உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிப்பின் 3 வது கட்டத்தை இன்னும் 10 நாட்களில் தொடங்க இருப்பதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த மருந்துக்கு ஸ்புட்னிக் வி என்று பெயரிட்டுள்ள ரஷ்யா, முதல்கட்ட உற்பத்தியை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் பிள்ளையார் சுழி போட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. 9 மாதங்களாகியும் எந்த நாடும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது.
இதற்கிடையே, கொரோனா வைரஸை குணப்படுத்த பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பல கட்டங்களாக பரிசோதித்து இந்த மருந்தை வெளியிட இன்னும் ஓராண்டு ஆகலாம் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. பொருளாதார ரீதியாக பல மாதங்கள் முடங்கிக் கிடக்கும் அரசுகளுக்கும், தனிநபர்களுக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டு வரை தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில்,கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா முதல்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த மருந்துக்கு ‘ஸ்புட்னிக் வி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 1957 ஆம் ஆண்டு மாஸ்கோவிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்கலமான ‘ஸ்புட்னிக் வி’ யின் பெயர்தான் கொரோனா மருந்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும், எய்ட்ஸ் நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கமேலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தான் இந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது..
இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கின்ட்ஸ்பெர்க் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆராய்ச்சியின் பதிவுக்குப் பிந்தைய முதல் கட்ட முடிவை திங்கள்கிழமை (இன்று) வெளியிட உள்ளோம். முதல் கட்ட கண்டுபிடிப்புக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தபின், இன்னும் 10 நாட்களில் 3 வது கட்ட பணிகள் தொடங்கும். இந்தப் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடவுள்ளனர். மாஸ்கோவிலேயே இந்த ஆராய்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் கட்ட மருந்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகளுடன் காணொலி வழியாக நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, கொரோனா வைரஸுக் கு எதிரான முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது குறித்த அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் விலாடிமீர் புதின் வெளியிட்டார்.
ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கையல் முரஸ்கோ கூறும்போது, ” ரஷ்யாவில் இதுவரை 9 லட்சத்து 17 ஆயிரத்து 884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்து 29 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், முதலில் ரஷ்ய மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை முழுமையாக பயன்படுத்திவிட்டு, அதன்பிறகு, மற்ற நாடுகளுக்கு ரஷ்யா அனுப்பும். ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து சக்தி வாய்ந்தது இல்லை என்று எழுப்பப்படும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை” என்று குறிப்பிட்டார்.