இனிய நண்பர்களே,
காங்கிரஸ் வரலாற்றில் மிக சோதனையான ஒரு காலகட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே முழுமையான அளவில் இயங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அன்னை சோனியா காந்தி தலைமையில் காணொளிகாட்சி மூலமாக நடைபெற்றுள்ளது. இதில் 53 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டம் குறித்து, ஊடகங்களிலே பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அன்னை சோனியா காந்தி தலைமை நீடிக்குமா ? புதிய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பங்கேற்பாரா? நேரு குடும்பத்தை தவிர்த்து வேறு எவராவது புதிய தலைவராக பொறுப்பேற்பார்களா ? என்கிற கேள்விகள் ஊடகங்கள் மூலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, முன்னணித் தலைவர்களாக கருதப்படுகிற குலாம்நபி ஆசாத், கபில்சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் அன்னை சோனியா காந்திக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசியவிட்டதுதான் முக்கிய காரணமாகும். இந்த கடிதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிற நேரத்தில் தொடர்ந்து நேரலையாக தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் முடங்கி விட்டதாகவும், கட்சித் தலைமையை முழுநேரமாக பணியாற்றக் கூடியவர் ஏற்க வேண்டும் என்கிற கருத்து அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அன்னை சோனியா காந்தி அவர்களை இக்கடிதம் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சர்களாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாதவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை விமர்சனம் செய்ததை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாகத் தான் காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 செயற்குழு உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் சோனியா காந்தி தலைவராக நீடிக்க வேண்டும், அவரது உடல்நிலையைப் பொறுத்து காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று செயற்குழுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கூட்டி, லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்கிற வகையில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்கிற ஏகோபித்த முடிவிற்கு அவர் தம்முடைய விருப்பத்தை அவசியம் தெரிவிக்க வேண்டுமென எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜூலை 2019 இல் தலைமை பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி விலகினார். கடந்த ஓராண்டு காலமாக தலைமைப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க. அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நாள்தோறும் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார். ஏதோ ஒரு வகையில் நரேந்திர மோடியை எதிர்க்கிற தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்விலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை கேட்டவர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்பதற்கு இவரை விட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி ஆற்றிய உரை, நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அனைவரையும் உற்சாகமடைய வைத்தது. மகாகவி பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று கூறியதோடு, இதன்மூலம் ‘பள்ளத்தில்விழுந்து கிடக்கும் குருடரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வர்’ என்று பாடியதைத் தான் இங்கு நினைவுகூற வேண்டியிருக்கிறது.
ராகுல் காந்தியின் உரையைக் கேட்ட 1600க்கும் மேற்பட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது உணர்ச்சிமிகு உரையைக் கேட்டவர்கள் இவ்வுரையினால் எவரும் ஈர்க்காமல் இருக்க முடியாது என்று கூறுவது மிகவும் பொருத்தமானதாகும்.
நாட்டு மக்களிடம் ராகுல் காந்திக்குக் கிடைத்த வரவேற்பைச் சகித்துக்கொள்ளாத வகுப்புவாத, சீர்குலைவு சக்திகள் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூற முற்பட்டுள்ளன. வாரிசு அரசியலை காங்கிரஸ் கட்சி வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 136 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் எப்படிச் சாத்தியமாகும் என்பதை பார்க்க மறுக்கும் குதர்க்கவாதிகள் ஆதாரமற்ற, நியாயமற்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்பதரை ஆண்டுகள் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்த ஜவஹர்லால் நேருவைத்தான், மகாத்மா காந்தி ‘என்னுடைய வாரிசு என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், ‘என்னுடைய வாரிசு ராஜாஜியோ, பட்டேலோ அல்ல’ என்று தெளிவு படுத்தினார். தொடர்ந்து காந்தியடிகள், ‘எனக்குப் பின்னால் என்னுடைய பாஷையை ஜவஹர்லால் நேருதான் பேசுவார்’ என்று அறிவித்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பிரதமராக 1947இல் ஜவஹர்லால் நேரு தேர்வு செய்யப்பட்டு 16 ஆண்டு காலம் அப்பொறுப்பிலிருந்து 1963இல் நம்மைவிட்டு பிரிந்தார்.
நேருவுக்குப் பிறகு யார்? என்று உலகமே எழுப்பிய கேள்விக்கு நேரு உயிரோடு இருந்தபோதே தெளிவான விடையைக் கொடுத்து விட்டுதான் சென்றார். அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமரா ஜர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களிடம் உடல் நலிவுற்று தமக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியைத் தேர்வு செய்யுங்கள்’ என்று சொல்லியிருந்தார். அதனடிப்படையில் பிரதமரானவர்தான் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், துரதிருஷ்டவசமாக ரஷ்ய நாட்டில் தாஷ்கண்டில் திடீரென உடல்நலக் குறைவால் அவர் மரணமடைய நேரிட்டதால், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.
நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு விடை கண்ட காமராஜர்தான், லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கும் விடை கண்டார். அவரது விடை தேடும் முயற்சியின் காரணமாகத் தான் நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்வு பெற்றார்.
