நீட் மற்றும் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்காவிட்டால், பா.ஜ.கவுக்கு எங்கள் ஓட்டு இல்லை என்ற மாணவர்களின் எச்சரிக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தினால், மாணவர்கள் பாதிக்கக்கூடும் என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதனால், இந்த தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும், இல்லையேல், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 7 முதலமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இரு நுழைவுத் தேர்வுகளையும் தள்ளிவைக்க பிரதமரிடம் நேரில் முறையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மாணவர்களின் உயிரே முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்காவில் பள்ளிகளை திறந்ததால், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
எனினும், செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு முரண்டு பிடித்து வருகிறது ”நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-க்கு எங்கள் ஓட்டு இல்லை” என்ற ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது.
குறிப்பாக, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் இருந்துதான் இத்தகைய எச்சரிக்கை பதிவுகள் அதிக அளவில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை எங்களுக்கும் கிடைத்துவிடும். ஆனால், மாணவர்களின் ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்று பல மாணவர்கள் ட்விட்டரில் எச்சரித்தனர்.
எனினும், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைத்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அந்த ஆண்டுக்கான முழுப் படிப்பையும் கற்க வேண்டியதை மாணவர்கள் இழப்பார்கள் என்றும் மத்திய உயர் கல்வித்துறை செயலர் அமித் காரோ மற்றும் தேசிய தேர்வு ஏஜென்ஸி தலைவர் வினீத் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதில் அளித்துள்ள மாணவர்கள், இப்போது இருக்கும் இக்கட்டான சூழலில். தீபாவளி வரையிலாவது நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த பிரதியூம் என்ற மாணவரின் ட்விட்டர் பதிவில், முரண்டு பிடித்தால் பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை புறக்கணிப்போம். நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை எழுதும் மொத்தம் 25 லட்சம் மாணவர்களில், 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். எங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டாமென்று வலியுறுத்துவோம் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறும்போது, ” கொரோனா தொற்றால் பெரும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது மாபெரும் தவறு. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாவிட்டால், பாஜகவுக்கு வரும் காலத்தில் பேராபத்து ஏற்படும். பாதிப்பை இந்திய மக்கள் அமைதியாக ஏற்பார்கள், ஆனால், அதனை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று எச்சரித்தார்.