பி.எம். கிசான் பயனாளிகளில் 30 ஆயிரம் தகுதியற்றவர்கள் ரூபாய் 2 ஆயிரம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளதே ?
ஏழை விவசாயிகளுக்கான இந்த திட்டத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஏறத்தாழ ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது தற்காலிகமாக பி.எம். கிசான் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பரவலாக இத்தகைய முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அதிகாரியின் வங்கிக் குறி எண் திருடப்பட்டு போலி பயனாளிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 1.79 லட்சம் பேர் கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 2 ஆயிரம் பயனாளிகள் பெற்றுள்ளனர். இதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதால் விவசாய துணை இயக்குநர் மூலமாக விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பொதுவாக தமிழக அரசின் திட்டங்கள் பயனாளிகளிடம் போய்ச் சேருவதற்கு முன்பாக ஆளுங்கட்சியின் ஆதரவான இடைத்தரகர்கள் மூலம் நடத்தப்படுகிற பகல் கொள்ளைக்கு பி.எம். கிசான் பயனாளிகள் போர்வையில் ஊழல் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஊழல் கறை மேலும் படிந்துள்ளதையே இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அன்னை சோனியா காந்தி வலியுறுத்தியிருக்கிறாரே ?
சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை ஒழித்துக்கட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். வளர்ச்சி என்ற போர்வையில் சுற்றுச்சூழலை அடிக்கடி தியாகம் செய்ய முடியாது. முன்னேற்றம் தேவை தான். ஆனால், அத்துமீறாத வகையில் அதற்கு எல்லை இருக்க வேண்டும். இந்த பா.ஜ.க. அரசு கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை அழித்து விட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தெளிவான கருத்துக்களோடு வலியுறுத்தியிருக்கிறார். எதிர்கட்சிகளின் கருத்தை எப்போதும் புறக்கணிக்கிற மோடி அரசு, சுற்றுச்சூழல் விஷயத்திலாவது பரிசீலனை செய்யுமா ?
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு விதித்த தடையை மீறப்போவதாக இந்து முன்னணி அறிவித்திருப்பது சரியா ?
பா.ஜ.க. ஆதரவு பெற்ற ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற வகுப்புவாத சக்திகள் தடையை மீறுவதை தங்களது கொள்கையாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காலத்திலும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுத்தி வழிபடுவோம், தடையை மீறுவோம் என்று இந்து முன்னணி அறிவித்திருப்பது சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமாகும்.
கொரோனா பரவலை தொடர்ந்து பொது இடங்களில் சிலைகளை வைக்கவோ, விநாயகர் ஊர்வலங்கள் நடத்தவோ விதிக்கப்பட்டிருக்கிற தடையை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடலாம். இதை தவிர்த்து விட்டு கொரோனா பரவலைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. பொது ஊரடங்கு தடையை மீறுவோம் என்று கூறுவதை விட ஒரு அராஜக செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
நடிகர் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடுத்துள்ளதே ?
பாவம்! வழக்கு தொடுத்த கவலையை விட நமக்காக தமிழக பா.ஜ.க.வினர் எவரும் ஆதரவாக ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்கிற அதிர்ச்சி தான் அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஊடக வெளிச்சத்திற்காக அதிகபிரசங்கித்தனமாக பேசுபவர்கள் இவரைப் போன்ற மாரிதாஸ், கிஷோர் கே. சாமி போன்றவர்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவர்களின் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டால் மதநல்லிணக்கம் சீர்குலைந்து பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தைப் போல தமிழகத்திலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் கொரோனாவை ஒழிக்க தெளிவாக வழிமுறைகளை கூறியுள்ளாரே ?
புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் கொரோனாவை ஒழிப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் ஒன்று அதிகமாக பரிசோதிப்பது, மற்றொன்று தொடர்புகளை கண்டறிவது, மூன்றாவது நோயாளிகளை தனிமைப்படுத்துவது என்று கூறியிருக்கிறார். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும் அவர் கூறுகையில் பொது ஊரடங்கு என்பது கொரோனாவை ஒழிப்பதற்கு நிரந்தர அணுகுமுறையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியதோடு, வீட்டில் தனிமைப்படுத்துவது குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களை பாதிப்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 140 நாட்கள் ஆகியும் கொரோனா தொற்று அதிகரித்து பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு மக்கள் வாழ்வாதாரம் குன்றியது தான் இதுவரை நிகழ்ந்திருக்கிறது. எனவே, பொது ஊடரடங்கு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமநீதியை உருவாக்கியுள்ளதாக அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றிருக்கிறதே ?
