அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற, அதே பழைய புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக சுருங்கியதையடுத்து, இந்திய பொருளாதாரம் இருண்டு காணப்படுகிறது. ஜி.டி.பியில் அமைப்பு சார்ந்த துறைகள் உட்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அமைப்பு சார்ந்த துறையையும் இணைத்தால், எண்ணிக்கை பயமுறுத்தும். முடங்கிப் போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் 3 வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.:
- குடும்பம் மற்றும் தனியார் செலவு மற்றும் தேவையை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டின் வழியாகத்தான் கிட்டத்தட்ட 76 சதவிகித முதலீடு நடக்கிறது.
- தொழிற்துறையை ஊக்குவிக்க அடிப்படை செலவினங்களை அதிகரித்தால், தொழிற்துறை நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுவதுடன் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
- கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நாட்டில் 42 கோடியே 80 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை இன்றி 3 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த நேரத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது அரசின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில், கிராமப் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராமப் புறங்களிலும் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. பிரச்சினை இரண்டு விதமாக உள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனற்ற அரசாக மோடி அரசு உள்ளது. அடுத்ததாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையின்மை மிகவும் வினோதமாக உள்ளது.
21 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதோடு தேர்வு விதிமுறைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள 2 லட்சத்து 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப 2 கோடியே 88 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் தேர்வு கட்டணமாக ரூ. 1,025 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான். அரசின் இயலாமையால் ஏற்படும் சுமையை இளைஞர்களின் தோள்களில் ஏற்றக்கூடாது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2 லட்சத்து 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாததால், 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசிடம் நான் கேட்கும் 3 முக்கிய கேள்விகள்:
- காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பெரும்பாலான அறிவிக்கை, தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படுவது ஏன்? உண்மையிலேயே பணியிடங்கள் காலியாக உள்ளனவா? இல்லை, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 ஆயிரம் போடுவோம் என்று சொன்னது போன்ற, வெறும் அரசியல் வித்தையா?
- பொருளாதாரத்தின் தேவை அதிகரிக்கும் போது, லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி அதனை பொருளாதாரத்துடன் இணைத்திருக்க வேண்டும் என்பதில் உங்கள் கவனம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?. எதுவும் செய்யாமல் இருந்தது, தவறான நோக்கம் கொண்டதா? அல்லது தவறான செயல்பாடா?
- இந்திய ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காலம் நீண்டுகொண்டு இருக்கும்போது, மற்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்? காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலம் தாழ்த்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி தருமா?