அன்று இந்திராவைப் பிரதமராக்கியது காங்கிரஸ் தலைவர் காமராஜரே தவிர, நேரு அல்ல; தமக்குப்பின் பிரதமராக நேரு பரிந்துரை செய்தது லால்பகதூர் சாஸ்திரியைத் தானே தவிர, இந்திரா காந்தியை அல்ல! வரலாற்றின் உண்மை நிலை இவ்வாறு இருக்க, இதில் எங்கே இருக்கிறது வாரிசு அரசியல்? அதேபோல அன்னை இந்திரா படுகொலைக்குப் பிறகு பிரதமரானவர்தான் ராஜிவ் காந்தி. பிரதமர் பதவியேற்றவுடன் நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்து 543 இடங்களில் 414 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மக்களின் அமோக ஆதரவுடன்தான் பிரதமரானார் ராஜிவ் காந்தி. ராஜிவ் காந்தியை வெற்றி பெறச் செய்து பிரதமராக்கியது இந்திய ஜனநாயகமே தவிர, வேறல்ல. இதில் எங்கே இருக்கிறது வாரிசு அரசியல் ?
1991 இல் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் அரசியலே வேண்டாம் என்று 7 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நின்ற அன்னை சோனியாவுக்கு வாரிசு அரசியலில் நம்பிக்கை இருந்ததாக எவராவது கூற முடியுமா? தமது கணவர் ராஜிவ் காந்தி எந்த மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடினாரோ, அத்தகைய சக்திகள் 1998 இல் மத்தியில் ஆட்சி அமைத்ததும் நாட்டை மதவாத சக்திகளிடமிருந்து விடுவிக்க, காங்கிரஸ் தலைமையை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டவர்தான் அன்னை சோனியா.
அதேநேரத்தில், 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தமக்கு அமோக ஆதரவு இருந்தும் பிரதமர் பதவியை மறுத்து, பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங்கை அப்பதவியில் அமர வைத்தவர் அன்னை சோனியா காந்தி.
இந்திய அரசியல் வரலாற்றில் அன்று காந்திஜி பதவியை மறுத்து பிரதமராக ஜவஹர்லால் நேருவைத் தேர்வு செய்தார். அதேபோல, சோனியா காந்தி பிரதமர் பதவியை மறுத்து டாக்டர் மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கினார்.
அன்று காந்தியடிகள் பதவியை மறுத்தார். அவரையொட்டி பதவியை மறுத்த பெருமை அன்னை சோனியாவுக்கே உண்டு. பதவி மறுப்பாளர்களை நமது நாடு என்றும் போற்றிப் பாராட்டி ஆதரித்து வருவது வரலாற்றுப் பெருமைமிக்க நிகழ்வுகளாகும்.
அன்னை சோனியாவின் தியாகப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிற வகையில் இளந்தலைவர் ராகுல் காந்தியும், பிரதமராக ராஜீவ்காந்தி பொறுப்பு வகித்த 1989 ஆம் ஆண்டிற்கு பிறகு 2014 வரை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காமல் 25 ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி, பயிற்சி பெற்ற சிறந்த தலைவராக உருவாகி இருக்கிறார். அதனால்தான் 135 ஆண்டு பாரம்பரிய பழமையான இந்திய தேசிய காங்கிரசுக்கு 50 வயது நிரம்பிய ராகுல்காந்தி அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய சுதந்திர வரலாற்றில் வகுப்புவாத பா.ஜ.க., அசுர பலத்தோடு மக்களவையில் 303 இடங்களில் வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கிற வல்லமையும், ஆற்றலும் மிக்கத் தலைவராக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். நரேந்திர மோடிக்கு மாற்று ராகுல்காந்தியே தவிர, வேறு எவரையும் இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்திய நாட்டிற்காக தங்களது வாழ்க்கையை மட்டுமல்ல, உயிரையும் தியாகம் செய்த பாரம்பரியத்திலிருந்து வந்த ராகுல்காந்திக்கு தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தக் கூடிய தகுதியும், திறமையும் இருக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தம்மை பொறுப்பாக்கிக் கொண்டு தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அவர் உழைத்ததைப் போல மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முழுமையாக உழைக்கவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதை வெளிப்படுத்துகிற வகையில் ‘தன்னந்தனியாக வகுப்புவாத பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்த்து போராடினேன்’ என்று தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டதில் நியாயம் இல்லை என்று கூற முடியாது. அவரது மன வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை புரிந்து கொண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் செயல்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அன்னை சோனியா, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை விமர்சனம் செய்கிற வகையில் 23 பேர் கடிதம் எழுதி, ஊடகத்தில் வெளியிட்டது அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தியின் மனதை கடுமையாக புண்படுத்தியிருக்கிறது. இத்தகைய விமர்சனம் செய்தவர்களை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.
எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினரின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிற நேரு பாரம்பரியத்தில் வந்த அன்னை சோனியாவும், தலைவர் ராகுலும் காங்கிரசை பாதுகாக்கிற வகையில் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். காங்கிரசை காப்பாற்றுவதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி கொள்கைகளை பாதுகாத்து இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து செயல்படுவதே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதை நிறைவேற்றுகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும்.
தலைவர் ராகுல் அவர்களே! தயக்கம் வேண்டாம்! காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்!
அன்பன்,
ஆ. கோபண்ணா