பிரதமர் ஜவஹர்லால் நேரு எடுத்த முயற்சியால் 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டம் அன்றைய மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி இச்சட்டத்தில் 2005 ஆம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து 2016, 2018 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்தப் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சில கருத்துக்களை நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தினத்தந்தி நாளேடு எழுதிய தலையங்கத்தில், ‘ஒரு மகள் எப்போதுமே ஒரு அன்பான மகளாகவே இருப்பாள். ஒரு மகன் அவனுக்கு திருமணம் ஆகி, மனைவி கிடைக்கும் வரை மகனாக இருப்பார். ஆனால், ஒரு மகள் தன் வாழ்நாள் முழுவதும் மகளாகவே இருப்பாள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டதை வெளியிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் ஆண், பெண் என்ற வித்தியாசத்திற்கு, பாகுபாட்டிற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை குறித்து கேரளாவில் 1975லும், ஆந்திரபிரதேசத்தில் 1986லும், தமிழ்நாட்டில் 1989 லும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 1994 லும் சட்டங்கள் இயற்றி முன்னோடி மாநிலங்களாக திகழ்கின்றன. இதன்மூலம் பெண்கள் தற்சார்புடன் வாழ தந்தையின் சொத்தில் சமஉரிமை பெற மிகப்பெரிய வாய்ப்பு சட்டத்தின் முன் கிடைத்திருக்கிறது. பல குடும்பங்களில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை மறுக்கப்பட்டு வந்த அநீதியை உச்சநீதிமன்றத்தில் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.
அசோக் கெலாட் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறாரே ?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அசோக் கெலாட் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கட்சியைச் சேர்ந்த 17 பேர் ஆதரிக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்களோ 72. அசோக் கெலாட், சச்சின் பைலட் கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டி பகல் கனவு கண்டது. ஆனால், இந்த சதியை தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்காவும் உரிய நேரத்தில் தலையிட்டு சச்சின் பைலட் மற்றும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசி சுமூகமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வெற்றிச் சின்னங்களை தமது கைகளை உயர்த்தி ஊடகங்களுக்கு காட்டியுள்ளனர்.
கர்நாடகா, கோவா, மத்தியபிரதேசத்தில் குதிரைபேர அரசியல் நடத்தி, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.விற்கு ராஜஸ்தானில் சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக 509 செவிலியர்கள் பாதிக்கப்பட்டதோடு, 20 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளதே ?
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் இந்த நாடே பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும். தங்களது உயிரை துச்சமென கருதி, கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களுக்கு மத்திய – மாநில அரசுகள் ஊக்கத்தொகையாக நிறைய வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள், தங்குவதற்கு வசதி, உணவு ஆகியவற்றை எவ்வித தடையுமின்றி வழங்க வேண்டும். கொரோனா நோயாளிகள் மீது எந்தளவு அக்கறை காட்டுகிறோமோ, அதற்கு சற்றும் குறையாமல் இவர்களிடம் காட்ட வேண்டும். உயிரிழந்த 20 செவிலியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக பெருமளவில் வழங்குவதற்கு மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கோபால் தாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதே ?
80 வயதான கோபால் தாசுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்த இவருக்கு தொற்று ஏற்பட்டதால் மோடி தனிமைப்படுத்தப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ராம பிரானின் கருணையும், அன்பும் கோபால் தாசுக்கு கிட்டாதது அனைவருக்கும் ஏமாற்றத்தையே தருகிறது.
இந்திய தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றிருக்கிறாரே ?
இந்தியத் தாய் என்பதை விட, தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணத்தில் பிறந்த தாய்க்கு பெண்ணாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக முதல் கருப்பரும், பெண்ணாகவும் இருப்பதும் இவரே. 55 வயதான இவர் அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் அமெரிக்க மக்களின் ஆதரவை பெற்றதோடு, தமிழக மக்களின் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு யார் முதலமைச்சர் என்பது குறித்து அ.தி.மு.க.வில் உச்சகட்ட மோதல் ஆரம்பித்து விட்டதே ?
தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாகவும், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றவர்கள் அதை எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை முருகனை பார்த்து சிரித்தார் என்ற பாவத்திற்காக அந்த பதவியில் இருந்து அன்று செல்வாக்கு கொண்டவராக கருதப்பட்ட சசிகலாவால் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சசிகலாவிற்கு தண்டனை அளித்து சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டதும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா தேர்வு செய்தார். அந்த வகையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே அரசியல் விபத்தின் மூலமாகவே முதலமைச்சர் ஆனார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்ற அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் ஆட்சியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக அ.தி.மு.க.வில் செயற்கையான ஒற்றுமை நிலவுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க உச்சக்கட்ட மோதல்களை காணலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதும் அக்கட்சி பல கூறுகளாக சிதறிப்போகிற நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் அ.தி.மு.க. மீண்டும் சசிகலாவின் கைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். இது நடக்காது என்று எவரும் கூற முடியாது.