கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பிஎம் கேர்ஸ் நிதி (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரணம்) என்ற பெயரில் பொது அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கியது. இதை தொடங்கியதும், நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை இல்லாத பிஎம் கேர்ஸின் சில அம்சங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
”தேசிய பேரிடர் பொறுப்பு நிதியைப் போல், பிஎம் கேர்ஸ் நிதியை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. பிஎம். கேர்ஸ் நிதி என்பது அறக்கட்டளை என்பதால், தனியார் தணிக்கையாளரின் தணிக்கையே போதுமானது” என்ற அரசு வாதத்தை சட்ட ரீதியாக எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
பிஎம் கேர்ஸ் நிதி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே, தேசிய பேரிடர் நிவாரண நிதி நடைமுறையில் இருக்கும் போது, புதிதாக பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு அரசு அவசியம் பதில் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இரண்டாவதாக, சில மாதங்களாக செயல்பட்டு வரும் பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக, நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர்களும், வழக்குரைஞர்களும் சுட்டிக்காட்டினர். பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இதனைப் பார்க்கும்போது, பிஎம் கேர்ஸ் நிதி வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றுதான் பொருள் கொள்ளமுடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நிதியை வேறு பயன்பாட்டுக்கு மடைமாற்றி விடுவது குறித்த கேள்விக்குப் பதில் தராமல் தவிர்க்க முடியாது என ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு பார்வையிடுவதற்கு, மோடி அரசு முட்டுக்கட்டை போடுவதாக, கடந்த ஜுலை மாதம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது அரசிடம் இருந்து பெறும் நிதி என்றும், பிஎம் கேர்ஸ் நிதி முற்றிலும் வெளியில் இருந்து நன்கொடை மூலமாக பெறுவது என்றும் வேறுபடுத்திக் காட்டியதோடு, பிஎம் கேர்ஸுக்கு இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கை தேவையில்லை என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்துள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தேசிய பேரிடர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பிஎம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதி இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்பட்டது. ஆனால், நீதிமன்றமோ,எங்கெல்லாம் பொது அறக்கட்டளை இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு அவசியம் இல்லை என்று சொல்கிறது.
கொரோனாவை பேரிடர் என கடந்த மார்ச் 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்ததாகவும், அதற்கு முன்பு தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு எந்த நிறுவனமோ அல்லது தனி நபரோ நிதி அளிக்கவில்லை என்பதால், பிஎம் கேர்ஸ் நிதி குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்ப முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், மனுதாரரின் முக்கிய கேள்வியை உச்சநீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. பிஎம் கேர்ஸுக்கு மத்திய பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும், கொரோனாவை எதிர்த்துப் போராட மக்களிடமே பிஎம் கேர்ஸ் நன்கொடை பெற்றது என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்திய மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வருடாந்திர தணிக்கையை முடிக்கும் முன்பாக, பிஎம் கேர்ஸின் நிதி பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை வெளியிடுவதையாவது, உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தின்போது, தங்களிடம் இருந்து பெற்ற நன்கொடையை, தங்களுக்கே அரசு எப்படி பயன்படுத்துகிறது என்பது குறித்து தெளிவாகவும், விரைந்தும் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.