மசூதியின் மையப்பகுதியில் ராமர் சிலை வைக்கப்படும் வரை, பாபர் மசூதி சட்டப்பூர்வமான மசூதியாகவே இருந்தது. முஸ்லீம்களை தங்கள் வழிபாட்டு தலத்திலிருந்து சட்டப்படி அதிகாரிகள் யாரும் வெளியேற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தகைய கருத்துகள், முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் அளிக்க வேண்டும் என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், பிரச்சினைக்குரிய இடம் தங்களது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது. மசூதி இடிப்பு சட்டவிரோதம் என் கூறிக்கொண்டே, இந்துக்களுக்கு ஆதரவாகவும், ராமர் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை என்ன சொல்வது?
கோயிலை இடித்துவிட்டே பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதியின் மத்திய பகுதியில் தான் கடவுள் ராமர் பிறந்தார் என்பது இந்துமத ஆதரவாளர்களின் கருத்து. ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லையென உச்சநீதிமன்றம் 2019 தீர்ப்பில் உறுதிபட கூறியுள்ளது.
இரண்டாவதாக, வரலாறு, கலாச்சாரம் மற்றும் தேசியத்தின் அடிப்படையில் பாபர் மசூதியை முகலாய பேரரசர் பாபர் கட்டியதாக முஸ்லீம்கள் உரிமை கோருகின்றனர். ஆனால், இந்து அமைப்புகளோ மசூதிகளை எல்லாம் கோயில்களாக மாற்றும் வரை ஓயமாட்டோம் என்று சூளுரைத்தனர். கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இன்றுவரை இல்லை என்பது தான் உண்மை.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை கடந்த 2003 ஆம் ஆண்டு பாபர் மசூதி கட்டிடத்தின் கீழ் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்களான சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் ஆகியோர், இதனை கடுமையாக மறுத்தனர். பாபர் மசூதி கட்டுமானத்துக்கு கீழே மசூதிகளின் கட்டுமானம் இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே உள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் வர்மா மற்றும் மேனனின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுவதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த 400 ஆண்டுகளில் பாபர் மசூதி மாற்றம் பெற்றதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் ஆணித்தரமாக கூறியது. உச்சநீதிமன்றம் கூறியதுதான் உண்மை என்று ஒட்டுமொத்த இந்தியர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான்… ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்து முடிந்திருக்கிறது.
1949 ஆம் ஆண்டு அயோத்தியாவில் ராமர் சிலையை வைத்ததும், 1992 ஆம் ஆண்டு மசூதியை இடித்ததும் சட்டவிரோதம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை இத்தருணத்தில் மனதில் கொள்வோம் !