பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய திரு. அ. துரைக்கண்ணு அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரோடு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1988 இல் எழுத்து வேந்தர் ஜெயகாந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக இணைச் செயலாளர் என்ற முறையில் நவசச்தி நாளேட்டை நடத்துகிற பொறுப்பை அன்று காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜி.கே. மூப்பனார் அவர்கள் வழங்கினார். அந்த பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுகிற பொறுப்பை தினசரி நாளேட்டு நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அப்போது, நவசக்தி நாளேட்டின் செய்தி ஆசிரியராக 13 மாதங்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் அ. துரைக்கண்ணு.
ஏற்கனவே, வேலூர் நாராயணன் அவர்கள் நடத்திய அலை ஓசை நாளேட்டில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தான் மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதற்குப் பிறகு அவரது பரிந்துரையின் பேரில் முத்தாரம் என்கிற வார இதழின் பொறுப்பாசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்ட போது மீண்டும் நவசக்தி வார இதழாக வெளிவந்தது. வார இதழின் ஆசிரியராக திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களும், நிர்வாக ஆசிரியராக நானும் பணியாற்றுகிற வகையில் ஏற்பாடுகளை திரு. ஜி.கே. மூப்பனார் செய்திருந்தார். அவரது விருப்பத்தின்படி நவசக்தி வார ஏட்டின் அலுவலகம் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜ் பவனின் முதல் மாடியில் மூன்றாண்டுகள் நடைபெற்றது. அன்று நவசக்தி வார இதழின் செய்தி ஆசிரியராக முழுப் பொறுப்பேற்று பணியாற்றியவர் அருமை நண்பர் அ. துரைக்கண்ணு. 1999 இல் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நவசக்தி வார இதழ் நிறுத்தப்பட்டது.
நீண்ட பத்திரிகை அனுபவமிக்க அ. துரைக்கண்ணு சன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் 15 ஆண்டுகாலம் மூத்த செய்தியாளராக பணியாற்றினார். இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கை முறிவு ஏற்பட்டு 2014 இல் அப்பொறுப்பில் இருந்து விலகினார். பத்திரிகை பணிகளுக்கு இடையில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.
ஜவஹர்லால் நேரு பற்றிய எனது ஆங்கில நூலினை தமிழாக்கம் செய்து முடித்த பிறகு, அதில் கருத்து மற்றும் பிழைத் திருத்தங்களை செய்து, மிகச் சிறப்பாக செழுமைப்படுத்தியவர் அ. துரைக்கண்ணு. அந்தப் பணிக்காக அவர் ஏற்றுக் கொண்ட சிரமங்களை கண் கூடாகப் பார்த்த நான், அவரை என்றுமே என் வாழ்க்கையில் மறக்க முடியாதவராக என் மனத்திரையில் பதிவு செய்து கொண்டேன். அந்தளவிற்கு கடுமையான உழைப்பை மிகுந்த ஈடுபாட்டோடு செய்தவர் என்பதை நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
இளமைப் பருவம் முதல் மாணவர் இயக்கத்தில் குறிப்பாக 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். இந்திய பாதுகாப்பு விதிகளின்படி 1965 இல் கைது செய்யப்பட்ட முதல் மாணவர் தலைவர் அ. துரைக்கண்ணு. அந்த அடிப்படையில் தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை சிறையில் இவரும் சிறை வைக்கப்பட்டார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எனது நீண்ட கால அருமை நண்பர் ஓவியர் இரா. ஜெயசீலன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவித்தவர் துரைக்கண்ணுதான். அவர் தேசிய முரசு அலுவலகத்திற்கு வருகை புரிந்தால் காலை முதல் மாலை வரை எங்களோடு இருந்து பணிகளை மேற்கொள்வார். அவ்வகையில் தேசிய முரசு இதழில் பணியாற்றிய ஓவியர் இரா. ஜெயசீலன், கணிப்பொறி இயக்குநர் மம்சை செல்வகுமார் மற்றும் மு. புகழேந்தி ஆகியரோடு துரைக்கண்ணு பழகிய நாட்களை மறக்கவே முடியாது. இறுதியாக காமராஜ் ஒரு சகாப்தம் 5 ஆம் பதிப்பாக ஜனவரி 2020 இல் வெளியிட்ட போது அந்நூலினை முழுவதும் படித்து, பிழைத்திருத்தம் செய்தவர் துரைக்கண்ணு. எந்தப் பணியை கொடுத்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்வதில் அவருக்கு நிகர் அவரே.
