தந்தையின் சொத்தில் மகன்களைப் போல, மகள்களுக்கும் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுச் சட்டத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டாலும், அதற்கு முந்தைய காலத்திலிருந்தே இந்த சட்டத்தின்படி மகள்கள் சொத்துரிமை கோர முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுடன் பணியாற்றும் ‘சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ்’ சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் ரிஷப் ஷராப் அளித்த பதில்கள்:
2005 திருத்தம் என்ன சொல்கிறது?
வாரிசுதாரர்களான மகன்களுக்கும் மகள்களுக்கும் தந்தை சொத்தில் சம உரிமை அளிக்கும் வகையில், கடந்த 2005 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, மகன்களுக்கு மட்டுமே சொத்துரிமை அளிக்கப்பட்டு வந்தது.
வாரிசுதாரர் என்பவர் யார்?
பிறப்பால் வாரிசு உரிமை பெற்றவர், தந்தையின் சொத்துகளைப் பெற உரிமை உண்டு. சொத்து பிரிப்பை அவர் எந்நேரமும் கோரலாம்.
இதில் என்ன குழப்பம் இருந்தது. தற்போது எவ்வாறு அது தீர்க்கப்பட்டுள்ளது?
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட சமயத்தில், தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே, மகள்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க முடியும் என திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகன்களுக்கும் மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுத்தபோதிலும், தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற அளவீடு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு வரும்வரை குழப்பம் நீடித்துக் கொண்டிருந்தது. தந்தையின் சொத்தில் மகன்களைப் போலவே, மகள்களும் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே சொத்தில் சம உரிமை கோர முடியும் என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்தன் மூலம் குழப்பம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பிறந்தவுடனேயே தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் தற்போது தெளிவாகியுள்ளது. சட்ட திருத்தம் கொண்டு வரும்போது, தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே மகள்கள் சொத்துரிமை கோர முடியும் என்பதற்கு பதிலாக, மகள் பிறந்தது முதலே சொத்துரிமை கோர அவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகள் என்ன?
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்கு முன்பு சொத்து பிரிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே நிபந்தனைகளின் அடிப்படையில் இது பொருந்தும். நீண்ட காலம் தந்தையிடமே சொத்து இருக்கும் பட்சத்தில், அந்த சொத்து பங்கு பிரிக்கப்படாமல் இருந்தால், அந்த சொத்துக்கு மகள்கள் தற்போது உரிமை கோர முடியும்.
இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள வகைகள் என்ன?
இந்த தீர்ப்பு மூலம் தந்தை மட்டுமே சொத்துரிமை தருவது குறித்த முடிவு எடுப்பவராக இருப்பார். இரண்டாவது வகை, சொத்துரிமை யாருக்கும் கொடுக்க இயலாத, தந்தையின் சொத்தை பங்கு பிரித்து கொடுக்க உரிமை இல்லாதவரான குடும்பத்தலைவரின் மனைவி சொத்துகளை அனுபவிப்பராக மட்டுமே இருப்பார்.
இப்போது மகள்கள் என்ன செய்யவேண்டும்?
தந்தையின் வாரிசுகளாக மகன்கள் கருதப்பட்டதைப் போல், மகள்களும் இப்போது கருதப்பட வேண்டும். தந்தையின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை உள்ளது. மகளின் திருமண வாழ்க்கை, இந்த சட்ட திருத்தத்தில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உரிமையை பாதிக்காது. எனவே திருமணத்துக்குப் பிறகும் தந்தையின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டு.
இந்த தீர்ப்பு குடும்ப விவகாரங்கள் மற்றும் மற்றவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்து கூட்டுக் குடும்பத்துக்குத் தான் இந்த தீர்ப்பு பொருந்தும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் தனிப்பட்ட அல்லது அவரது சொந்த சொத்துகளுக்கு பாதிப்பு வராது. உண்மையிலேயே, பெரும்பாலான வசதிமிக்க குடும்பங்களில் உள்ள சொத்துகள், தனிப்பட்ட செல்வங்களாக, ஆணாதிக்க அல்லது தனிப்பட்ட பெயர்களில், தனியார் அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களின் பெயரிலேயே உள்ளன.
பழைய வணிகக் கூட்டுக் குடும்பங்களில் சில மூதாதையர் செல்வங்களை தொடர்ந்து வைத்திருக்கலாம். ஆனால், அத்தகைய பங்குகளின் அளவு மற்றும் பொருள் பொதுவாக குறைவாகவே இருக்கும். ஏறக்குறைய எந்த வணிக குடும்பமும் புதிய கூட்டுக் குடும்பங்களை உருவாக்கவில்லை. தற்போது பெரும்பாலான கூட்டுக் குடும்பங்கள் கலைக்கப்படுவதுதான் உண்மை.