உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி வகித்த காலத்தில், முக்கிய வழக்குகளில் அவர் மவுனம் சாதித்தது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கடந்த 1863 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் இயற்கையான நீதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஆதாமுக்கு நேரிடையாக மரண தண்டனையை கடவுள் விதிக்கவில்லை. ஆதாரம் தரப்பு நியாயத்தையும் கடவுள் கேட்டார்’ என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நீதிபதி, அவர் கடவுளாக இருந்தாலும் நீதியை நிலைநிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு முக்கிய சட்ட அடிப்படைகள் உள்ளன.
அரசியல் அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் கொடுங்கோல் ஆட்சியை ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மாற்றும் முக்கிய பங்கு நீதிபதிக்கு உள்ளது. ஒவ்வொரு நபரும் தண்டிக்கப்படும் முன் நியாயமான முறையில் பதிலளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்,சொந்த காரணத்துக்காக யாரும் நீதிபதியாக மாறக் கூடாது என்பதே இயற்கை நீதியாகும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், இத்தகைய அடிப்படை விதிகள் அனைத்தையும் மீறியுள்ளார். அவர் பதவி வகித்த காலம் முழுவதுமே ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. பதவி ஏற்றதும் வழக்கத்துக்கு மாறாக, 3 நீதிபதிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், நிர்வாக குறுக்கீடு ஏதும் இருப்பதை விரும்பமாட்டோம் என்றும் பேசினார். ஆனால், சில நாட்களிலேயே அவர் பேசியதற்கு நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் போனது.
நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் தன் மீது கொடுத்த பாலியல் புகாரை, தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயே விசாரித்தார். புகார் கொடுத்த பெண்ணுக்கு இந்த சதியில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார். ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு, அறிக்கையை பொதுவெளியில் வெளியிடும் முன்பே,. கோகாய் தன் மீதான பாலியல் வழக்கை தானே விசாரிக்தது நகைப்புக்குள்ளானது.
ரஞ்சன் கோகாய் பிறப்பித்த பல உத்தரவுகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சத்தமாக பேசிய அளவுக்கு நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அது நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியல்ல என்பது ரஞ்சன் கோகாய்க்கும் பொருந்தும். ஆனால், பாலியல் புகார் கொடுத்த பெண் ஊழியரையும் அவரது குடும்பத்தாரையும் புகாரை திரும்பப் பெறுமாறு ரஞ்சன் கோகாய் மிரட்டினார்.
கடந்த ஆண்டு ‘மீ டு’ பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் வந்தது மேலும் பரபரப்பை அதிகரித்தது. பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு சாதகமாகவும் சட்ட அமைப்பு இருப்பதாக புகார் கொடுத்த பெண் ஊழியர் குறிப்பிட்டிருந்தார்.
தங்கள் அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்கான கடைசி முயற்சியாக கருதப்படும் உச்ச நீதிமன்றம், செயல்படாமல் போவது வருத்தமளிக்கிறது. ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரைப் பொறுத்தவரை, ஒரு தனிப்பட்ட நபரை பாதுகாக்க ஒட்டுமொத்த நீதித்துறையே செயல்பட்டிருக்கிறது.
இதுதவிர, ரஞ்சன் கோகாய் மீது 2 முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அசாம் தொடர்புடைய தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, இந்த வழக்கு அவருக்கு பிடித்தமான வழக்காகிப் போனது. அரசாங்கம் தயக்கம் காட்டியபோதும், ரஞ்சன் கோகாய் அந்த வழக்கை தள்ளிவிடுவதில் வேகம் காட்டியதாக குற்றச்சாட்டும் உண்டு.
தேசிய குடிமக்கள் பதிவேட்டால், அசாமிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றப்படக் கூடும் என்ற அச்சம் நிலவியது.பயந்து போய் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இன்னும் இந்த பிரச்சினை தங்கள் ‘தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ என அம்மாநிலத்தில் வாழும் மக்கள் நினைக்கிறார்கள்.
அந்த நேரத்தில் தான் ‘சீல்’ வைக்கப்பட்ட கவர் ஒன்று நீதிமன்றத்துக்கு வந்தது. அதன்பிறகு வழக்கு தாமதப்படுத்தப்பட்டது. ரபேல் பேர வழக்கிலும் இதேபோன்ற ‘சீல்’ வைக்கப்பட்ட கவர் ஒன்று அரசிடம் இருந்து நீதித்துறைக்கு வந்தது. சிபிஐ உயர் அதிகாரிகளுக்கிடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கில் அரசுக்கு ஆதரவான முடிவையே ரஞ்சன் கோகாய் எடுத்தார். சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து சட்டரீதியான தேர்வுக் குழுவின் ஒப்புதல் இன்றி அலோக் வர்மாவை நீக்கியது சட்டவிரோதம் என்று ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்தார். தீர்ப்பு வந்த போது அலோக் வர்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். எனினும், தங்களுக்கு ஒத்துழைக்காத அலோக் வர்மாவை பணி செய்யவிடாமல் தடுத்ததின் மூலம் மோடி அரசு வெற்றி பெற்றது.
இதற்கிடையே, நீதிமன்ற நிர்வாக விசயங்களில் கோகாய் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டார். அதேசமயம், நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் விசயத்தில் மத்திய அரசின் சொல்படி கேட்டு நடந்ததும் தெரிந்ததே. சர்ச்சைக்குள்ளான நீதிபதிகள் பணியிட மாற்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஒப்புதல் அளித்ததா? என்றே தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் கோகாய் முடிவுகள் சர்ச்சைக்குள்ளானது. தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு அயோத்தி-பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை ரஞ்சன் கோகாய் அமைத்தார். பிரச்சினைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் தருமாறு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்தது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அவர், வழக்கை விசாரிக்க நேரமில்லை என்று தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் தங்களை வெளியே நடமாட அனுமதிக்குமாறு மனுதாரர்கள் கேட்டனர். “ஸ்ரீநகரில் குளிராக இருக் கும்போது நீங்கள் ஏன் வெளியில் நடமாடுகிறீர்கள்” என்று கிண்டலாக கேட்டவர் தான் இந்த ரஞ்சன் கோகாய். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்து தாமதிப்படுத்தினார்.
கோயங்கா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “ஜனநாயகத்தைப் பாதுகாக்க சுதந்திரமான ஊடகவியலாளர்களும், நேர்மையான நீதிபதிகளும் அவசியம்” என்றார். ஆனால், கடைசி வரை தன் பேச்சையே அவரே பின்பற்றவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, நீதி கேட்டு வந்த மக்களின் அடிப்படை உரிமையை அடகு வைத்த ரஞ்சன் கோகாய் எங்கே?. தவறு செய்த நீதிபதியை தட்டிக் கேட்டு, அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன், தண்டனையை ஏற்பேன் என்று கர்ஜிக்கும் பிரசாந்த் பூஷன் எங்கே?
‘சட்டம் ஒரு இருட்டறை…அங்கே வழக்குரைஞர்கள் தான் விளக்கு’ என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் பிராந்த் பூஷன் வாழும் மண்ணில் தான் ரஞ்சன் கோகாய்களும் வாழ்கின்றனர்.