அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் ஜோ பிடன் 2 மாதங்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரீஸை பிடன் அறிவித்தார்.
கமலா ஹாரீஸின் தாய் சியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மார்பக புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளரான சியாமளா கோபாலன், மேல்படிப்புக்காக கடந்த 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஜமைக்காவுக்கு சென்றார். அப்போது, கமலா ஹாரீஸின் தந்தையும் பொருளாதார நிபுணருமான டொனால்டு ஹாரீஸும் சியாமளாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை கமலா ஹாரீஸ் பெற்றார். தற்போது அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தெற்காசிய பாரம்பர்யத்தைக் கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.
17 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் கமலா ஹாரீஸ் படிப்படியாக உயர்ந்து மக்களின் பேராதரவை பெற்றவர். இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் கமலா ஹாரீஸ் கவர்ந்துள்ளார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவரின் கழுத்தில் காலை அழுத்தி பொதுமக்கள் முன்னிலையிலேயே படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய இனவெறி கொண்ட அமெரிக்காவில் கறுப்பின பெண் ஒருவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கமலா ஹாரீஸை தேர்வு செய்ததன் மூலம் 45 லட்சம் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரத்தை மனதில் வைத்து பிடன் எடுத்த முடிவு என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அமெரிக்க தேசிய நீரோட்டத்தில் இந்திய வம்சாளியினர் நீண்டகாலம் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்த குறையை கமலா ஹாரீஸை நியமித்ததன் மூலம் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் போக்கியுள்ளார்.
அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பெற்றோரின் மகளான கமலா ஹாரீஸ், அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் சேர்ந்து, அதிபர் ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றப் போராடுவது, கமலாவின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கையே அதிபர் ட்ரம்பின் அடையாளமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
“அமெரிக்காவில் தன் இரு மகள்களும் கறுப்பினக் குழந்தைகள் என்ற முறையில் நல்லபடி நடத்தப்படுகிறார்களா? அல்லது மோசமாக நடத்தப்படுகிறார்களா ? என்பது பற்றி என் தாயாருக்கு நன்கு தெரியும். இருந்தாலும், எங்களை அவர் நமது இந்திய கலாச்சாரத்தின்படி, பெருமையுடனேயே வளர்த்தார். இதிலிருந்து என் தாயார் ஒருபோதும் விலகிச் சென்றதில்லை…” என சமீபத்தில் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார் கமலா ஹாரீஸ்.
அமெரிக்காவின் உயர் பதவியை நமது தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் பெறுவதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டுள்ளது. இனவாதத்தை முகமாக கொண்ட அமெரிக்காவில், பிறந்து, வளர்ந்து, படித்து, மக்கள் சேவையில் ஈடுபட்டு, துணை அதிபர் வேட்பாளர் என்ற இலக்கை அடைய அவர் சந்தித்த அவமானங்களும், தடைகளும் கணக்கில் அடங்காது.
அத்துனை தடைகளையும் தகர்த்துவிட்டு புன்சிரிப்போடு வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க புயலாக புறப்பட்டுவிட்ட கமலா ஹாரீஸை, இந்தியர், தமிழர் என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடியபடியே வாழ்த்துவோம்.