்திய உணர்வுகளைத் தூண்டிவிடும் சக்திகளை எதிர்த்துப் போராட, ஒவ்வொரு தேச பக்தனும் இத்தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்வது மிக, மிக அவசியமாகும