அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி, காணொலி காட்சி வாயிலாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:
எங்களுக்கு வேலை கொடு என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இந்திய இளைஞர் காங்கிரஸின் முயற்சிக்கு தோள் கொடுக்கவும், இணைந்து செயல்படவும், ஆதரவு தரவும் இதயப்பூர்வமாக விரும்புகின்றோம்.
இதுவெறும் கோஷங்களை எழுப்பும் பிரச்சாரம் அல்ல. இந்திய குடியரசின் 75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கண்ணீரும்,வலியும் நிறைந்த வேலையில்லா திண்டாட்டத்தின் அடையாளமாகவே இளைஞர் காங்கிரஸின் பிரச்சாரம் அமைந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வேலை வாய்ப்பின்மை 4.9 சதவீதமாக இருந்தது. 2020 மே மாதம் இறுதியில் வேலை வாய்ப்பின்மை 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி குழம்பிப் போயிருந்த காலத்தில், வேலை வாய்பின்மை விகிதம் ஸ்திரமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஊரடங்குக்கு முன்பு 8.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை கடந்த மே 19 ஆம் தேதி கூடுதலாக 7.1 சதவீதம் அதிகரித்தது. இதுபோன்று வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஒரேயடியாக உயர்ந்தது இல்லை. ஆனால், உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி 7.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது தான் வேலை வாய்ப்பின்மையை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் பொது ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கி வேலை இழப்பு ஏற்பட்டதில் இந்தியா முதலிடத்தை பெற்றிருக்கிறது. மே மாத நிலவரப்படி வேலை வாய்ப்பின்மை விகிதம் பிரேசில் நாட்டில் 12.6 சதவிகிதம். அமெரிக்காவில் 13.3 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் மோடி ஆட்சியில் 23.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் கொரோனாவும் ஒழியவில்லை, வேலை வாய்ப்பு இழந்தது தான் மிச்சம்.
இந்தியாவில் முதன்மையான துறைகள் என 8 துறைகளை குறிப்பிடுவார்கள். அதிக வேலை வாய்ப்பையும், உற்பத்தியையும் வழங்கும் இரும்பு, நிலக்கரி, மின் உற்பத்தி, சிமெண்ட், கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, உரம் ஆகிய 8 துறைகளில் உர தயாரிப்பு தவிர, அனைத்து துறைகளுமே கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வேலை வாய்ப்பை அதிகமாக வழங்கக் கூடிய கட்டுமான தொழில் முடங்கி விட்டது. இதில் 90 சதவிகித தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன.
உலக நாடுகளில் இந்தியா வாகன உற்பத்தியில் முன்னணிப் பங்கு வகித்து வந்தது. கார் உற்பத்தி நிறுவனமான மாருதி இதுவரை நஷ்டத்தை அடைந்ததில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நஷ்டம் ரூபாய் 249 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் மாருதி நிறுவனம் பெற்ற லாபம் ரூபாய் 1435 கோடி. அதேபோல, பி.எம். கேர்ஸ் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கிய டாடாவின் கார் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பொதுவாக, விவசாயம் தவிர அனைத்து துறைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
வரி வசூல் 46 சதவீதமாக குறைந்துள்ளது. 12 கோடி பேர் வேலை இழந்து பரிதாப நிலையை எட்டியுள்ளதாக, அச்சு ஊடகங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிர்வாகத்தை தவறாக கையாண்டதால், 40 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்கள். வேலைவாய்ப்பின்மை சதவீதமும், கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 53 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை இது காட்டுகிறது. ஏனென்றால், நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 53 சதவீதம் என்பது மிக மிக குறைவானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த விவரமும், இளைஞர் காங்கிரஸின் முக்கிய பிரச்சாரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.