சில மாதங்களுக்கு முன்பு, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மீது அ. துரைக்கண்னு அவர்களுக்கு இருந்த ஈடுபாடு குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி அனைவரும் பாராட்டுகிற வகையில் நூலை வெளியிட்டுள்ள எனக்கு, மூதறிஞர் ராஜாஜி மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. திரு. அ. துரைக்கண்ணு அவர்களிடம், மூதறிஞர் ராஜாஜி மீது வைத்திருந்த ஈடுபாட்டின் அடிப்படையில் நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதினால், அதை நூற்றுக்கணக்கான நிழற்படங்களுடன் தமிழில் வெளியிட தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். அதற்காக என்னிடம் இருந்த ராஜாஜி குறித்த புத்தகங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு அந்த பணியை தொடங்கினார். சமீபத்தில் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு 10 அத்தியாயங்களை எழுதி முடித்து விட்டாக கூறியதோடு, மூதறிஞர் ராஜாஜி அவர்களின் கொள்ளுப் பேரன் திரு. சி.ஆர். கேசவன் அவர்களை சந்தித்து உரையாடி சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அந்த சந்திப்பு ஏற்படுவதற்குள்ளாக நடக்கக் கூடாத துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்து விட்டது.
திரு.அ. துரைக்கண்ணு தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவரே சமைத்து உண்கிற பழக்கம் கொண்டவர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு தகவல் களஞ்சியமாக வாழ்ந்து வந்தார்.
பொதுவாக வரம்பு மீறிய சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர். எவரிடமும் எளிதாக பழகாதவர். பழகி விட்டால் அவரை போல, அற்புதமான நண்பரை பார்க்க முடியாது.
இந்நிலையில் திடீரென எனது அருமை நண்பர் திரு. ஆர். ராஜ்மோகன் என்னுடைய செல்பேசியில் தொடர்பு கொண்டு திரு. அ. துரைக்கண்ணு இறந்த செய்தியை கூறினார். செய்தி கேள்விப்பட்ட உடனேயே நான் அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. அவரது உறவினர்கள் யாருடனும் எனக்கு தொடர்பு இல்லை. அவரது சகோதரர் மகனிடம் தொடர்பு கொண்ட போது, அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. உடனே அண்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் கதவை பலமாக தட்டியபோதும் எந்த பதிலும் வரவில்லை. அதற்குப் பிறகு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது தரையில் பிணமாக விழுந்து கிடந்த கோரக் காட்சியை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தளவில் 50 ஆண்டுகால பத்திரிகையாளர் அ. துரைக்கண்ணு அவர்களின் சோக அத்தியாயம் பரிதாபகரமான முறையில் முடிந்து விட்டது. இதைப்போல எந்த பத்திரிகையாளருக்கும் நடக்கக் கூடாது.
50 ஆண்டுகாலமாக பத்திரிகை துறையிலே இருந்த அவருக்கு தமிழக அரசு பென்ஷன் பெற முடியாமல் போனது குறித்து சில நேரங்களில் அ. துரைக்கண்ணு மிகுந்த வருத்தத்துடன் கூறி இருக்கிறார். அந்த வகையில் வாழ்க்கை முழுவதும் எழுத்தாளராக, பத்திரிகையாளராக வாழ்ந்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.