இந்துத்வாவின் தந்தை என வலதுசாரிகளால் அழைக்கப்படும் வினாயக் சாவர்கரை பாரத் ரத்னா விருதால் அபிஷேகம் செய்ய பா.ஜ.க விரும்புகிறது. இதற்கு அவர் தகுதியானவர்தானா?. பிரிட்டிஷ் கைக்கூலியாகவா? ஹிட்லரின் அபிமானியாகவா? எந்த அடிப்படையில் அவர் பாரத் ரத்னா விருது பெற தகுதியானவர்?
சாவர்கரின் உண்மை முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இந்த கட்டுரை தொடங்குகிறது…
சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்தமான் சிறையில் பிரிட்டிஷாரால் அடைக்கப்பட்டிருந்த சாவர்கர், பிரிட்டிஷாரிடம் கெஞ்சிக் கூத்தாடி விடுதலையானார். அதன்பிறகு கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொ டுத்தார். இதனையடுத்து அந்தமான் சிறையிலிருந்து புனே சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு, 1924 ஆம் ஆண்டு, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.
மற்ற கைதிகள் எல்லாம் நாட்டின் சுதந்திரத்துக்காக சிறையில் வாடியபோது, தான் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிய பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர்தான் இந்த சாவர்கர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான பெரிய இயக்கத்தை புறக்கணித்துவிட்டு, கடைசி வரை பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தவர்தான் இந்த சாவர்கர்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை, இரு நாடு கோட்பாடாக முகமது அலி ஜின்னா முன்வைத்த நேரம் அது. இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி சியாமா பிரசாத்தைப் போல், சாவர்கரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் இரு நாடு கோட்பாட்டை வெறுக்கவில்லை. 1937 ஆம் ஆண்டு இந்து மகாசபையின் தலைவராக சாவர்கர் இருந்தபோதே, இந்துக்கள் ஒரு பிரிவாகவும், முஸ்லீம்கள் மற்றொரு பிரிவாகவும் இந்தியாவுக்குள்ளேயே இரண்டு நாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். இரு நாட்டுக் கொள்கையை சில ஆண்டுகளில் முகமது அலி ஜின்னாவே கைவிட்டுவிட்டார். இது குறித்து சாவர்கர் ”ஜின்னாவுடன் எனக்கு சண்டை ஏதும் இல்லை. நாங்கள் இந்துக்கள். இந்த நாடு எங்களுடையது. இருந்தாலும், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனியே நாடுகள் இருப்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கும்” என்றார்.
பிரிட்டிஷாரிடம் சரணடைந்த, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத, இரு நாட்டு கொள்கையை வெளிப்படுத்திய சாவர்கருக்குத்தான் பாரத ரத்னா விருது அளிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
சுதந்திரம் அடைந்தபிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் அமைப்பான பாரதிய ஜனசங்கமும் சாவர்கரிடம் இருந்து விலகியே இருந்தன. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ அல்லது ஜனசங்கத்திலோ சாவர்கர் உறுப்பினராக இருந்ததில்லை.)
1990 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் இந்துத்வாவை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. பயன்படுத்தத் தொடங்கியபோது, இந்துத்வா அடையாளத்தைப் பெறுவதற்காக, சாவர்கரை பா.ஜக. பயன்படுத்தத் தொடங்கியது.
பாசிச மற்றும் நாஜிசத்தின் ரசிகராக இருப்பவருக்கு, இந்தியாவின் பாரத ரத்னா விருதை வழங்க விரும்புகிறார்கள். நேரு எதிர்த்த அடாஃப் ஹிட்லரையும், பெனிடோ முசோலினியையும் ஆதரித்த சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்புகிறார்கள்.
தனது வாழ்நாளின் இறுதியில் மதப் பெரும்பான்மை குறித்து சாவர்கர் பேச ஆரம்பித்தார். ‘தந்தை பூமி’ என்றும், ‘புனித பூமி’ என்று இரண்டாகப் பிரித்தார். இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் மற்றும் புத்த மதத்தினர் மட்டும் இந்தியர்கள் என்று புத்திசாலித்தனமாக கூறிவிட்டு, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித பூமி மத்திய கிழக்கு நாட்டில் இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வெளியாட்கள் என்பதை சாவர்கர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இதன்படி, தற்போது பெரும்பான்மை அரசியலை நோக்கி நாட்டை பா.ஜ.க. வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
1969 ஆம் ஆண்டு நீதிபதி ஜீவன் லால் கபூர் அளித்த அறிக்கையில், மகாத்மா காந்தி படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என சாவர்கரை அடையாளம் கண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறிக்கை மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதை உறுதி செய்த அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமராக இருந்த நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ”சாவர்கரின் தலைமையின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் மகாத்மா காந்தியை படுகொலை செய்வதற்கான சதித் திட்டத்தை தீட்டியது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாடு ஈடுபட்டு வரும் நிலையில், இப்பேற்பட்ட சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸிடம் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலை திருடிக் கொண்டு, அவருக்கு சிலை வைத்துள்ளது பா.ஜ.க. சிலை வடிவாக இருக்கும் பட்டேல், பா.ஜ.க. தலைமையிலான இந்தியாவின் ஒற்றுமை குறித்து நினைத்து சிரிப்பார். அதோடு, மகாத்மா காந்திக்கு 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில், சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்படுவது குறித்தும் நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பார்.