இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..? அதில் எத்தனை எளிய மனிதர்களை பலி கொடுக்கப் போகிறோமோ…?
மூணாறு மலைச் சரிவில் சுமார் 80 தொழிலாளர்கள் புதைந்து போன நிலையில் இன்னும் பாதி உடல்கள் கூட மீட்கப்படவில்லை!
மனிதர்களின் பொருளாதாரப் பேராசைகளால் மலைகளெல்லாம் சூறையாடப்பட்டு உருவானவை தாம் தேயிலைத் தோட்டங்கள்!
எத்தனையெத்தனை ஆயிரம் அபூர்வமான மூலிகை செடிகள்,மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டும், விலங்குகள், பறவைகளின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டும் இயற்கையை பலி கொடுத்து உருவானவை இந்த தேயிலை தோட்டங்கள்….!
முதன்முதலில் 1832 ல் நீலகிரி மலையின் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை பயிட்ட பிரிட்டிஷார்,பிறகு கேரளாவில் மூணாறில் 1890ல் சுமார் 1,37,000 ஏக்கரில் தேயிலை தோட்டத்தை ஸ்தாபித்தனர்! அன்று முதல் இன்று வரை முதல் தரத் தேயிலையை வெளி நாட்டுக்காரன் தான் அனுபவிக்கிறான் என்பதை விடவும், நம் நாட்டின் உணவு கலாச்சாரமும் அல்லவா முற்றிலும் மாறிப் போனது!
செம்பருத்தி பூ,ஆவாரம் பூ…போன்ற எத்தனையெத்தனையோ இயற்கையான மலர்களை பறித்து காய்ச்சி வடிகட்டி கருப்பட்டி கலந்து குடித்த நம் ஆரோக்கியமான பாரம்பரிய இயற்கை தேனீர் கலாச்சாரம் நம்மிடமிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டதே…!
இந்த தேயிலை தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்கள் நிலையோ மிகப் பரிதாபகரமானது! அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் போது ரத்தத்தை உறிஞ்சும் அட்டைக் கடி,விஷப் பாம்புக் கடி,யானை, சிறுத்தைகளின் தாக்குதல்களில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் அனேகம்! கொட்டும் மழை,கடும் பனி,அடிக்கடி நிலச்சரிவு என்ற துயரங்கள் வேறு! இதில் செத்துமடிவது கேட்பாரற்ற ஏழைகள்!
இவர்களின் கைகள் தேயிலை தளிர்களை பறித்துப் பறித்து ரணமாகி,ஒருவிதமாக காய்ந்து முரடாக இருக்கும்! குறைந்த கூலி,கடின வேலை என்ற நிலையில் பலர் தாக்குபிடிக்கமுடியாமல் வேலையை விட்டு சென்றாலும் பசிக் கொடுமையின் விளைவாய் கோடீஸ்வர எஸ்டேட் முதலாளிகளுக்கு கூலிஆட்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்!மேலும் இவை சுற்றுலா தளங்களாகவும் மாறியதையடுத்து அங்கே ஏராளமான கட்டிடங்கள் தாறுமாறாக அதிகரித்துவிட்டன.
கண்ணைப் பறிக்கும் இந்த தேயிலை தோட்ட அழகுகளுக்கு பின்னால், நாம் கவனிக்க தவறிய கண்ணீரை வரவழைக்கும் துயரங்களின் சாட்சி தான் சமீபத்திய இந்த மலைச் சரிவு மரணங்கள்!
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)