இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்புகள் அரசு சொல்வதை விட 5 மடங்கு அதிகம் இருக்கும் என, பொது சுகாதாரத்துறையின் மீது அக்கறையுள்ள 2 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் ஹேமந்த் ஷெவாடே மற்றும் இந்திய கோவிட் – 19 உயர்மட்ட ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் கிரிதர கோபால் ஆகியோர் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை தி இந்து நாளேட்டில் வெளியிட்டனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை அரசு தரப்பு 5 என்று சொன்னால், உண்மையான உயிரிழப்பு 29 ஆக உள்ளது.
கடந்த ஜுலை 31 ஆம் தேதி வரை கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 26 பேர் உயிரிழந்ததாக அர்த்தம். ஆனால், எதார்த்தத்தில் பார்க்கும்போது, இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 939 ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 10 லட்சம் பேரில் 138 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை மற்றும் அதன் சிறு நகரங்கள், இந்திய கிராமங்கள் என தொற்று பரவியபின் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் சுகாதார வசதி இல்லாததாலும், தகுதியான மருத்துவர்கள் இல்லாததாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
கொரோனாவினால் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகள், கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
மேலும், பல நகரங்களில் கொரோனாவினால் உயிரிழப்பு நிகழ்ந்தாலும்,வேறு நோய்களால் உயிரிழந்ததாக காரணம் கூறுகிறார்கள். கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படும் நிலைதான் உள்ளது. இதனால் தான் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இத்தகைய உயிரிழப்புகளின் மருத்துவ அறிக்கை தனித்துவமானதோ அல்லது அசாதாரணமானதோ அல்ல.
காசநோய் என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாகும். அங்கு, குறைவான உயிரிழப்புகள் காட்டப்பட்டது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியாவில் காசநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உலக சுகாதார அமைப்போ, இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் காசநோய்க்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனினும், கூடுதலாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தரவுகள் அரசிடம் இல்லை. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது. விரைவில் அல்லது பின்னர் ஒரு நாள், விழிப்போடு இருக்கும் ஊடகங்கள் மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களால் இந்த உண்மை வெளிப்படும்.
இந்தியாவில் 22 சதவிகித உயிரிழப்புகளுக்கு மட்டுமே மருத்துவரின் சான்று கிடைக்கிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு விகிதம் 5 சதவிகிதமும், பீகார் மாநிலத்தில் 2.4 சதவிகிதமும் மட்டுமே உயிரிழப்புகள் கணக்கில் காட்டப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே ஏராளமான மக்கள் இறந்து போகிறார்கள்.
மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும்.கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் கணக்கிடப்படுவதுதான் உண்மை. இந்த நாடுகளில் உயிரிழப்புகளை பதிவு செய்வதும் இல்லை. மருத்துவரின் சான்றிதழும் அநேகமாக தவிர்க்கப்படுகிறது.
இந்தியாவில் குறைவான உயிரிழப்புகள் வயது குறித்த புள்ளிவிவரங்களுடன் விளக்கப்படுகிறது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைவிட, வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகம் இருந்தும், உயிரிழப்பு எண்ணிக்கை அந்த நாடுகளைவிட குறைவாகக் காட்டப்படுகிறது.
உதாரணத்துக்கு, பிரேசிலில் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்கள் சரிபாதியாக உள்ளனர். வைரஸ் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. பிரேசிலில் 10 லட்சம் பேருக்கு 543 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தியாவிலோ 10 லட்சம் பேருக்கு 42 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. இந்தியாவில் உள்ள வயது புள்ளிவிவரம் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பிரேசிலோடு ஒப்பிட்டு விளக்க முடியாது.