’’கலகத்தில் பிறப்பது தான் நீதி! மனம் கலங்காதே, மதி மயங்காதே!’’ என்ற கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது! சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தற்போது காங்கிரசில் நடந்து கொண்டிருப்பது கொள்கைப் போர்! ’யெஸ், ஐடியாலாஜிகல் வார்!’ இன்றைக்கு பாஜகவின் ஆறாண்டு கால ஆட்சியிலே எத்தனையெத்தனை அழிவுகளை, சோதனைகளை நாடு சந்தித்துக் கொண்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளும், பண்புகளும் சிதைக்கப்பட்டுக் கொண்டுள்ளன!
- காஷ்மீர் கைவிலங்கிடப்பட்டுள்ளது!
- சுற்றுச் சூழல் சூறையாடப்பட்டுக் கொண்டுள்ளது!
- கல்வித்துறை காவிமயமாவது மட்டுமல்ல,அது எளியவர்களுக்கு எட்டா கனியாக்கப்பட்டு வருகிறது.
- குடியுரிமை திருத்த மசோதா மக்களை கூறுபோட்டு விலக்கம் செய்கிறது.
- பொதுத்துறை அமைப்புகள் தனியாருக்கு பொலிகிடா விருந்துகளாக்கப்படுகின்றன!
- அனைத்து வகையிலும் பாஜக மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுக் கொண்டுள்ளது.
- வெறுப்பு, வன்மம், துவேஷம் இவற்றை கொண்டு மட்டுமே தன்னுடைய ராஜ்ஜியத்தை பாஜக அரசு கட்டமைத்துக் கொண்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக ராகுல் காந்தி என்ற ஒரு தனி மனிதன் மட்டுமே கம்பு சுழற்றும் அவலம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தொடர்வது…? தலைமைக்கு கடிதம் எழுதிய அந்த 23 தலைவர்கள் தங்கள் பங்களிப்பாக இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தனர்?
ராகுல் காந்தி தலைமை பொறுப்பிலிருந்து விலகியதற்கே இவர்களும், இவர்களை போன்றவர்களும் உள்கட்சிக்குள் ஒத்துழைப்பு கொடுக்காதது தானே காரணம்…!
தொண்டு செய்யும் இளைஞர்களை, எளிய குடும்ப பின்னணியில் இருந்து வருபவர்களை தூக்கிவிட முயற்சித்த அவருக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள்?சோனியா உடல் நலன் குன்றிய நிலையில், அவரவர் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டியதை விட்டுவிட்டு, கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன?
எழுதிய கடிதம் பொதுவெளிக்கு போகலாமா? பொதுவெளிக்கு போனால் அது யாருக்கு சாதகமாகும் என்று பழம்தின்று கொட்டை போட்ட பழம்பெரும் தலைவர்களுக்கு தெரியாதா? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன? என்ற கேள்வி பாமரனுக்கும் தோன்றக்கூடியது தானே!
அந்தரங்க சுத்தியோடு தலைமையிடம் பேசியிருக்க வேண்டியவைகளை அம்பலத்தில் தோரணம் கட்டிப் போட்டதுடன், நிரூபிக்க முடியுமா? என்று சவால் வேறு விடுகிறார்களே!
ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபம்? கட்சிக்குள் விவாதித்ததை மீண்டும் பொதுவெளிக்கு வந்து டுவிட்டரில் கபிள்சிபில் வெளியிட்டது ஏன்? அதன் பிறகு ’’ராகுல் விளக்கத்தினால் எடுத்துவிட்டேன்’’ என்று மீண்டும் காட்டிக் கொடுக்கிறாரே…!
ஆட்சியில் இல்லாவிட்டாலும், பதவியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் பேரியக்கமாக தமிழகத்தில் உயிர்ப்போடு வைத்திருந்தார் காமராஜர். எந்த தலைவர்களையும் நம்பி இயக்கம் நடத்தவில்லை காமராஜ். மாறாக இளம் தளபதிகளையும், பெரும் தொண்டர் படைகளையும் நம்பித் தான் களம் கண்டார்.
’’நேரு குடும்பத்தவரே தான் மீண்டும்,மீண்டும் தலைவராவதா? ’’ என்ற எதிர்கட்சிகளின் கேள்வி அர்த்தமற்றது. காங்கிரசை அழிக்கும் நோக்கிலானது.
காங்கிரசுக்கு இன்றைய நிலையில் ராகுலைவிட்டால் வேறு யாரையுமே தலைமைக்கு சிந்தித்தும் பார்க்கமுடியாது என்பது தான் யதார்த்தம்! அவர் தலைவராவதற்கு அல்லது தலைவராக செயல்படுவதற்கு ஊறுவிளைவிப்பவர்களை உடனே வெளியேற்றினால் தான் காங்கிரஸ் உருப்படும்.
அதிகாரம், பதவியை சுவைப்பதற்கென்று மட்டுமே கட்சியில் உள்ளவர்கள் வெளியேறும் நேரம் வந்துவிட்டது!
கொள்கை உறுதியோடு மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு மேலேற்றிவிடுவது ஒன்று தான் தீர்வு!
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)